நன்றி கூறுங்கள்!

Published By: Nanthini

26 Jul, 2022 | 01:37 PM
image

டி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அதேபோல் வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களை நாம் கொண்டுவந்தால் தன்னம்பிக்கை தானாகவே அதிகமாகிவிடும்.

1960ஆம் வருட காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்த ஒரு கார் சோரூமில் ஜோச் இராட் என்கின்ற விற்பனையாளர் வேலை செய்தார்.

அந்த ஷோ ரூமில் ஒவ்வொரு வாரமும் எந்த விற்பனையாளர் அதிகமான கார்களை விற்பனை செய்கிறாரோ அவரது பெயர் அறிவிப்பு பலகையில் எழுதப்படும்.

அந்த பெயர்ப் பலகையில் ஒரு வாரமாவது தனது பெயர் இடம்பெற வேண்டுமென ஆசைப்பட்டு அதற்காக கடினமாக உழைத்தாலும் அதற்கான வாய்ப்ப ஜோச் இராட்டுக்கு மிகவும் குறைவாகவே கிடைத்தது.

இவரைவிட அனுபவம், திறமை வாய்ந்த விற்பனையாளர்கள் இருந்தமையால் அவர்களுடன் இவரால் போட்டியிட முடியவில்லை.

ஒரு நாள் தனது முதலாளியிடமே சென்று எதனால் என்னால் அந்த அறிவிப்பு பலகையில் இடம்பிடிக்க முடியவில்லை என்று கேட்டார்.

அதற்கு அந்த முதலாளி, “நல்ல விற்பனையில் இருக்கும் நிறைய கார்களை விற்பனை செய்தால், உனது பெயர் அதில் வந்துவிடும். ஆனால், அதற்கு கொஞ்சம் தனித்தன்மையோடு இருக்கவேண்டும்”

ஜோச் இராட்டும் தனது தனித்தன்மை என்ன என்பதை யோசித்தார். ஆனால் அவருக்கு எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை.

குழப்பத்துடனேயே பக்கத்திலிருக்கும் கோப்பிக் கடைக்குச் சென்றார். பல வகையான கோப்பிகளுக்கு மத்தியில் நமக்கு விருப்பமான கோப்பி வகையை சொன்னால் அது கிடைக்கும்.

ஜோச் இராட் குழப்பத்தில் இருந்ததால் தனக்கு என்ன கோப்பி கலவை வேண்டுமென்பதை தெளிவாகக் கூறவில்லை. ஆனால் அந்தக் கோப்பி கவுண்டரில் இருந்த நபர் இவருக்கு தேவையானதை மிகச் சரியாகக் கொண்டு வந்து கொடுத்தார். இவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

அந்த நபரைப் போய் சந்தித்து “நான் இதைத்தான் குடிப்பேன் என எப்படி உங்களுக்குத் தெரியும்” என்றார்.

அப்போது அந்த நபர், “உங்களை எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது. கிட்டத்தட்ட இரண்டு வருஷமா என் கடைக்கு வந்து கோப்பி குடிக்கிறீர்கள். ஒரு ‘நன்றி கூறும் நாள்’இல் உங்கள் கையால் எழுதிய வாழ்த்து அட்டையொன்றையும் கொடுத்தீர்கள். அதன் பின் உங்களை தனிப்பட்ட முறையில் பார்க்க ஆரம்பித்தேன். அதனால்தான் நீங்க என்ன கலவையில் கோப்பி குடிப்பீர்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.

இந்த இடத்தில்தான் ஜோச் இராட்டுக்கு தன்னுடைய தனித்தன்மை என்னவென்று புரிந்தது. அவருக்கு இயற்கையாகவே எல்லோருக்கும் மனமாற நன்றி சொல்லும் பழக்கமிருந்தது. அதுமாத்திரமின்றி ஒவ்வொரு ‘நன்றி கூறும் நாள்’ இற்கும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு வாழ்த்து அட்டையும் அனுப்புவார். இதையே ஏன் நமது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பக்கூடாது என்ற யோசனை வந்தது.

ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அவர் வந்து சந்திக்கும்போது தன்னுடைய டயரியில் குறிப்பு எழுதிக்கொள்வார். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு காரை வாங்கிச் சென்ற பின்னர் சரியாக ஒரு மாதத்துக்குள் ஜோச் இராட்டிடம் இருந்து ஒரு வாழ்த்து அட்டைச் செல்லும். அந்த வாழ்த்து அட்டையில் மனதை தொடுமளவுக்கு ஒரு செய்தி இருக்கும். இது எந்த விற்பனையாளரும் செய்யாத ஒரு காரியமாக இருந்தது. அதனால் வாடிக்கையாளர்களுக்கும் ஜோச் இராட்டுக்கும் தனிப்பட்டதொரு தொடர்பிருந்தது.

இதனால் அவரைச் சுற்றி ஒரு வாடிக்கையாளர் கூட்டமே சேர்ந்தது.

ஒரு கார் ஷோ ரூம் அறிவிப்பு பலகையில் தனது பெயர் வரவேண்டுமென எண்ணியவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலேயே இடம்பெற்றது.

ஒருமுறை உங்கள் வெற்றிக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் தானே காரணம் என கேட்டபோது, “நான் அனுப்பிய வாழ்த்து அட்டை காரணம் கிடையாது. என்னுடைய நன்றி உணர்வு. ஒவ்வொரு முறையும் அப்படி நன்றி எழுதும்போது மனசாற எழுதுவேன். அந்த நன்றி உணர்வே எனது வெற்றிக்கு காரணம்” என்றார்.

சிறிய மாற்றங்களை நமது வாழ்க்கையில் கொண்டு வந்தாலே அது பெரிய முன்னேற்றத்துக்கு வித்திடும். எனவே நன்றி சொல்லிப் பழகுங்கள்.

– பிருந்தா மகேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்