வெற்றி ரணிலுக்கா ராஜபக்ஷவினருக்கா ?

Published By: Digital Desk 5

24 Jul, 2022 | 01:35 PM
image

என்.கண்ணன்

“இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து, பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்த வெற்றியையும் தொலைத்து விட்ட துரதிஷ்ட தலைவராக அடையாளம் காணப்பட்ட ரணில் இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆகியிருக்கிறார்”

“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. இது கிரிக்கெட் போன்ற குழுப் பணி. இது ஒரு மரத்தானின் சகிப்புத் திறனைப் போன்றது. ரகர் போன்ற கடினமான விளையாட்டு. குத்துச்சண்டை போன்ற இரத்த விளையாட்டு”

“தங்களின் பதிலியாக ரணிலை வெற்றிபெற வைத்த ராஜபக்ஷவினர் முட்டாள்களில்லை. அவர்கள், அரசியல் ஓட்டத்தில் முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்”

அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவு அதனை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

2019 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், சஜித் அணி பிரிந்து போக, வெறிச்சோடிப் போன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை, வைத்துக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, அதே ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஒரு ஆசனத்தில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வியைத் தழுவினார்.

தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த ஒற்றை ஆசனம் தான் அவருக்கு அதிஷ்ட தேவதையாக வாய்த்திருக்கிறது.

இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து, கடைசியாக பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்த வெற்றியையும் தொலைத்து விட்ட துரதிஷ்டம்மிக்க தலைவராக அடையாளம் காணப்பட்ட ரணில் இப்போது – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

கோட்டா பாதி வழியில் துரத்தியடிக்கப்படுவார் என்று எவருமே எவ்வாறு  எதிர்பார்க்கவில்லையோ, அதுபோலத் தான், ரணில் ஜனாதிபதியாவார் என்று யாரும் கற்பனை கூட செய்யவில்லை.

ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்தாலும், ரணில் தனது சாணக்கியத்தின் மூலம், பிரதமர் ஆவார் என்று ஐ.தே.க.வின் தவிசாளர் வஜித அபேவர்த்தன, ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.

ரணில் அதிஷ்டவசமாக பிரதமர் ஆகிய பின்னர், பிரதமர் மட்டுமல்ல, ஜனாதிபதியாக கூட ரணில் பதவிக்கு வருவார் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் வார்த்தைகளை கொட்டியிருந்தார்.

அது ஒன்றும் அரசியல் வியூகத்தின்படி வெளிப்பட்ட கருத்தல்ல, உணர்ச்சிவசப்பட்டு வெளியானது. ஆனால், அதுவே இன்று உண்மையாகி இருக்கிறது.

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க பெற்ற வெற்றி உண்மையில் எப்படிக் கிடைத்தது?

ரணிலின் சாமர்த்தியமான நகர்வுகளின் வெற்றியா?

ராஜபக்ஷவினரின் தோல்விகளின் தொடர்ச்சியாக கிடைத்த வெற்றியா?

சஜித் பிரேமதாச இழைத்த தவறுகளினால் கிடைத்த வெற்றியா?

ராஜபக்ஷவினருக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டுவதில் எதிர்க்கட்சிகள் அடைந்த தோல்வியின் மூலம் கிடைத்த வெற்றியா?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், ரணில் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுத்தி பெற்ற வெற்றியல்ல இது. ராஜபக்ஷவினர் அவருக்கு போட்ட பிச்சை.

ரணில் வெற்றி பெற்ற பின்னர், சமூக ஊடகங்களில் அவரது பழைய காணொளித் துண்டு ஒன்று வைரலாகியது.

அதில், “அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. இது கிரிக்கெட் போன்ற குழுப் பணி. இது ஒரு மரத்தானின் சகிப்புத் திறனைப் போன்றது. ரகர் போன்ற கடினமான விளையாட்டு. குத்துச்சண்டை போன்ற இரத்த விளையாட்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் வரை, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ரணில் எந்த காய்நகர்த்தல்களையும் முன்னெடுத்திருக்கவில்லை. அவருக்கு இப்படியொரு வாய்ப்பு வரும் என்றும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் மட்டும் தான் அவரது கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினர்.

மஹிந்தவுக்குப் பின்னர் யார் என்ற கேள்வி வந்த போது தான், ராஜபக்ஷவினர் தங்களுக்கு பாதுகாப்பான ஒருவராக ரணிலை தேர்வு செய்தனர்.

மஹிந்தவின் பால்ய நண்பராக இருந்த ரணில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், ராஜபக்ஷவினருக்கு எதிரான விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிச் செல்ல விடாமல் பாதுகாத்தவர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவரை பிரதமர் ஆக்கியதன் மூலம், தங்களின் தேவைகளையும் நலன்களையும் நிறைவேற்றிக் கொள்ள ராஜபக்ஷவினர் முடிவு செய்தனர்.

அதற்குப் பின்னர் தான், ரணிலுக்கே, தன்னை வைத்து ஆடுகின்ற அரசியல் ஆட்டத்தின் போக்கு புரியத் தொடங்கியது.

அதற்குப் பின்னர் ராஜபக்ஷவினருக்கு இணையாக ரணிலும் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்தார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் அலைக்கு மத்தியில், நேரடியாக மொட்டு ஆட்சியை முன்னெடுக்க முடியாது.

அதனால் அவர்களுக்கு பதிலியான (Proxy) ஒருவர் தேவைப்பட்டார். அந்த தேவையை நிறைவேற்றிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்த வாய்ப்பாக, ஜனாதிபதி பதவியும் கிடைத்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுன, தனது கட்சிக்குள் இருந்தே இன்னொருவரை ஜனாதிபதி ஆக்கியிருக்க முடியும்.

ராஜபக்ஷவினரால் இப்போது ஜனாதிபதி ஆக முடியாது. அவ்வாறு செய்தால் கொந்தளிப்பு அதிகமாகும். 

பொதுஜன பெரமுனவுக்குள் ராஜபக்ஷவினர் அல்லாத ஒரு மாற்று தலைவரை தெரிவு செய்தால், அது கட்சிக்குள் புதிய தலைமைத்துவத்தை உருவாக்கி விடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.

அதனால் மீண்டும் ராஜபக்ஷவினர் ரணிலுக்குப் பின்னால் நிற்க முடிவெடுத்தனர். இது ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியைச் சுலபமாக்கியது. 

ரணிலைப் பொறுத்தவரையில், சந்திரிகா மற்றும் மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத போதும், இப்போது ராஜபக்ஷவினராலேயே அவருக்கு ஜனாதிபதி பதவி கிடைத்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் ரணில் பெற்றிருக்கின்ற வெற்றி- அவரது நீண்டகால ஜனாதிபதி கனவை நனவாக்கியிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் பல வாக்குறுதிகளை தட்டிக்கழிப்பதற்கு, மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்த நிறைவேற்று அதிகாரத்தைக் காரணம் காட்டினார்.

அவ்வாறு தட்டிக்கழித்த விடயங்களை ரணில் இப்போது நிறைவேற்ற முடியும். ஆனால் அவர் அதனை செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதேவேளை, ரணிலை வெற்றிபெற வைத்த ராஜபக்ஷவினர் ஒன்றும் முட்டாள்களில்லை. அவர்கள், தங்களின் பதிலியாகத் தான் அவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் மூலம், ராஜபக்ஷவினர் இந்த அரசியல் ஓட்டத்தில் முதல் வெற்றியைப் வெற்றிருக்கிறார்கள்.

தங்களுக்குப் போட்டியான ஒருவர் களத்துக்கு வருவதை – களத்தில் இருப்பதை அவர்கள் தந்திரமாக தவிர்த்திருக்கிறார்கள்.

டலஸ் போட்டிக்கு அழைத்து வரப்பட்டது, சஜித்துடன் அவர் இணக்கப்பாட்டை எட்டியது கூட அவர்களின் அரசியல் சதுரங்க ஆட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் ஆச்சரியமில்லை.

ஏனென்றால் அரசியல் என்பது, எதிர்பராத பொறிகள், நிறைந்த ஒரு பாதை. அதில் பயணம் செய்வது இலகுவானது அல்ல.

இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெற்றிருந்தாலும் சரி டலஸ் வெற்றிருந்தாலும் சரி – அது, ராஜபக்ஷவினரின் வெற்றி தான். ஏனென்றால் டலசும் மொட்டு கட்சியை சேர்ந்தவர் தான்.

இரண்டு பேருமே, ராஜபக்ஷவினரின் நலன்களை பாதுகாக்க கூடியவர்கள் தான். 

டலஸ் தோல்வி கண்டு, ரணில் வென்றிருப்பது அவர்களுக்கு இன்னமும் சாதகமானது.

டலசுக்கு ஆதரவு தெரிவித்த ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் மஹிந்தவுடன்  அந்நியோன்யமாக உரையாடியதைப் பார்த்தவர்கள், மொட்டின் தந்திரத்துக்கு சஜித் பலியாகி விட்டாரோ என்று சந்தேகப்பட்டனர்.

அந்த சந்தேகமும் கேள்வியும் உண்மையானதாக கூட இருக்கலாம்.

ஏனென்றால் அரசியல் என்பது மோசமானதொரு விளையாட்டு, அதில் குத்துச்சண்டையைப் போன்று  ஈவிரக்கமற்றது. ரகரைப் போன்று மூர்க்கத்தனமானது.

வெற்றிக்காக யாரையும்- எதையும் இழக்கவும் துணியாதது. 

இப்போது ரணில் அடைந்திருக்கின்ற வெற்றி அவருக்கு நிரந்தரமானதொன்று அல்ல. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார்- நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான், அவரது உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது.

அவ்வாறு ரணில் ஒரு உண்மையான வெற்றியை நோக்கி நகருவதற்கு ராஜபக்ஷவினர் இடமளிப்பார்களா என்பதும் சந்தேகம் தான். ஏனென்றால், ரணில் இப்போதும் அவர்களின் கைப்பாவை தான். 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள ராஜபக்ஷவினர், தங்களின் நலன்களுக்கு எதிராக செயற்பட முனைந்தாலோ, அல்லது தங்களின் மீது கை வைக்க முயன்றாலோ, அவருக்கு எப்போதும், எந்த வடிவத்திலும் ‘செக்’ வைக்கத் தயங்கமாட்டார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22