வீரியமடையும் கறுப்புச்சந்தை

Published By: Digital Desk 5

24 Jul, 2022 | 01:34 PM
image

-ஆர்.ராம்-

நாட்டின் பணவீக்கம் அடுத்த சில மாதங்களில் 70சதவீதத்தினை அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி.நந்தலால் வீரசிங்க இதனால் தொழில்களை முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலைமைகள் ஏற்படும் ஆபத்துக்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக்கூற்று நாட்டின் பொருளாதார ரீதியான வங்குரோத்தினை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. அதேநேரம், நாட்டு மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான பாரிய அச்சத்தினை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. 

பாடசாலைகள் இயங்காமை, சுகாதாரத்துறை முடக்கம், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை, அவசியமான பயணங்களைக் கூட மேற்கொள்ள முடியாத சூழல்கள், நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன.

இதன்விளைவாகவே, நாட்டை விட்டு வெளியேறும் மனோநிலைக்கு அதிகளவானோர் வந்துள்ளமையால் அண்மைய நாட்களில் குடியகல்வோரின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

2021ஆம் ஆண்டில் மொத்தமாக 382,506பேர் கடவுச்சீட்டுக்களைப் பெற்றவர்களாக இருக்கையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 288,645 பேர் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுள்ளனர். அதேநேரம், நாளாந்தம் கடவுச்சீட்டை பெறுவதற்காக நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.

இவ்வாறான பின்னணியில், உள்நாட்டில் கறுப்புச் சந்தை வியாபாரங்கள் வீரியமடைந்து வருகின்றன. சாதாரண வர்த்தக நிலையங்களில் பெறமுடியாத எந்தவொரு பொருளையும் கறுப்புச்சந்தையில் இருமடங்கு, மும்மடங்கு விலை அதிகரிப்புடன் தாராளமாக பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைமைகள் காணப்படுகின்றன. 

குறிப்பாக, சிறுவர்களுக்கான பல்மா முதல், மருந்துகள், எரிபொருள், எரிவாயு என்று இந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது. அத்துடன், தேவைகளின் அவசியத்தைப் பொறுத்தே பொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படும் நிலைமைகளும் உள்ளன.

அண்மையில், நீரிழிவு நோயாளர் ஒருவர் தமக்கான மாத்திரைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரச மருந்து விற்பனைக் நிலையத்திற்குச் சென்றிருந்தபோது, ஒருசில மருந்துகள் மட்டுமே பிரசித்தமான எஸ்.பி.சி.நிறுவனத்தினால் தருவிக்கப்பட்வையாக உள்ளதென மருந்தக ஊழியரால் கூறப்பட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டார். 

ஏனைய மாத்திரைகள் பிறிதொரு நிறுவனத்தின் உற்பத்திகளாகவும், அம்மாத்திரைகள் விலைகள் குறைந்தவை என்றும் அந்த மருந்தக ஊழியரால் கூறப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

அவ்வாறாயின், அம்மருந்துகள் எஸ்.பி.சி.நிறுவனத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் தரத்தில் குறைவானவை என்பது தெளிவாகின்றது. அவ்வாறு தரத்தில் குறைவான மருந்து வகைகளை உள்நாட்டுக்குள் வருவிப்பதற்கு இடமளித்தது அரச சுகாதாரக் கட்டமைப்புத் தானே. ஆகவே, தரம்குறைந்த மருந்துவகைகளை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியதும் அரச சுகாதாரக் கட்டமைப்பாகவே உள்ளது. 

அநேரம் அவ்வாறு தரம் குறைவான மாத்திரைகளைக் கூட, விநியோகிப்பதற்கு பிரத்தியேகமான கட்டுப்பாடுகளை மருந்தகங்கள் கொண்டிருக்கின்றன. அதாவது, ஒன்றிரண்டு வாரத்திற்கு அதிகமான காலத்திற்கு மாத்திரைகளை வழங்குவதில் மருந்தகங்கள் அதிகளவில் தயக்கம் காண்பிக்கின்றன. 

இந்த நிலைமைகள், தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் தாராளமாகவே உள்ளன. அங்கு மாத்திரைகள் மற்றும் உபகரணங்களின் விலைகள், விநியோகிக்கும் அளவுகள் எல்லாமே அந்தந்த நொடிப்பொழுதுகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. 

அதுமட்மன்றி, வெளிப்படையாக தட்டுப்பாட்டில் உள்ள மாத்திரைகளையோ அல்லது மருத்துவ உபகரணங்களையோ குறித்த சில தரப்பினர் நிர்ணயிக்கும் விலைகளைச் செலுத்திப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் தாரளமாகவே உள்ளன. அப்பணியை சில மருந்தகங்களும், சில மருத்துவ விற்பனை முகவர்களும் செவ்வனே முன்னெடுக்கின்றார்கள்.

அதேவேளை, எரிபொருட்;கள் விடயத்தில் இந்த நிலைமைகள் இன்னமும் மோசமாக உள்ளன. மூன்று, நான்கு நாட்கள் வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் தரப்பினர் தமது பயன்பட்டுக்கு உரியதை வைத்துக்கொண்டு மீதமானதை விற்பனை செய்யும் நிலைமைகள் அதிகரித்துள்ளன. 

குறிப்பாக, முச்சக்கரவண்டிகளின் சாரதிகள், எரிபொருட்களைப் பெற்று பெற்றோல், டீசல் உள்ளிட்டவற்றை 2500முதல் 3000ரூபா வரையில் விற்பனை செய்கின்றனர். இதற்கு, அரசாங்கம் தேசிய எரிபொருள் விநியோகம் குறித்து அடிக்கடி ‘முறைமை மாற்றம்’ செய்வதும் காரணமாகின்றது.

குறிப்பாக, யாழ்.மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்டைமுறை சீரான விநியோகத்திற்கும், பங்கீட்டுக்கும் வித்திட்டிருந்தபோதும், அமைச்சர் காஞ்சனவின் விநியோகம் தொடர்பான அறிவிப்பு அதனை சீர்குலைத்திருக்கின்றது. இது, யாழ்.மாவட்ட செயலர் மகேசனுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேவேளை, எரிவாயு விநியோகம் சீராகாத நிலைமைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றமையால், எரிவாயு சிலிண்டர் ஒன்று 12 முதல் 15ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதுவே, புதிய எரிவாயு சிலிண்டடராக இருந்தால் அதற்காக 35முதல் 40ஆயிரம் வரையில் செலுத்த வேண்டியுமுள்ளது.

சில்லறைக் கடைகளாக இருக்கலாம், அல்லது குளிரூட்டப்பட்ட பல்பொருள் விற்பனை நிலையங்களாக இருக்கலாம் அல்லது மொத்த விற்பனை நிலையங்களாக இருக்காலம் இவை அனைத்திலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருட்களுக்கு கூட விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. 

அவ்வாறிருந்தபோதும் பொருட்களையும், சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் நிறைந்தே உள்ளன. இதனால், நாளாந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துவோர் தமது வேலைகளை இழந்துள்ளமையால் அவர்கள், வரிசைகளில் ‘பாதிலாளிகளாக’ நின்று வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நிலைமைகள் உருவாகியுள்ளன. 

அண்மைய நாட்களில் நீண்ட தூரப்பயணங்களுக்கான சொகுபஸ்கள் மற்றும் புகையிரதகளில் ஆசன ஒதுக்கீட்டுக்காக  முற்பதிவு கட்டணங்களை விடவும் மேலதிக ‘கொடுப்பனவுகளை’ செய்ய வேண்டிய சூழல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. இதற்கு, அதிகாரிகளே சூத்திரதாரிகளாக இருக்கின்றார்கள்.

பொருளாதார நெருக்கடியால் பொருள்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவிய நாட்டில் ‘கறுப்புச் சந்தை’ தோற்றம் பெறுவதற்கு அனைத்து வகைகளிலும் காரணமாக இருப்பது ராஜபக்ஷ அரசாங்கம் தான். அதிலும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தான் ‘கறுப்புச் சந்தை’ வியாபாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. 

ரணில் விக்கிரமசிங்க, ‘தன்னலனுக்காக’ வெளியிடும், அடுத்த மூன்று மாதங்கள் கடினமான காலம், அடுத்த வருடம் முழுவதும் நிலைமைகள் இவ்வாறே நீடிக்கும் போன்ற ‘களநிலை’ அறிவிப்புக்கள் தான், பதுக்கல்கள் தீவிரமடைவதற்கும் கறுப்புச்சந்தை பரந்துவிரிவதற்கும் அடிப்படைக் காரணமாகிறது. 

ரணில் விக்கிரமசிங்க இப்போது ஜனாதிபதியும் ஆகிவிட்டார். கறுப்புச்சந்தையையும், பதுகல்களையும் கட்டுப்படுத்தும் பணியும் அவர் கையில் தான் தங்கியுள்ளது. இவ்விதமான கறுப்புச்சந்தையை ஒழிப்பதையும் பதுகல்களை தடுப்பதும் முதல் இலக்காக கொண்டே நுகர்வோர் விவகார அதிகாரசபையானது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தக் கட்டமைப்பு தற்போது கையறு நிலையை அடைந்துள்ளது. அந்தக் கட்டமைப்பின் காலிறுதி ஆண்டு அறிக்கையின்படி நாடாளவிய ரீதியில் உள்ள பல்வகை வியாபாரிகளிடமிருந்தும் விதிகளை மீறியமைக்காக 19,418,499ரூபா குற்றப்பணமாக அறிவீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி கடந்த மே மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்டதன் பின்னர் 235பேருக்கு எதிராக விலைகளை கூட்டி விற்பனை செய்தமைக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிகளவான அரிசியை வைத்திருந்த 590பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிடுகின்றது. 

ஆனால், அரிசியைத் தவிர ஏனைய பொருட்கள், சேவைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எவ்விதமான உத்தியோக பூர்வமான தகவல்களும் இல்லை. அதேநேரம், ஏனைய விடயங்கள் தொடர்பில் அதிகாரசபையினால் நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலைமைகள் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகாரசபை அரச கட்டமைப்பாக இருந்தபோதும், ஊழியர்கள் எரிபொருள் உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகளுக்;கு முகங்கொடுப்பதால் சுற்றிவளைப்புக்களைச் செய்யவோ, முற்றுகைகளைச் செய்யவோ முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

அதேநேரம், கறுப்புச்சந்தையினைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், அவை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளன. 

கொரோனா நுண்ணுயிரியைக் கூட கட்டுப்படுத்தும் திராணி உள்ளதெனக் கூறி மார்பு தட்டிய படைகளுக்கு சமுகத்தில் காணப்படும் கறுப்புச்சந்தை முகவர்களையோ, வியாபாரிகளையோ கட்டுப்படுத்த முடியாதுவிட்டாலும் ஆகக்குறைந்தது அடையாளம் காணக்கூடி முடியாத நிலைமையே உள்ளது. 

ஏனென்றால், படையினர் கூட, தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அவசர தேவைகள் ஏற்படுகின்ற பட்சத்தில் கறுப்புச் சந்தையையே அவர்களுக்கும் கைகொடுப்பதாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவர்களால் கறுப்புச் சந்தையை ஒழிப்பதற்கு எவ்வாறு முழுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்?

இதனைவிடவும், பொலிஸாரின் செயற்பாடுகள் ‘வேலியே பயிரை மேய்வதாக’ உள்ளது. தமக்குள்ள அதிகாரம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி எரிபொருள் உள்ளிட்வற்றைப் பெற்றுக்கொண்டு பின்னர் அதனை ‘பிறிதொரு நபர்’ ஊடாக கறுப்புச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த, செய்கின்ற நிலைமைகள் நிறையவே உள்ளன. 

இந்நிலையில் தற்போது, கறுப்புச்சந்தையை ஒழிப்பது மிகவும் சிக்கலுக்குரியதொரு விடயமாகிவிட்டது. கறுப்புச்சந்தை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளமையால் விநியோகச் சங்கிலியிலும் அதன் தாக்கம் வெகுவாக காணப்படுகின்றது. 

குறிப்பாக விநியோகங்களில் தாமதங்கள், வரையறைகள் நீடிப்பதற்கு வழிவகுத்துள்ளது. அது அதியுச்ச நுகர்ச்சித் தேவையுடைய சதாரண மக்களையே வெகுவாக பாதிக்கின்றது.

ஏற்கனவே நாட்டில் 60 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும் 10 குடும்பங்களில் 3 குடும்பங்களுக்கு அடுத்தவேளை உணவு கிடைப்பதில் உறுதியற்ற சூழல் நிலவுவதாகவும் ஐ.நா.வின் உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாறான நிலையில், கறுப்புச்சந்தையின் ஆதிக்கம் மேலும் வலுவடையுமாக இருந்தால், நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் சாதாரண பொதுமக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் பேராபத்தே நிறைந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22