புதிய ஜனாதிபதி பதவியேற்று முதலாவது தினத்திலேயே படையினரைப் பயன்படுத்தி மக்கள் போராட்டம் அடக்கப்பட்டமை மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் -வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

Published By: Vishnu

22 Jul, 2022 | 10:11 PM
image

(நா.தனுஜா)

படையினரைப் பயன்படுத்தி மக்கள் போராட்டம் அடக்கப்பட்டமை மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் -  சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

அதிகாரத்தரப்பினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றிவளைத்து, மிகவும் வலுகட்டாயமாகவும் வன்முறையான விதத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நடத்திய தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், புதிய ஜனாதிபதி பதவியேற்று முதலாவது தினத்திலேயே மக்களின் போராட்டத்தைக் கையாள்வதற்குப் படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதிப்பாட்டில் மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

 கொழும்பு, காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு 'கோட்டா கோ கம' என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 100 நாட்களுக்கும் மேலாக மிகவும் தீவிரமான முறையில் முன்னெடுத்துவந்த தன்னெழுச்சிப்போராட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் ஓரளவிற்குத் தணிந்தது.

இருப்பினும் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முப்படையினரால் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டதுடன் 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர். இதன்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள், நிலைமையை ஆராய்வதற்காகவும் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராவதற்காகவும் அங்கு வருகைதந்திருந்த சட்டத்தரணிகள், தமது பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள்மீது இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

 இ;வ்வாறானதொரு பின்னணியில் இவ்வன்முறைத்தாக்குதலைக் கண்டித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அதிகாரத்தரப்பினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றிவளைத்து, மிகவும் வலுகட்டாயமாகவும் வன்முறையான விதத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நடத்திய தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

 நூற்றுக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஒன்றிணைந்து வீதிகளை மறித்து பொதுமக்கள் காலிமுகத்திடலுக்குள் நுழைவதற்குத் தடையேற்படுத்தி இருப்பதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. அதேபோன்று அப்பகுதிக்குள் நுழைய முற்பட்ட சில சட்டத்தரணிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. குறிப்பாக இச்சம்பவத்தின்போது தொழில்முறை அடிப்படையில் தலையீடு செய்வதற்கு முயன்ற இரு சட்டத்தரணிகள் இராணுவ வீரர்களால் தாக்கப்பட்டதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. நிராயுதபாணிகளான பொதுமக்கள் பாதுகாப்புத்தரப்பினரால் எவ்வாறு தாக்கப்பட்டார்கள் என்பதை அவ்வேளையில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

 மேலும் குறைந்தபட்சம் ஒரு சட்டத்தரணியும் சில ஊடகவியலாளர்களும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது. சாதாரண பொதுமக்களை இலக்குவைத்து பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்துகின்றோம். 

அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவரது அரசாங்கமும் சட்டத்தின் ஆட்சிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் மதிப்பளித்துச்செயற்படுவதை உறுதிப்படுத்துமாறு கோருகின்றோம். புதிய ஜனாதிபதி பதவியேற்று முதலாவது தினத்திலேயே மக்களின் போராட்டத்தைக் கையாள்வதற்குப் படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறுதிப்பாட்டில் மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். 

ஆகவே இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் வலியறுத்துகின்றோம். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு உத்தரவு பிறப்பித்தவர்கள் உள்ளடங்கலாக இதில் தொடர்புபட்ட அனைத்துத்தரப்பினரும் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04