செலவுகளின் குறியீடா பெண் ?

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 05:04 PM
image

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் இல்லறம். ஆனால், அந்த இல்லறம் ஏன் அறமே இல்லாத இடமாக இருக்கிறது? 

இன்றைக்குப் பெண்களும் வேலைக்குப் போகிறார்கள். சொந்தக் காலில் நிற்கிறார்கள். தன் சாப்பாடு, துணிமணி, இருக்கும் இடம் ஆகியவற்றுக்காக அவர்களாலேயே பொருள் ஈட்ட முடிகிறது. பொருளாதாரத்தில் வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் பெண்களின் நிலை இதுதான். வேலைக்குப் போய் சம்பாதிக்காத பெண்களும் வீட்டில் சும்மா இருப்பதில்லை.

பின் ஏன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது பணப் பரிமாற்றம் நடக்கிறது? முன்பு போல் இப்போது வரதட்சணைப் பிரச்சினை இல்லை என்கிறார்கள். ஆனால், திருமணங்களின்போது, 'உங்க பெண்ணுக்கு நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதைச் செய்யுங்க" என்று சொல்வதையும் கேட்க முடிகிறது.

இந்தப் பண்டிகைக்கு எங்கள் குடும்பத்தில் இப்படிச் செய்வது வழக்கம், அப்படிச் செய்வது வழக்கம் என்று மாப்பிள்ளை வீட்டார் மறைமுகமாக கூறுகிறார்கள். பெண்ணைப் பெற்றவர்களும் வறட்டு கௌரவத்துக்காக ஈடுகொடுக்கிறார்கள்.

பெண்ணுக்காக திருமணத்தில் செலவழிக்கப்படும் பணத்தில் அவளுக்கு உரிமையில்லை. இது தன் பணம் என்று அவளால் அதை எடுத்துப் பயன்படுத்த முடியாது. பெண்ணுக்கு செய்யப்பட்ட சீர் அனைத்துக்கும் மாப்பிள்ளை வீட்டுக் குடும்பத்தினர் அனைவரும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

சம்பாதிக்கும் பெண்ணோ சம்பாதிக்காத பெண்ணோ திருமணமான பிறகு தன்னிடம் உள்ள  பணத்தை தன்னிச்சையாக செலவழிக்க அவளுக்கு உரிமை இருக்கிறதா? எதற்காக, ஏன் என புகுந்த வீட்டில் காரண காரியங்கள் சொல்ல வேண்டும். 

பெண்ணுக்குத் திருமணத்தில் அதிகம் செலவழிக்கப்படுவதால் வீட்டுச் சொத்தில் அவளுக்கு சமபங்கு கிடையாது என பெற்றோரும் சகோதரர்களும் நினைக்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் சமநிலையில் உள்ள மனிதர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதில் நம் சமூகத்துக்கு சிக்கல் உள்ளது. ஆண் உயர்வு, பெண் அவனுக்குக் கீழ் என்று நினைக்கிறோம். ஆணைப் பெற்றவர்கள் ஒரு படி மேல், பெண்ணைப் பெற்றவர்கள் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

குழந்தை பிறந்தவுடன் ஆண் - பெண் என்று சொல்வதை விட வரவு - செலவு என்கிறார்கள். பெண் பிறந்தால் பலர் நொந்துகொள்வதற்கு இன்றளவும் காரணமாக இருப்பது, திருமணத்தையும் பிள்ளைப்பேற்றையும் ஒட்டி சமூகத்தால் உருவாக்கப்பட்டுள்ள சடங்குகளும் சம்பிரதாயங்களும் தாம்.

என்றைக்குத்தான் திருந்தப்போகிறதோ இந்த சமூகம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right