காலம் தீர்மானிக்க விட்டுவிடுங்கள்!

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 05:35 PM
image

கேள்வி

என் வீட்டுக்கு அண்ணாவின் நண்பர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர் என்னை விரும்புவதாகவும், என்னைப் பார்ப்பதற்காகவுமே அடிக்கடி வருவதாகவும் கூறினார். நான் நன்றாக படித்து சித்தியடைய வேண்டும். அதுவரை வேறெதைப் பற்றியும் நான் சிந்திக்கப் போவதில்லை என்று கூறினேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். சிறிது காலத்தின் பின் அவர் மீது எனக்கும் காதல் இருப்பதாக உணர்ந்தேன். ஆனால், அவரது குடும்பத்தினருக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவர் இப்போது ஐந்து வருடங்களுக்கு வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறார். ஐந்து வருடங்களின் பிறகும் என் மீது அவருக்கு காதல் இருக்குமா என்று பயமாக இருக்கிறது. நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். எவ்வாறாவது நாம் ஒன்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கு என்ன செய்யலாம்?

பதில்

காதல் என்றால் அவரது வீட்டாருக்குப் பிடிக்காது என்கிறீர்களே... உங்கள் வீட்டில் மட்டும் உங்கள் காதலை ஏற்றுக்கொள்வார்களா என்ன?

முதலில், உங்களது மனம் நீங்கள் குறிப்பிடும் நபரை முழுமையாக நேசிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். எமக்கு பிடிக்காதவர்களோடு சில காலம் தொடர்ந்து பழகினால், அவர்களை பிடித்துவிடும். உங்களது நிலையும் இதுதான். உங்களிடம் காதல் சொன்ன முதலாவது நபர் இவர் என்பதால், அந்தப் புதுமையான, ஒரு கிளுகிளுப்பு தரும் உணர்வை அவர் தனது காதல் விண்ணப்பம் மூலம் ஏற்படுத்தி இருப்பதாலேயே அவரை உங்கள் மனம் நாடுகிறது. இதில் அன்புக்கு இடமில்லை.

காதல் என்பது அன்புக்கு நிகரானது. அது அவ்வளவு சீக்கிரமாக ஒருவரிடம் ஏற்படுவதில்லை. இன்று காதலர்கள் என்று சொல்லிக்கொள்ளும், காதல் திருமணம் செய்துகொண்டிருக்கும் பலரும், காதல் என்று வேறெதையோ தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்குள் முட்டலும் மோதலும் விவாகரத்தும் ஏற்படுகிறது.

காதல் என்பது எந்தவித கட்டுப்பாடும் சட்டதிட்டங்களும் இல்லாத அன்பு. 

இந்த அன்பை மிகச் சிலரே உணர்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். இதே அனுபவம் உங்களுக்கும் வரும். ஆனால், இப்போது வந்திருப்பது இதுவல்ல. இது ஒரு ஈர்ப்பு மட்டுமே.

எனவே, நீங்கள் அவரிடம் முதலில் சொன்ன பதிலையே மீண்டும் ஒரு முறை மீட்டுப் பாருங்கள். அதுவே இப்போதைக்கு நீங்கள் செய்யவேண்டியது. மற்றதை காலம் தீர்மானிக்க விட்டுவிடுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்