கடலுக்கு மத்தியில் அமைந்த ஏகாந்த கோட்டை ஏலத்தில் விற்பனை

Published By: Digital Desk 4

21 Jul, 2022 | 09:31 PM
image

உலக வாழ்க்கையை வெறுத்தவர்கள் கடலுக்கு மத்தியில் யாரும் இல்லாத தீவுக்குச் சென்று வாழ வேண்டும் என உவமானத்திற்குக் கூறுவது வழக்கம். 

அத்தகையவர்களை இலக்குவைத்து பிரித்தானிய கடற்கரைக்கு அப்பால் 1.5 மைல் தூரத்தில் நடுக்கடலில் அவ்வப்போது கடந்து செல்லும் சரக்குக் கப்பல்களைத் தவிர ஆளரவமற்ற ஏகாந்த சூழலில் அமைந்துள்ள போர்க் கால கோட்டையொன்று ஏலத்தில் விடப்பட்ட போது பெயரை வெளியிட விரும்பாத நபரொருவர் அந்தக் கோட்டையை அதன் அறிமுக விலையை விடவும் 10 மடங்கு பணம் செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் இன்று வியாழக்கிழமை (21.07.2022) வெளியிடப்பட்டுள்ளன.

ஹம்பர் கழிமுகப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தக் காளை மணல் கோட்டை என அழைக்கப்படும் கோட்டை 12 அங்குல பருமனான உலோகக் கவசக் கட்டமைப்பு மற்றும் கனரக துப்பாக்கிகளைக் கொண்ட அறை என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. 

கடல் மட்டத்திற்கு மேலாக மேலாக 59 அடி உயரத்தைக் கொண்டுள்ள இந்தக் கோட்டை 200 படைவீரர்கள் தங்கியிருப்பதற்கான வசதியைக் கொண்டுள்ளது.

முதலாம் உலகப் போரை எதிர்கொள்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோட்டை இரண்டாம் உலகப் போர் காலத்தில் துப்பாக்கிகள் ஸ்தாபிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது.

அத்துடன் இந்தக் கழிமுகப் பிராந்தியத்திற்குள் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் கடலுக்கு அடியில் உருக்காலான வலைக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் ஏகாந்தமாக காணப்படும் கொங்கிறீட் பாளங்களாலான இந்தக் கோட்டைக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகள் 1915 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருந்தன.  அந்த வகையில் இந்தக் கோட்டையானது போர் முடிவுற்று ஒரு வருடத்திற்குப் பின்னரே பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கோட்டையின் கட்டமைப்பானது எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள கடலை நோக்கிய பகுதியில் 12 அங்குல பருமனான உலோகக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. நீருக்கு கீழ் 11 அடி ஆழத்திலுள்ள மணல் பகுதியில் இந்தக் கோட்டை மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

இந்தக் கோட்டையின் 3 மாடிகள் கடல் மட்டத்தின் கீழும் இரு மாடிகள் மைய அவதானிப்புக் கோபுரத்திலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

1997 ஆம் ஆண்டில் ஸ்றீட்வைஸ் தொண்டு நிதியத்தால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த நம்பிக்கைத் தீவு என அழைக்கப்படும் இந்தக் கோட்டையானது போதைவஸ்துக்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்திப் புனர்வாழ்வளிக்கப் பயன்படுத்தப்பட்டது.

இதன்போது போதைவஸ்துக்கு அடிமையானவரகள் இந்தக் கோட்டையில் சுமார் 30 நாட்களைக் கழிக்க நேரிட்டது.

இந்தக் கோட்டையின் ஆரம்ப ஏல விற்பனை விலை 50,000 ஸ்டேர்லிங் பவுண் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இனந்தெரியாத கொள்வனவாளர் ஒருவர் அதனை 490,000 ஸ்டேர்லிங்; பவுணுக்கு வாங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right