சினிமாத்தனமான காதல்

Published By: Digital Desk 5

19 Jul, 2022 | 07:17 PM
image

கேள்வி

எனக்கு வயது 20. நான் ஒருவரை இரண்டு ஆண்டுகளாக காதலிக்கிறேன். எனது குடும்பத்தை விட, அவர் வசதியிலும் அந்தஸ்திலும் குறைந்தவர் என்பதால், எனது வீட்டில் என் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நான் சகல வசதிகளுடனும் எதிர்காலத்தில் வாழவேண்டும் என்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பு நியாயமானதுதான் என்றாலும் என் காதலை, காதலரை ஏமாற்ற விரும்பவில்லை. ஒருவேளை நான் அவரை திருமணம் செய்துகொண்டால், என்னுடனான உறவை முறித்துக்கொண்டுவிடுவதாக என் வீட்டினர் கூறியுள்ளனர். எனக்கு என் குடும்பமும் வேண்டும், காதலும் வேண்டும். நான் என்ன செய்ய?

பதில்

உங்கள் வீட்டினரின் எதிர்பார்ப்பில் தவறில்லை என்பதை நீங்களே புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி.

காலங்காலமாய் சமூகத்திலும் திரைப்படங்களிலும் தொடரும் பிரச்சினைதான் உங்களது பிரச்சினையும். இவை போன்ற விடயங்களைப் பார்க்கையில், சில சமயங்களில், ஏன் அந்தஸ்து வேறுபாடு உள்ள இருவரிடையே மட்டும் காதல் சீக்கிரமாகத் தோன்றிவிடுகிறது என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

உங்களுடைய பிரச்சினையில் உங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரே விடயம், உங்கள் வயதுதான். அதைக் கொண்டே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண விழையுங்கள்.

வாழ்க்கையில் சிரமங்கள் இருக்கலாம். ஆனால், எல்லோரும் எப்போதும் கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பதில்லை. அவர்களுக்கென்று ஒரு காலம் வரும். அதுபோலவே, உங்கள் காதலர் இப்போது உங்களை விடக் குறைந்த வசதியும் அந்தஸ்தும் கொண்டிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அவரும் நல்ல நிலைக்கு உயரலாம். ஆனால், அதற்கு உழைக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இருவரின் ஒருங்கிணைந்த வாழ்க்கைக்காக, ஒரு குறிப்பிட்ட இலக்கை ஏற்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அந்த இலக்கை அடைய முயற்சிக்கச் சொல்லுங்கள்.

அதுவரையில், உங்கள் காதல் உங்கள் மனங்களில் மட்டுமே நிறைந்திருக்கட்டும்.

அவர் தனது இலக்கை அடையும் வரையில், எதிர்காலத்தில் அவருக்கு உதவக்கூடிய வகையில் நீங்கள் உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது, அவர் சார்ந்திருக்கும் துறையில் உதவி செய்யக்கூடிய நிலைக்கு உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளுங்கள். 

நிச்சயமாக, நீங்கள் காத்திருக்கப்போகும் காலம் வரையில் உங்கள் வீட்டார் காத்திருக்கப் போவதில்லைதான். உங்களுக்குத் திருமணம் நடத்திவிட நிச்சயமாக முயற்சிப்பார்கள். ஆனால், உங்கள் இருவரது காதலும் உறுதியானதாக இருந்தால், நிச்சயமாக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. 

ஆனால், ஒன்றை மட்டும் நினைவிருத்திக் கொள்ளுங்கள். உங்களது காதலுக்கு உங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பது, உங்கள் மீது கொண்ட அன்பினாலும், உங்களது எதிர்கால வாழ்க்கையில் கொண்டிருக்கும் அக்கறையினாலும்தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். எனவே, உங்கள் முடிவில் உறுதியாக இருக்கும் அதேவேளை, அவர்கள் மனம் நோகும் வகையில் ஒருபோதும் நடந்துவிடாதீர்கள்.

இது சற்று சினிமாத்தனம் மிக்கதாகக்கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இது சாத்தியமானதே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்