நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் 20

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 08:36 PM
image

அன்டனி 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடைவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்பதாக பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார்.  இதனையடுத்து  பதில் ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வரலாற்றில் இதுவே முதல் தடவையாக பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி பதவி  விலகும் சந்தர்ப்பம்    அமைந்திருக்கின்றது.  இதற்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு  ஜனாதிபதி இருந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். 

அதனை அடுத்து பதில் ஜனாதிபதி நியமிக்கப்பட்டதுடன் சில தினங்களில் இடைக்கால  ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்.    ஆனால் தற்போது முதல் தடவையாக பதவியில் இருந்த ஜனாதிபதி விலகி இருக்கின்றார்.  அதன்படி  தற்போது பதில் ஜனாதிபதியாக ரணில் தற்போது பதவியேற்றிருந்தாலும் கூட இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணி எதிர்வரும் 20 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

பாநாயகர் அறிவிப்பு 

சபாநாயகர் அறிவிப்பே இறுதியானது! - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு -  tamilnaadi.com

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன    நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக இதனை வெளியிட்டார். 

சபாநாயகர் தனது அறிவிப்பில்  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பிலான கடிதம் நேற்று முன்தினம் மாலை கிடைக்கப்பெற்றது.அதற்கமைய   14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி சட்டபூர்வமாக பதவியில் இருந்து விலகியுள்ளார்.   

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடைமுறை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தெரிவு நிறைவுபெறும்வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள்,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார்.  

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் சகல கட்சி தலைவர்களுக்கும்  ஏற்றுக்கொண்டமைக்கு அமைய ,இடைக்கால  ஜனாதிபதி தெரிவு   விரைவாக நடைபெறும்.  தென்னாசியாவில் பழமையான ஜனநாயக நாடு என பெருமை கொள்ளும் நாம் புதிய ஜனாதிபதி தெரிவை முழுமையான ஜனநாயக வரைபிற்குட்பட்டதாக  மேற்கொள்வோம். 

எனவே  ஜனநாயக செயற்பாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழஙகுமாறு சகல கட்சி தலைவர்களிடமும்,அரச அதிகாரிகளிடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் வலியுறுத்துகிறேன்   என்று   அறிவித்தார்.  அதன்படி கடந்த மூன்று தினங்களாக  ஜனாதிபதி பதவி விலகல் குறித்த அறிவிப்பு  பேசப்பட்டு வந்த நிலையில் இறுதியாக நேற்றுக்காலை அந்த அறிவிப்பு வெளியாகியது.  

வாக்கெடுப்பு  20 ஆம் திகதி 

தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஜூலை 31ஆம் திகதி வாக்கெடுப்பு! - தமிழ்க் குரல்

மேலும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டுள்ளது.  ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் நடைபெற்றது. அதன்போதே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அதாவது   பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு விசேடமாக கூடவுள்ளதுடன் நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.  எனவே    ஏற்கனவே    தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  அறிவித்துள்ளார். 

எதிர்வரும் 19ஆம் திகதி வேட்பு மனுக்கல் கோரப்பட்டு,எதிர்வரும் 20ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும். ஜனநாயக வரைபிற்குள் சபை நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் சகல உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி 

2020 ஆம் ஆண்டு இறுதி பகுதியிலிருந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜனாதிபதி பதவி விலகளுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.  பொருட்களின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. டொலரின் பெறுமதி அதிகரித்தது.  ரூபாவின்  பெறுமதி வலுவிழந்தது.  டொலரின் பெறுமதி 360 வீழ்ச்சிகண்டது.   கருப்பு சந்தையில் 500 ரூபாவுக்கும் டொலர் விலை சென்றதாக தெரிவிக்கப்பட்டது. 

அதேபோன்று பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டது.  அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.  அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்தன.  படிப்படியாக எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் பல   கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டது.   நாட்கணக்கில் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நின்றும்  எரிபொருள் கிடைக்காத நிலைமையே மக்களுக்கு காணப்பட்டது. மக்கள் ஒருவிதமான  மன அழுத்தத்தில் இருந்தனர். 

அதேபோன்று பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வடைந்தன.  எரிவாயுபெற  மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டது.  நீண்ட நேர  மின்வெட்டு இடம்பெறுகிறது.  மக்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. மக்களின் வருமானம் குறைவடைந்தது தொழில்கள் இழக்கப்பட்டன.  மூன்றுவேளை உணவை பெற்றுக் கொள்வதே மக்களுக்கு நெருக்கடியாக மாறியது.  பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிகளின் போசாக்கு குன்றிய நிலைமை ஏற்பட்டது.  கல்வித்துறை பாதிக்கப்பட்டது.  சுகாதாரத் துறை பாதிக்கப்பட்டது.  மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மக்களால் மூச்சு விட முடியாத நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்து கட்டணம் கடுமையாக உயர்ந்தது.  அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாரியளவில் முடங்கியது.  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சகல துறைகளும்  பாதிக்கப்பட்டன.  இந்த அளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஏதோ நடக்கும், ஒரு நிவாரணம் கிடைக்கும்,  ஒரு துரித தீர்வுதிட்டம் வரும் என்று எதிர்பார்த்தனர். 

ஆனால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  மக்களினால்  பொறுத்துக்கொள்ள முடியாத  நிலைமையிலேயே கடுமையான போராட்டங்கள் ஆரம்பமாகின வரிசைகள்  ,  காத்திருத்தல், ஏமாற்றங்கள், பொருளாதார பிரச்சினைகள்,  பாடசாலை ஸ்தம்பிதம், வர்த்தக செயற்பாடுகள் பாதிப்பு, மின்வெட்டு நெருக்கடி, தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிப்பு, போக்குவரத்து ஸ்தம்பிதம், எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் விலை அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தினந்தோறும் காணப்படுகின்றன.  இதனால் நாட்டின் சகல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.   51 பில்லியன் கடன் சுமையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.  

இவ்வாறான நெருக்கடிக்கு  மத்தியிலேயே  மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதலாவது ஆர்ப்பாட்டம் ஜனாதிபதியின்  மிரிஹானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்துக்கு  அருகில் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பமான தொடர் போராட்டம் ஜூலை மாதம் முகமது மாபெரும் போராட்டமாக வெடித்தது.  ஜனாதிபதி மாளிகை  அலரி  மாளிகை ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களினால்   கைப்பற்றப்பட்டன.    இந்த நிலையிலேயே  பதவி விலகும் தீர்மானத்தை கோட்டபாய அறிவித்தார்.    

மும்முனை போட்டி  

அதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி  பாராளுமன்றத்தில்  இடைக்கால ஜனாதிபதி தெரிவு நடைபெறவுள்ளது.  தற்போது பிரதான எதிரணி தரப்பில்   எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் விடுதலை முன்னணி தமிழ்க் கூட்டமைப்பு என்பன எதிரணிக்கு ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  அதேபோன்று  சுயாதீன அணிகள் டலஸ் அழகப்பெருமவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ரணிலை தொடர்ந்து ஜனாதிபதியாக நியமிக்கவேண்டும் என்று   பொதுஜன பெரமுனவில் ஒரு தரப்பினர் கருதுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. அப்படியானால் இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தில் மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதற்கான வியூகங்களும் இடம்பெறுகின்றன.  மறுபுறம் ரணில் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.   19 ஆம் திகதி  வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்போது யார்   வேட்பாளர்கள் என்பதனை பார்க்கலாம். 

ரணில்  விக்ரமசிங்க 

எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் - பிரதமர் ரணில் |  importmirror.com

இந்நிலையில் தற்போது  ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐந்து தடவைகள் பிரதமர் பதவி,   20 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, 17 வருடங்கள் அமைச்சுப்பதவி, 43 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி, 28 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமைப் பதவி   உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இலங்கையின் பாராளுமன்றத்தில் நிகழ்த்தியிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு  பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். 

1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மறைவின் பின்னர்  டி.பி. விஜயதுங்க  இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அப்போது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க  1993 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் திகதி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். 

44 வயதில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுகிறார்.  அதன்பின்னர் தொடர்ந்து அவர் வெற்றிநடை போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட பல சவால்களை எதிர்கொண்டே அவர் பயணிக்க வேண்டியேற்பட்டது.  1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவினால் களமிறங்க முடியவில்லை. 1999 ஆம் ஆண்டு மற்றும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு   தோல்வியடைந்தார். 

2010 ,  2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தான் போட்டியிடாமல்   வேறு பிரதிநிதிகளை  களமிறக்கினார்.  எனினும் 2020 ஆம் ஆண்டு  ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரே ஒரு தேசியபட்டியல் ஆசனமே கிடைத்தது. அதில் பாராளுமன்றம் வந்து பிரதமரான ரணில் இன்று பதில் ஜனாதிபதியாகியுள்ளார். 

எப்படியிருப்பினும் 20 ஆம் திகதி என்ன நடக்கப்போகிறது என்பது இங்கு முக்கியமாகும்.  அத்துடன்  புதிய  அரசாங்கம் விரைவாக  மக்களின் பிரசிசினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.   சர்வதேச நாணயத்துடன் தற்போது பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றை விரைவாக தொடர்ந்து அந்த கடனை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சர்வதேச கடன் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி    புதிய கடன்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். நாட்டில்  கல்வித்துறை சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டு இருக்கின்றன.   ள் மின்வெட்டு காரணமாக சகலத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

எனவே   பொருளாதார இயல்பு நிலைமையை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  எனவே புதிதாக அதிகாரத்துக்கு வருகின்ற தரப்பினர் அது யாராக இருந்தாலும்   விரைவாக மக்களின் துயரம், இன்னல், வேதனை அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் நெருக்கடிகள் , பொருளாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை மூன்று வேளை உணவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை போன்றவற்றை கவனத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்பதே இங்கே முக்கியமானதாக உள்ளது.  அதன்படி பார்த்தால்  20 ஆம் திகதி நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22