இராணுவத்திற்கோ அல்லது புலனாய்வுப் பிரிவிற்கோ ஆவா குழுவினை அமைப்பதற்கு  எவ்வித அவசியமில்லை. அது தொடர்பில் தற்போதைய இராணுவத்தளபதியும் பாதுகாப்பு செயலாளருமே பதிலளிக்க வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கில்  மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் ஆவா குழுவானது   கடந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட  கோத்தாபய ராஜபக்ஷவின்  அறிவுக்கு எட்டியவகையில்  ஒரு சில மேஜர் தர அதிகாரிகளினால்  உருவாக்கப்பட்டதென  சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆவா குரூப் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தையும் புலனாய்வுப் பிரிவையுமே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டுகிறார்.  இவ்வாறான குழுக்களை அமைப்பதற்கு இராணுவத்திற்கோ புலனாய்வுப் பிரிவிற்கோ எவ்வித காரணங்களுமில்லை.

யுத்த காலத்திலும் முன்னைய ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் போது இருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) போன்ற அமைப்புக்கள் ஆயுதங்களை வைத்திருந்தன.

இவ்வாறான அமைப்புக்களிடம் இருந்த ஆயுதங்களை நாமே பெற்றெடுத்து அவர்களை நிராயுதபாணிகளாக்கினோம்.  அவர்களை நிராயுத பாணிகளாக்கிய எமக்கு மீண்டும் புதிய அமைப்பு அல்லது குழுவினரை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. 

குறித்த குற்றச்சாட்டுக்களை இராணுவத்திற்கோ முன்வைக்கின்றார் என்பதை அமைச்சர்  நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறான குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்தமையால், இப்பொழுது ஆவா குழுவினை இராணுவமே அமைத்ததுள்ளதென தமிழ் அரசியல்வாதிகளும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், குறித்த அமைப்பு இன்றும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுமாயின் இப்போது உள்ள இராணுவ தளபதி மற்றும் கட்டளை தளபதிகளுக்கு இக்குழுவினை கட்டுபடுத்த இயலாது என்று தெரிவிக்கின்றாரா? அப்படியாயின் குறித்த அமைச்சர் பாதுகாப்பு அமைச்சைின் மீதே குற்றம் சுமத்துகின்றார்.

இப்போது பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்பும் என்னிடம் இல்லை. நான் குறித்த விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்ளுகின்றேன். இதைவிடுத்து மேலதிக தகவல்களை தேடிப் பார்ப்பதற்கு எனக்கு மேலதிக சக்தியில்லை.

இதுகுறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதற்கு ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் தற்போதைய இராணுவம“ தளபதிகளே பதிலளிக்க வேண்டுமென தெரிவித்தார்.