கீழைத்தேய நவீன புரட்சியின் அடையாளமாக இலங்கை

Published By: Vishnu

10 Jul, 2022 | 06:34 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

ஜுலை மாதமானது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத  பல வரலாற்று  வடுக்களை  விட்டுச்சென்ற மாதமாகும். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற  ஆடிக் கலவரங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட அதே வேளை, கோடிக்கணக்கான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. 

பல வீடுகள் வர்த்தக ஸ்தாபனங்கள் எரியூட்டப்பட்டு சாம்பராகின. பல தமிழர்கள் தமது மண்ணை விட்டு தமிழகத்துக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். ஆனால் இதற்குக் காரணமாக இருந்த பேரினவாத சிந்தனைகள் கொண்ட அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள வன்முறையாளர்களுக்கும் இந்த ஜுலை மாதம் பதிலடிகளை கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது.

உலக வரலாற்றில் புரட்சியின் அடையாளத்தை சிவப்பாக வர்ணிப்பர்.  அப்படியொரு மக்கள் புரட்சி இலங்கை மண்ணில் இதே ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்டுள்ளது.சுதந்திரத்துக்குப்பின்னர் இலங்கையில் இடம்பெற்ற பல  ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும்  மறக்கடிக்கச்செய்துள்ளது இந்த மக்கள் புரட்சி. இதற்குக் காரணம் இந்த மக்கள் புரட்சிக்கு மக்களே தலைமை தாங்கியுள்ளமை தான். 

உலக வரலாற்றில் அடக்குமுறை ஆட்சிக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிரான புரட்சிகளை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டுவதில் இடதுசாரி சிந்தனை தலைவர்களும், ஜனநாயக ஆட்சியை நேசிக்கும் தலைவர்களும், அஹிம்சை வழி வந்த தலைவர்களும்  இது வரை வெற்றி கண்டுள்ளனர். ஆனால் இலங்கை இதில் விதிவிலக்காக நிற்கின்றது. 

எந்த அரசியல் சித்தாந்தங்களும் இவர்களை வழிநடத்தவில்லை. அல்லது அப்படியான பல்வேறு வேறுபட்ட சித்தாந்தங்களை பின்பற்றி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எந்த தலைவர்களும் இவர்களை வழிநடத்த வரவில்லை. மக்களே தமக்கான பாதையை வகுத்தனர். 

போராட்டம் , புரட்சி என்பதே இவர்களின் ஒரே இலக்காக இருந்தது. அதன் காரணமாகவே 9 ஆம் திகதி இடம்பெற்ற புரட்சியின் வேகத்தை கண்ட அரசியல்வாதிகள் எவரும் இதில் பங்கேற்றிருக்கவில்லை. அப்படியும் பங்கேற்ற ஒரு சிலருக்கு புரட்சியாளர்கள் தகுந்த தண்டனைகளை வழங்கி அவர்களை வைத்தியசாலையில் தங்க வைத்துள்ளனர்.

அவர்களுக்கு அனைத்து அரசியல்வாதிகளும் எதிரிகளாகவே தெரிந்தனர். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த நாட்டில் ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ அனைவருமே நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு பதில் கூற வேண்டியவர்களே… ஆனால் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள எவருமே முன்வராது ஒருவரின் மீது ஒருவர் பழிசுமத்தும் காரியங்களையே முன்னெடுத்து வந்தனர். இதுவே இந்நாட்டின்  ஆட்சியை தீர்மானிக்கும் வாக்குகளை வழங்கிய சிங்கள மக்களின் சீற்றத்துக்குக் காரணமாயிற்று. 

இனவாத செயற்பாடுகளாலும் பிரசாரங்களாலும்  சிங்கள மக்களை  மூளைச்சலவை செய்து அரியணை ஏறிய ஜனாதிபதி கோட்டாபய அதே மக்களால் இன்று விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார். 

இலங்கை மண்ணை காத்த வீரன் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் போற்றப்பட்ட இவர் இன்று மக்கள் புரட்சியினால் எங்கோ ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றார். இலங்கை வரலாற்றில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர்  தனது பதவி காலத்தின் அரைவாசி காலப்பகுதியில் பதவி விலகப்போகின்றார். 

அடுத்த  இருபது வருடங்கள்  இந்த நாட்டை நாமே ஆட்சி செய்வோம் என்று  முழங்கிய  ராஜபக்சவினருக்கே இது கருப்பு ஜுலையாக மாறி விட்டது. அதிகாரப் போக்கும் ஆணவமும் எந்த வலிமையுடைய ஆட்சியையும் அசைக்கும் என்பதற்கு இலங்கை மக்கள் முன் உதாரணமாக திகழ்கின்றனர். ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளின் புரட்சி கதைகளையும் வரலாற்றையும் புத்தகங்கள் வாயிலாக அறிந்து ஆச்சரியப்பட்டு வந்த இலங்கை மக்கள் முதன் முதலாக மக்கள் புரட்சியை கண்களால் கண்டும் அதில் பங்குபற்றியும்  பூரித்துப்போயுள்ளனர். 

ஆட்சியாளர்களின் அடாவடித்தனம் மற்றும் , ஊழல்  மற்றும் அடக்கு முறைகளுக்கு எதிராக  இலங்கை போன்ற  சிறிய நாட்டில்  முகிழ்த்த  இந்த மக்கள் புரட்சியானது உலக வரலாற்றில் இடம்பிடிக்கத்தக்கது. ஏனென்றால் இது பல்லின மக்கள் வாழ்ந்து வரும் பூமி.  இந்த மக்களிடையே இனவாதத்தை வளர்த்து அதில் பல தசாப்தங்களாக குளிர் காய்ந்து கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு இந்த மக்களே இணைந்து வழங்கிய சிறந்த படிப்பினையாக இந்த சம்பவம் விளங்குகின்றது. மட்டுமின்றி ஒற்றுமையின் வலிமையை பறை சாற்றுவதாக உள்ளது. 

1983 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தை தமிழர்கள் கறுப்பு ஜூலை என்றே அடையாளப்படுத்தி அந்த ஆறா வடுக்களை நினைவு கூர்ந்த அனுஷ்டித்து வந்தனர். இனி ஜூலை 9 ஆம் திகதியை நினைவுறுத்தி இம்மாதத்தை மக்கள் புரட்சியின் அடையாளமாக ‘சிவப்பு ஜூலையாக’ கொண்டாடப்போகின்றனர். 

மட்டுமின்றி கீழைத்தேய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் புரட்சிகளில், மக்களே முன்னின்று நடத்தி வெற்றி கண்ட புரட்சி என்ற பெருமையை ஜூலை  9 புரட்சி பெற்றுக்கொள்ளப்போகின்றது. 

இந்த மக்கள் புரட்சியானது அடுத்து நாட்டை ஆளப்போகின்றவர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக உள்ளது என்றே கூற வேண்டியுள்ளது. அது தான் இந்த புரட்சி உருவாக்கியுள்ள வெற்றி எனலாம்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04