22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினால் மாத்திரமே சர்வதேச உதவிகள் கிடைக்கும் - விஜேதாச ராஜபக்ஷ

Published By: Vishnu

10 Jul, 2022 | 12:27 PM
image

நேர் கண்டவர் -  ரொபட் அன்டனி

பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை சஜித் மறுத்ததன் காரணமாகவே  ரணிலை நியமிக்க பரிந்துரைத்தோம் ஆரம்பத்தில் நான் ஜனாதிபதியை விமர்சித்தபோது எனக்கு ஆதரவாக யாரும் இருக்கவில்லை அரசியல் ரீதியில் சிந்திக்காமல் நாடு என்ற வகையில் சிந்திக்கவேண்டும்.

சர்வதேச நாணய நிதியம்,  ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவை  உடனடியாக  உதவி செய்யப்போவதில்லை.  நாம் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி படுத்தலை எவ்வாறு செய்து காட்டுகிறோம் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்.  நாம் என்ன செய்கின்றோம் என்பதை பார்த்து அவர்கள் உதவி செய்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் . அதற்கு 22ஆம் திருத்தச் சட்டமூலம் மிகவும் முக்கியத்து மிக்கதாக உள்ளது.  இது எப்போது நிறைவேற்றப்படும் என்ற திகதியையும் சர்வதேச தரப்பினர் என்னிடம் கேட்கின்றனர்.  அரசியலமைப்பு திருத்தத்தை வைத்து சாப்பிட முடியுமா என்று இங்கு சிலர் கேட்கின்றனர்.  ஆனால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செய்யாவிடின் சர்வதேச நாணய நிதியம்  எமக்கு உதவி செய்யாது  என்று நீதிமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு 

கேள்வி அரசியலமைப்பின் 22 வது திருத்த சட்ட நிலைமை தற்போது எவ்வாறு காணப்படுகிறது?

பதில் 22 ஆவது திருத்த சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.  அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே நான் அதனைக் கொண்டு வந்திருக்கிறேன்.  மக்களின் கோரிக்கைக்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் செவிசாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.   

கேள்வி ஆனால் எதிர்க்கட்சியினர் இதனை கடுமையாக விமர்சிக்கின்றனரே? குறிப்பாக 19வது திருத்தச் சட்டத்தின் பல விடயங்கள் இதில் இல்லை என்று அவர்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றன

பதில் எதிர்க்கட்சியினர் ஏன் இது தொடர்பாக விமர்சனம் செய்கின்றனர் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.  நாம்   கொண்டு வந்திருப்பது 19-வது திருத்தச் சட்டத்துக்கும் அப்பால் சென்றிருக்கின்ற ஒரு வரைபாகும்.  உதாரணமாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்த நாட்டின் முக்கியமான ஒருவராக இருக்கின்றார்.  எனவே அவரின் நியமனமும் அரசியலமைப்பின் கீழ் வரும் படி நாங்கள் புதிய சட்டமூலத்தை கொண்டு வந்திருக்கின்றோம்.  மேலும் 19-வது திருத்தச் சட்டத்தின் ஊடாக தேசிய அரசாங்கம் அமைந்தால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும்.  ஆனால் 22-வது திருத்த சட்டம் மூலத்தில் அந்த ஏற்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.  அதேபோன்று அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரின் தலையீடு இல்லாமல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி, சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.   ஊழலுக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டாலும்    இன்னும் அது சட்டமாக்கப்படவில்லை.  அந்த சட்டத்தை நான் தற்போது உருவாக்கி விட்டேன்.  20வது திருத்தச் சட்டத்தில் ரத்து செய்யப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் மீண்டும் கொண்டுவரப்படும்.  தேசிய கொள்முதல் ஆணைக் குழுவும் உருவாக்கப்படும்.  கணக்காய்வு ஆணைக்குழு உருவாக்கப்படும்.  ஏற்கனவே இருக்கின்ற ஆரணக்குழுக்களின்  அதிகாரங்கள் வலுப்படுத்தப்படும்.  பொது அறிவு  இருக்கின்றவர்கள்  இதனை பார்த்ததும் இது 19 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி ஆனாலும் எதிர்க்கட்சி  முன்வைக்கின்ற சில குறைபாடுகள் எனும் காணப்படுகின்றனவே ?  குறிப்பாக பிரதமரை ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற விடயம்? 

பதில் எதிர்க்கட்சியினர் இதில் ஒரு நியாயமான விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.  அதாவது  பிரதமர் ஒருவரை பதவி நீ்க்குகின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.  அதனை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.  அது ஒரு இடைக்கால ஏற்பாடாகவே காணப்படுகிறது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் அந்த ஏற்பாட்டை  மாற்றுவதில் பிரச்சனையில்லை.

கேள்வி எனினும்  ஜனாதிபதிக்கு அமைச்சு பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயமும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகிறதே?  

பதில் முன்னால் ஜனாதிபதி  மைத்திரிபால  மூன்று அமைச்சுக்களை வகிக்க முடியுமாக ஏற்பாடு காணப்பட்டது.  நாம் தற்போது ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை  மட்டுமே வழங்குகிறோம்.  அப்படி பார்த்தாலும் அதில் முன்னேற்றமே ஏற்பட்டிருக்கிறது.

கேள்வி நீங்கள் கொண்டுவந்துள்ள  22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நிறைவேறுவது என்பது இலங்கையின   அரசியல் கட்டமைப்பில் எவ்வாறு முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது? 

பதில் நாடு அராஜகம் ஆகியுள்ளது.  முழு அரசியல் கட்டமைப்பும் அரச கட்டமைப்பும் அரசியல் மயமாகியுள்ளது.    எனவேதான் நாம் இந்த சுயாதீனானை குழுக்களை பலப்படுத்துகிறோம். 

கேள்வி 22 இன் பின்னர் என்ன நடக்கும் ?

பதில் அதன் பின்னர் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது. 

கேள்வி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட விடயத்தில் உங்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது ? 

பதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியேற்க முடியாது என்று கூறியதன் காரணமாக நாம் ரணில் விக்கிரமசிங்கவை  நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.    அப்போது ஜனாதிபதியும் ரணில் விக்கிரமசிங்கவும்  என்னிடம் அமைச்சு பதவியேற்று நாட்டுக்கு சேவையாற்ற முடியுமா என்று கேட்டனர்.  அமைச்சு பதவி எடுக்க விருப்பம் இல்லையாயினும்கூட   நாட்டுக்கு சேவை ஆற்றுவதற்காக சரி என்று கூறினேன்.  ஆரம்பத்தில் எனக்கு அமைச்சுப் பதவி எடுத்து விருப்பம் இருக்கவில்லை.  எனினும் கடமை ஒன்றை செய்ய வேண்டியுள்ளது என்பதால் ஏற்றுக் கொண்டேன்.  அதன்படி ரணில் நியமிக்கப்பட எமது பரிந்துரையும் காரணமாக அமைந்தது

கேள்வி நாட்டில் தற்போது கோ ஹோம் கோட்டா  என்ற பிரச்சாரம் காணப்படுகிறது பாராளுமன்றத்திலும் ஜனாதிபதிக்கு எதிராக அவ்வாறான கோஷம் இடம்பெற்றது.  இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

 பதில் எந்த விடயத்தையும் கூறுவதற்கு முன் வைப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்கின்றது.  என்னாலும் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு சொல்ல முடியும்.  ஆனால் நான் கூறுகின்றேன் என்பதற்காக ஜனாதிபதி போக மாட்டார். என்னை பொறுத்தவரையில் குற்றவியல் பிரேரணையை கொண்டு வர முடியும்.  தற்போது அது முடியாத நிலையாக இருக்கிறது.  இப்போது முறையையே மாற்ற வேண்டியுள்ளது.

கேள்வி அப்படியானால் தற்போது இந்த அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டா என்ற அந்த பிரசாரம் செல்லுபடி அற்றது என்று கூறமுற்படுகின்றீர்களா?

பதில் அது தொடர்பில் என்னால் ஒன்றும் கூற முடியாது.  எந்த ஒரு விடயத்தையும் முன்வைப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது.  மக்களின் உரிமை பாதுகாக்கப்படுகின்ற வகையில் ஜனநாயக உரிமைகளை பலப்படுத்தக்கூடிய முறை ஒன்றை உருவாக்க வேண்டும்  என்பது எமது நிலைப்பாடாகும்.  

கேள்வி கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் இதே தரப்பினருடன் நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  நானும் அந்த பேச்சுக்களில் ஈடுபட்டேன்.    பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இணக்கப்பாட்டை எட்டிக் கொள்ள முடியாததன் காரணமாகவே நாங்கள் ரணிலை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.  தற்போது அவர்கள் அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடர்பாக பேசியிருக்கலாம். ஆனால்  அரசியல் பயணம் குறித்து பேசுவதற்கு முன்பாக தற்போது காணப்படுகின்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேள்வி அதாவது எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை மறுத்ததன் மூலம் ஒரு பெரிய சந்தர்ப்பத்தை இழந்துவிட்டார் என்று கருதுகிறீர்களா? 

பதில் அதில் இரண்டு விடயங்களும் காணப்படுகின்றன.  அதாவது தன்னால் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையின் காரணமாக அவர் அதனை எடுக்காமல் இருந்திருக்கலாம்.   நம்பிக்கை இருந்திருந்தால் எடுத்திருப்பார் அல்லவா? அரசியல் தலைவர்கள் சவால்களை ஏற்க வேண்டும்.  இந்த  முறை அமைச்சு பதிவை எடுத்ததன் காரணமாக எனது அரசியல் வாழ்க்கை கூட ஸ்தம்பிதமடையலாம்.  ஆனால் நாடு கஷ்டத்தில் இருக்கும் போது நான் எனது பங்களிப்பை வழங்க வேண்டும். அதனை நானும் செய்தேன். 

கேள்வி நாட்டில் வரிசைகள் நீடிக்கின்றன. எரிபொருள் இல்லை. எரிவாயு இல்லை. விலைகள் அதிகரித்திருக்கின்றன. மக்கள் கஷ்டப்படுகின்றனர்.  ஒரு விடிவை நோக்கி பயணிப்பதற்கான பாதை தெரிகிறதா?

பதில் இது  தொடர்பாக நாங்கள் தொடர்ந்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.  அரசியல் ஸ்திரம்  இல்லாமல் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாது.     அதனை எல்லோரும் கூறுகின்றனர்.  சர்வதேச நாணய நிதியம்,  ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவை  உடனடியாக  உதவி செய்யப்போவதில்லை.  நாம் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி படுத்தலை எவ்வாறு செய்து காட்டுகிறோம் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்.  நாம் என்ன செய்கின்றோம் என்பதை பார்த்து அவர்கள் உதவி செய்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் . அதற்கு 22ஆம் திருத்தச் சட்டமூலம் மிகவும் முக்கியத்து மிக்கதாக உள்ளது. இது எப்போது நிறைவேற்றப்படும் என்ற திகதியையும் சர்வதேச தரப்பினர் என்னிடம் கேட்கின்றனர்.  அரசியலமைப்பு திருத்தத்தை வைத்து சாப்பிட முடியுமா என்று இங்கு சிலர் கேட்கின்றனர்.  ஆனால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செய்யாவிடின் சர்வதேச நாணய நிதியம்  எமக்கு உதவி செய்யாது.  நாம அரசியல் மறுசீரமைப்பை செய்வதாக வாக்குறுதி அளித்து இருக்கின்றேன்.  நல்லிணக்க செயற்பாடுகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.  தேசிய  ஒற்றுமையும் நாம் பலப்படுத்தி வருகிறோம்.  பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்தாலும் தேசிய ஒற்றுமை இல்லாவிடில்  பயணிக்க முடியாது. 

கேள்வி ஜனாதிபதி  கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக ஒரு தொலைபேசி உரையாடல் தொடர்பாக நீங்கள் ஆரம்பத்தில் கடமையான குற்றச்சாட்டை முன் வைத்தீர்கள். தற்போது அவரது அமைச்சரவையில் இருக்கின்றீர்கள், எப்படி இருக்கிறது ?

பதில் அது எனக்கு ஒரு பிரச்சினையாக இல்லை. காரணம் நான் யாருடனும் நிரந்தர  வைராக்கியத்தை வைத்துக் கொள்ள மாட்டேன். நான் அன்று ஜனாதிபதியை விமர்சித்த  போது எனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை. இன்று ஜனாதிபதியே எதிர்க்கின்ற யாரும் அன்று எனக்கு ஆதரவாக பேசவில்லை. நான் என்று தனிமைப்படுத்தப்பட்டேன். ஆனால் இந்த நெருக்கடி வந்த பின்னர் நான் கூறியது சரி என்று ஜனாதிபதிக்கு புரிந்து இருக்கும்.  அதனால் தான் என்னை அழைத்து இந்த பொறுப்பை ஏற்கும்படி கூறினார்.  நான் ஜனாதிபதிக்கு சேவை ஆற்றவரவில்லை.  மாறாக மக்களுக்கு சேவையாற்றுவே  வந்திருக்கிறேன்.  எமது அரசியல் கலாசாரத்துக்கு நான் பொருத்தமற்றவன்  என்றே கருதுகிறேன்.  ஒரு சிலர்   தலைவர்மாருக்கு அடிமையாக இருக்க வேண்டும்  என்று கருதுகின்றனர்.  ஆனால் அது என்னால் முடியாது. 

கேள்வி  விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு நாட்டின் ஜனாதிபதியாக வரும் விருப்பம் இருக்கிறதா?

பதில் நான் கனவு காண்பது குறைவு. ஆனால் மக்கள் எந்த பொறுப்பை வழங்கினாலும் அதனை செய்து காட்ட என்னால் முடியும்.

கேள்வி அது ஜனாதிபதி பதவி அல்லது பிரதமர் பதவியாக இருக்கலாம்?

பதில் அது பாராளுமன்ற உறுப்பினர் பதவியாககூட இருக்கலாம்.  அமைச்சர் பதவியாக இருக்கலாம். நான் அமைச்சர்களால் முடியாததை பாராளுமன்ற உறுப்பினராக செய்திருக்கின்றேன்.  ஒரு சட்டத்தரணியாக செய்திருக்கின்றேன்.  எனக்கு பதவி முக்கியத்துவம் இல்லை.  நான் செய்ய முடியுமானதை செய்வேன் . 

கேள்வி ரணிலின் நியமனத்துக்கு முன்னர் சுயாதீன் அணி சார்பில் மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன.  அதில் உங்கள் பெயரும் இருந்தது. அப்போது உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

பதில் அந்த 52 பேர் கொண்ட சுயாதீன அணிகளின்   கூட்டம் நடைபெற்று எனது பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நான் இல்லாத போது அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எனது பெயரையும் மேலும் இருவரின் பெயரையும் ஜனாதிபதிக்கு அனுப்பி இருந்தனர்.  ஆனால் அதற்கிடையில் ஜனாதிபதி ரனில் விக்ரம்சிங்கவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார்.  நானும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இதனை பொறுப்பேற்று நாட்டைக் கொண்டு நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.  எனினும் அந்த கூட்டத்தில் பல சிரேஷ்ட தலைவர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.  வாசுதேவ   பிரியதர்ஷின யாப்பா உதய கம்பன்பில விமல் வீரவன்ச உள்ளிட்ட தலைவர்கள் அங்கு அந்த முடிவுக்கு வந்ததமையை நான் மதிப்பளிக்கின்றேன்.  அதனை  மதிக்கிறேன். 

கேள்வி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஜனாதிபதியாகுவதற்கு நீங்கள் பாரிய பங்களிப்பு வழங்கி இருந்தீர்கள். அவரது தற்போதைய அரசியல் வகிபாகத்தை எவ்வாறு கருதுகிறீர்கள்?

பதில் தற்போது யாரையும் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க விரும்பவில்லை.  ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.  அரசியல் கட்சி நிறம் என்பவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காக சகலரும் இணைந்து செயல்படுவோம்.   

கேள்வி மே 9 கலவரங்கள் தொடர்பாக?

பதில் அது ஒரு இருண்ட யுகத்தை மீண்டும்   ஞாபகப்படுத்தியது. அவ்வாறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே  நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.

கேள்வி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ?

பதில் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டில் இருந்தே சில விடயங்களில் தவறிழைத்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகம்,  மத்தள  விமான நிலையம்,  என்பனவற்றின் தவறிழைத்து விட்டார். 

கேள்வி அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தில் என்ன தவறு இருந்தது ?

பதில் எம்மால்  தாங்கிக் கொள்ள முடியாத ஒரு முதலீடாகவே அது காணப்பட்டது.  அதனால் பாரிய கடன் சுமை ஏற்பட்டது. இன்று அந்த கடனை செலுத்த முடியாமல் நாம் தவிக்கிறோம். உழைத்த பணம் அனைத்தையும் கடனுக்காக செலுத்த வேண்டி ஏற்பட்டது. அவர் கடன் எடுத்து செய்த திட்டங்களில் நுரைச்சோலை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.   அடுத்ததாக அவர் குடும்பத்துக்கு முன்னுரிமை வழங்கினார்.  பசில் ராஜபக்ச போன்றவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கினார்.  ஊழல்வாதி அதிகாரிகளை தன்னுடன் வைத்துக் கொண்டார்.  

கேள்வி அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்தீர்கள், காணாமல் போனோர்  அலுவலகம் இழப்பீட்டு  அலுவலகம் என்பற்றை பார்த்தீர்கள் என்ன நடந்தது?

பதில் எனது அமைச்சின் கீழ் காணாமல் போனோர்   அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பன  காணப்படுகின்றன. நல்லிணக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான செயலகமும் இருக்கின்றது.  ஒரு சில வருடங்களில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  அரசியல் ரீதியாகவும் நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 

கேள்வி அப்படியானால் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்தும் வகையில் ஏதாவது முயற்சிக்கு செல்கிறீர்களா?

பதில் நான் 13 தொடர்பாக பேசவில்லை.  புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை நான் கூறுகிறேன். 

கேள்வி காணாமல் போனோர் அலுவலகம் பற்றி பேசுகிறீர்கள். காணாமல் போனோரின் உறவினர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

பதில் அதனை நான் நன்றாக அறிந்திருக்கிறேன்.  முதல் தடவையாக அரசியல்வாதி என்ற ரீதியில் என்னுடன் மட்டுமே அவர்கள் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  300,  400க்கும் மேற்பட்ட தாய் தந்தையர் என்னுடன் உரையாடினர்.  என்னை மலர் மாலை போட்டு வரவேற்றனர். 

கேள்வி காணாமல் போனோரின்  பிரச்சனைக்கு தீர்வை கொடுப்பீர்களா?

பதில் காணாமல் போனோர் பிரச்சினை மட்டுமல்ல, அங்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன,  நீங்கள் காணாமல் போனோர் பிரச்சினையை மட்டுமே பார்க்கின்றீர்கள். ஆனால் அங்கு காணிகளுக்கு உறுதியில்லாதவர்கள் இருக்கின்றனர்.  பிறப்பு சான்றிதழ் அடையாள அட்டை இல்லாதவர்கள் இருக்கின்றனர்.  இந்தியாவுக்கு சென்று மீண்டும் வந்தவர்கள் இருக்கின்றார்கள்.  அவர்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை. அவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13