நிமிர்த்த முடியாத சரிவு

Published By: Digital Desk 5

10 Jul, 2022 | 01:14 PM
image

கார்வண்ணன்

“இலங்கைக்கு கடந்த ஆறு மாதங்களில் பயணம் மேற்கொண்ட 411,377 சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்களை அடுத்து, பிரித்தானியர்களே இரண்டாவது இடத்தில் உள்ளனர்”

நல்லூர் கந்தனை நம்பியிருந்த அரசாங்கத்துக்கு, பிரித்தானிய வெளியுறவுப் பணியகத்தின் பயண ஆலோசனை (எச்சரிக்கை) பேரிடியாக அமைந்திருக்கிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள நல்லூர்  கந்தசுவாமி கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

பிரித்தானிய வெளியுறவுப் பணியகத்தின் பயண ஆலோசனை அவரது நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

கடந்த 6ஆம் திகதி பிரித்தானிய வெளியுறவுப் பணியகத்தினால் புதுப்பிக்கப்பட்டுள்ள, இலங்கை தொடர்பான பயண ஆலோசனையில், இலங்கைக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பற்றாக்குறை, பொருட்களுக்கான தட்டுப்பாடு, போராட்டங்கள், மற்றும் வன்முறைகள் குறித்து, அந்த பயண எச்சரிக்கை அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற பயண ஆலோசனையை பிரித்தானியா ஏற்கனவே வழங்கியிருந்தாலும், இறுதியாக வெளியிடப்பட்டுள்ள பயண ஆலோசனை கடுமையானதாக உள்ளது.

இந்த வாரஇறுதியில் பெரியளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்ற தகவல்கள் பரவுகின்றதால் தான், பிரித்தானியா இந்த பயண எச்சரிக்கையை விடுத்திருக்கலாம் என, அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கூறியிருந்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சரான அவருக்கு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்குத் உகந்த சூழல் இல்லை என்பது தெரியாமல் போயிருக்காது.

எரிபொருள் இல்லாத நிலையினால், சுற்றுலாப் பயணிகளால் இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மின்வெட்டினால், சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களையும், பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள்.

உணவுப்பொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு நெருக்கடியினால், உள்ளூர் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்ற உள்ளூர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு, விரும்பிய இடங்களை பார்க்க முடியாத -  விரும்பிய சூழலில் இருக்க முடியாத – விரும்பிய உணவை உண்ண முடியாத நிலை இருக்குமானால், அவர்கள் அந்த இடத்தை தவிர்க்கவே முனைவார்கள்.

கோவிட்டுக்குப் பின்னர், மீள் எழுச்சி பெறத் தொடங்கிய சுற்றுலாத் துறை, ஏப்ரலுக்குப் பின்னர் சரிவைக் கண்டது என்றால், அதற்கு பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பங்களும் தான் பிரதான காரணம்.

மே மாதம்,  30,207 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், ஜூன் மாதம் சற்று அதிகரித்து, 32,865 சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் பதிவாகியிருக்கின்றன.

இதன் அடிப்படையில் தான், அடுத்த மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவுக்காக பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவு சற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அரசாங்கம் நம்பியது.

ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவாக அதிகரித்து வரும் வன்முறைகள், சமூக பாதுகாப்பின்மை, குழப்பங்கள், போராட்டங்களால், பிரித்தானியா, நியூசிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள், பயண எச்சரிக்கைகளை வெளியிட்டிருகின்றன.

கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும், பிரித்தானியாவினது ஆகப் பிந்திய பயண எச்சரிக்கை தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

ஏனென்றால், அத்தியாவசியமின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று உறுதியாக அழுத்தம் கொடுக்கிறது இந்த பயண ஆலோசனை.

பிரித்தானிய வெளியுறவு பணியகத்தின் பயண ஆலோசனைக்கு எதிராக, இலங்கைக்கு சென்றால், பயணக் காப்புறுதியை செல்லுபடியற்ற தாக்கி விடும் என்று பிரித்தானிய காப்புறுதிச் சங்கம் எச்சரித்திருக்கிறது.

இது மிக முக்கியமானதொரு விடயம். இலங்கைக்கு வரும் போது எத்தகைய இழப்புகளை எதிர்கொண்டாலும், அதற்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை சுற்றுலாப் பயணிகளுக்கு இருப்பது ஒரு மேலதிக பாதுகாப்பு ஆகும்.

அந்த காப்புறுதி கிடைக்காது என்ற நிலையில், இலங்கைக்கு வருவதற்கு எவரும் ஒன்றுக்குப் பலமுறை யோசிக்கவே முற்படுவார்கள்.

அதுமட்டுமன்றி, வெளியுறவு பணியகத்தின் பயண எச்சரிக்கையின் விளைவாக தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிய எவரும், புதிய இடம் ஒன்றுக்கு செல்வதற்கு அவர்களின் காப்புறுதியை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பிரித்தானிய காப்புறுதிச் சங்கம் கூறியிருக்கிறது.

இது, மாற்று இடம் ஒன்றுக்கு அவர்களைப் பயணம் செய்யத் தூண்டுகின்ற விடயமாகும். இலங்கைக்கு இந்த வாரம் இல்லாவிட்டால் அடுத்தவாரம் செல்லலாம் என்ற தெரிவுக்குள் அவர்கள் செல்வதை தடுக்கிறது இந்த அறிவிப்பு.

இது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஏனென்றால், இலங்கைக்கு கடந்த ஆறு மாதங்களில் பயணம் மேற்கொண்ட 411,377 சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்களை அடுத்து, பிரித்தானியர்களே இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் 49,453, பேராகும். இது கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு. அதுபோன்று, ஐந்தாமிடத்தில் உள்ள பிரான்சில் இருந்து, 21,683 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வந்தவர்கள் மொத்த சுற்றுலாப் பயணிகளில், ஆறில் ஒரு பங்கினரகும். பிரித்தானியா, பிரான்ஸ், நியூசிலாந்தின் பயண எச்சரிக்கைகள், எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, ஏரோ புளொட் விவகாரத்தினால், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக சரிந்து விட்டது.

அதனைச் சமாளிக்கவும், எரிபொருள் கடனைப் பெறுவதற்காகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி புனுடன், தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

இதன்போது அவர், இடைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் ஏரோ புளொட் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கிறார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சுற்றுலாத் துறையை முழுமையாக மீட்டெடுக்காது. பிரதான பிரச்சினையாக இருப்பது பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பங்களும், உறுதியற்ற நிலையும் தான்.

அதனைச் சரி செய்ய வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எல்லாத் தரப்புகளும் வலியுறுத்துகின்றன.

ஆனால் அந்த ஒரு தெரிவை மட்டும் அவர் கருத்தில் கொள்ளத் தயாராக இல்லை. சுற்றுலாப் பயணிகளையும், வெளிநாடுகளையும், கவர வேண்டுமானால், அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.

நாட்டின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு எதையும் செய்ய முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது.

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு, அமைச்சர் ஹரின் பெர்னான்டோ திட்டமிடுவதைப் பார்க்கும் போது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலத் தான் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54