மீண்டும் ஆட்சி மாற்றம் ?

Published By: Digital Desk 5

10 Jul, 2022 | 01:15 PM
image

சத்ரியன்

“ரணில் ஆட்சியைக் கவிழ்க்க நாமல் திட்டங்களைப் போட்டுக் கொண்டு செயற்படுகிறார் என்பது, ராஜபக்ஷ குடும்பம் மீள் எழுச்சிக்காக தங்களைத் தயார்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது”

 “ராஜபக்ஷக்களின்  மீள் எழுச்சிக்கான கனவு நாட்டைப் பொறுத்தவரை ஆபத்தானது. மீண்டும் நாட்டை அழிவுகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கே அது வழிவகுக்கும்”

ஒற்றை ஆளாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தாலும், ஒரு அரசாங்கத்தைக் கட்டியாளும், அதிஷ்டத்தைக் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எந்த நேரத்திலும் தனது அதிகாரத்தை பறிகொடுக்க கூடிய நிலையிலேயே இருக்கிறார்.

அவரிடம் இப்போதுள்ள பிரதமர் பதவி மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இரண்டு தரப்புகள் வெளிப்படையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஒன்று, பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் சக்தி. இரண்டு, அதிகாரத்தை இழந்து நிற்கும் ராஜபக்ஷ விசுவாசிகளைக் கொண்ட மொட்டு அணி.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி மற்றும் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அதிகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

இருவரையும் பதவி விலக வேண்டும் என்று சஜித் பிரேமதாச போராட்டங்களை நடத்த தொடங்கியிருக்கிறார். அவர் அந்த கோரிக்கையை வெளிப்படையாக வலியுறுத்தியும் வருகிறார்.

அத்துடன், ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளில் ராஜபக்ஷவினரும், அவர்களுக்கு விசுவாசமான பொதுஜன பெரமுனவினரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதற்கான முனைப்புகளின் ஒரு கட்டமாக, மொட்டு அரசின் பங்காளிகளாக இருந்த 10 கட்சிகளின் தலைவர்களுடன் நாமல் ராஜபக்ஷ சந்திப்பை நடத்தியிருக்கிறார்.

அவர், மீண்டும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை உருவாக்கும் யோசனைகளை அவர்களிடம் முன்வைத்திருக்கிறார்.

ஆனால், அவர்கள் அதனை நிராகரித்திருக்கிறார்கள்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களின் தலைமையிலான அந்தக் கட்சிகள், மீண்டும் ராஜபக்ஷவினருடன் இணைந்து செயற்படுவதில்லை என்ற தீர்மானித்திருக்கின்றன. இதனை திஸ்ஸ விதாரண உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்தக் கட்சிகளுக்கு, ரணில் விக்கிரமசிங்கவின் மீதோ, தற்போதைய அரசாங்கத்தின் மீதோ நம்பிக்கை அல்லது நல்ல அபிப்பிராயம் கிடையாது.

ஆனாலும், இந்த அரசாங்கத்தை கவிழ்த்து, மொட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு அவர்கள் கை கொடுக்கத் தயாராக இல்லை. 

சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழும் நிலைக்கு தாங்கள் பொறுப்பாளியாக அவர்கள் தயாரில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியதும், அதில் பங்காளிகளாக இருக்காமல், வெளியே போனவர்கள் தான் அவர்கள்.

கடைசி நேரத்தில் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

அவர்கள் தற்போது நாமலின் திட்டத்துக்கு இணங்கி, மீண்டும் மொட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவத் தயாராக இருக்காதமை ஆச்சரியமில்லை.

அதேவேளை, மீண்டும் அதிகாரத்துக்கு வரும் திட்டத்துடன் ராஜபக்ஷவினர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ, பகிரங்கமாக இந்த முயற்சிகளை முன்னெடுக்காவிடினும், நாமல் ராஜபக்ஷவினால் அவ்வாறு இருக்க முடியாது.

ஏனென்றால் அவர் ராஜபக்ஷ குடும்பத்தின் அடுத்த தலைமுறை தலைமைத்துவத்துக்காக தயார்படுத்தப்பட்டவர். அவர் ஒதுங்கிச் சென்றால், ராஜபக்ஷ குடும்பத்தின் கையில் இருந்து அதிகாரம் நிரந்தரமாக விட்டுப் போகும்.

முன்னர் ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்த பலர் இப்போது அவர்களுக்கு ஆதரவளிக்க மறுக்கிறார்கள். அவர்களில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

இன்னும் சிலர் ராஜபக்ஷ குடும்பத்தினரால் மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியாது என்கிறார்கள். முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்டவர்கள் அவர்களில் அடக்கம்.

ஆனாலும், ரணில் ஆட்சியைக் கவிழ்க்க நாமல் திட்டங்களைப் போட்டுக் கொண்டு செயற்படுகிறார் என்பது, ராஜபக்ஷ குடும்பம் மீள் எழுச்சிக்காக தங்களைத் தயார்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே, பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி,கட்சியை பலப்படுத்தி, தேர்தல்களுக்கு தயார்படுத்தி வருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.

இப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், அதனை உறுதிப்படுத்துவது போல, இனி எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டு தான் வெற்றி பெறும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு குறையவில்லை என்றும் மொட்டுக்கான மக்களின் ஆதரவு வீழ்ச்சி காணவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தோல்வி நிலையில் உள்ள எந்த தரப்பும் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக  இருப்பதில்லை.

தோல்வி நிலையை ஒப்புக்கொள்வது மொட்டு அணிக்கும், ராஜபக்ஷவினருக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே,நம்பிக்கையூட்டக் சூடிய விதத்தில் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், அவர்களின் மீள் எழுச்சிக்கான கனவு நாட்டைப் பொறுத்தவரை ஆபத்தானது. மீண்டும் நாட்டை அழிவுகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கே அது வழிவகுக்கும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ராஜபக்ஷவினர் ஒட்டுமொத்த நாட்டையும் அழிவுப்பாதைக்குள் தள்ளி விட்டனர்.

அதனால் தான், இன்றைய நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கு ராஜபக்ஷ குடும்பமே தடைக்கல்லாக இருக்கிறது அவர்கள் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியிருக்கிறார்.

ராஜபக்ஷவினரைப் பொறுத்தவரையில் அதிகாரத்தை மீளப் பெற வேண்டும் என்பது தான் இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் எந்த வழிமுறைகளையும் கையாளக் கூடும்.

மொட்டு தரப்பினரின் இலக்குகளை நிறைவேற்றுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ முழு ஒத்துழைப்பை வழங்குவாரா இல்லையா என்பது கேள்விக் குறி.

ஏனென்றால், ரணில் அரசாங்கத்தை நீக்கி விட்டு, மொட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஆனால் அதற்கு கோட்டாபய ராஜபக்ஷ சரியான பதிலை அளித்திருக்கவில்லை. அவர் அதற்கு உடன்படவில்லை என்பதையே அது வெளிப்படுத்தியது.

அவர் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரையில், ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்கு ஆபத்து வராது.

ரணில் அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும், பொருளாதார மீட்டெடுப்பு திட்டங்கள் தோல்வியடையும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும் முயற்சிகள் தோல்வி காணும் போது, தான் கோட்டா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்.

அதற்கிடையில், ரணில் அரசாங்கத்தைக் கவிழ்த்து மற்றொரு அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்தால், அது உதவிகளைப் பெறும் முயற்சிகளைத் தடைப்படுத்தும் என்பது அவருக்குத் தெரியாததல்ல.

ஆனாலும், கோட்டா எப்போது எந்த முடிவை எடுப்பார் என்று கூறமுடியாது. அவர் கடந்த காலங்களில் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகளே அதற்குக் காரணம்.

உர இறக்குமதி தடை உள்ளிட்ட விடயங்களில் அவர் தன்னிடம் இருந்த நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் நம்பினாரே தவிர, புறச் சூழலையோ, பிறரின் ஆலோசனைகளையோ கருத்தில் கொள்ளவில்லை.

அதன் எதிர்விளைவு எவ்வாறானதாக இருக்கும் என்றும் அவர் யோசிக்கவுமில்லை.

அதுபோன்று அவர் மீண்டும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை குறிப்பாக ராஜபக்ஷவினரை அரியாசனத்தில் அமர்த்தும் முடிவை எடுக்கமாட்டார் என்பது நிச்சயமில்லை.

ஒருவேளை அவர் அவ்வாறான முடிவை எடுத்தால், அது ராஜபக்ஷவினரின் அரசியலுக்கு முடிவு கட்டினாலும் ஆச்சரியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22