(ந.ஜெகதீஸ்)

அரசாங்கத்தின் விருப்பத்திற்காகவோ சர்வதேசத்தின் தேவைக்காகவோ  முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது. உலமாக்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகளின் கலந்தாலோசனையின் பின்னரே அப்படியான மாற்றம் ஒன்று தேவையாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இலங்கை ஜீ.எஸ்.பி சலுகை பெறுவது தொடர்பாக  முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கோரப்பட்டதாக வெளிவரும் தகவல் தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம், விவாக இரத்துச் சட்டத்தில் தேவையான மாற்றங்கள் குர்ஆன்,  சுன்னா அடிப்படைகளுக்கு மாற்றமில்லாமல் இருந்தால் மட்டுமே முஸ்லிம் சமூகத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். மாறாக எந்த சர்வதேச அமைப்புகளினதும் நிகழ்ச்சி நிரலின் தேவைகளுக்கு ஏற்றவாறு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்க இடம்கொடுக்க முடியாது.

அரசாங்கம் முஸ்லிம் விவாக  விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்றை நியமித்திருக்கிறது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்காக உபகுழு ஒன்றையும் நியமித்துள்ளது. 

இந்த உபகுழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உலமா சபையினர் துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகளின் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின்  ஆலோசனைகளைப்பெற்றே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான முடிவை அரசாங்கம் அல்ல முஸ்லீம்களே எடுக்கவேண்டும் என்றார்.