மீனவர்களின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண விசேட குழு நியமனம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை

Published By: Vishnu

08 Jul, 2022 | 11:52 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மீனவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திலிப் வெதஆராச்சி மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரால் எரிபொருள் தட்டுப்பாட்டினால் மீனவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து இது தொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கு பிரதமரால் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

அதற்கமைய 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். எரிபொருள் நெருக்கடியால் மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதன் போது தெளிவுபடுத்தினார்.

அதற்கமைய அமைச்சர்களாக காஞ்சன விஜேசேகர மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் , மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமரால் ஆலோசனை வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான திலிப் வெதஆராச்சி, நிமல் லன்சா, நிரோஷன் பெரேரா, பியல் நிஷாந்த, மயந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் மேற்குறிப்பிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இக்குழுவிற்கு திறைசேறியின் அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிரதமர் , துறைக்கு பொறுப்பான அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளையும் இக்குழுவில் உள்வாங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்