மனித உரிமைகளை காப்பதும் முக்கியம்

Published By: Ponmalar

08 Jul, 2022 | 05:09 PM
image

எஸ்.ஜே.பிரசாத்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது எவ்வித போக்கிற்கு மாறும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மக்கள் வறுமையில் செய்வதறியாது தத்தளித்துக்கொண்டிருக்க, எரிபொருளுக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்போரின் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்தியாவசிய சேவை என்று வகைப்படுத்தி ஒரு புறம் ஒரு சாராருக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கிக்கொண்டிருக்க ஏனைய பொதுமக்கள் அத்தியாவசியமற்றவர்களா என்ற கேள்வி எழாமல் இல்லை.

சுகாதாரத்துறை அத்தியாவசியம்தான். வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்களுக்கும் எரிபொருள் வழங்க வேண்டியது கட்டாயம்தான் அதை மறுப்பதற்கில்லை.

ஆனால் நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கும் எரிபொருள் வேண்டாமா? அதற்கு சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்பதை இந்த கட்டுப்பாட்டை விதித்தவர்கள் சிந்திக்கவில்லையே?

இது எல்லாவற்றையும் ஒரு புறம் வைத்துவிட்டு பார்த்தால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்புக்கென இருக்கும் படையினர் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது தற்போது மிகப்பெரிய அச்சமாக நாட்டில் உருவெடுத்துள்ளது.

அண்மையில் குருநாகல், யக்கபிட்டிய இராணுவ முகாம் கட்டளைத் தளபதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வந்த நிலையில், நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

குருநாகல் யக்கபிட்டிய பிரதேசத்தில் உள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கியதாக கூறப்படும் இராணுவ லெப்டினன்ட் கேணல் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இராணுவச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய சேவைகளின் உறுப்பினர்கள், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்களை விநியோகிப்பதற்கு பொலிஸாருக்கு உதவுவதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸாரினால் நிர்வகிக்கப்பட வேண்டிய விடயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அல்லாமல் இராணுவத்தை நிலைநிறுத்துவது பொருத்தமற்றதாகவே பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தை சட்டத்தரணிகள் சங்கமும் குறிப்பிட்டிருந்தது.

இதற்கெல்லாம் இராணுவம் ஏன் பயன்படுத்தப்படுகிறது? காவல்துறையால் முடியாதா? என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

கடந்த மே மாதம் காலிமுகத்திடல் போராட்டாரக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய நாளிலிருந்து நாட்டின் பாதுகாப்பு கட்டுப்பாடு இராணுவத்திடம் வந்தது. இதுவே மிகப்பெரிய அச்சமாக உருவானது.

இந்த அரசின் கீழ், கொரோனா தொற்றுக் காலத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றுவதற்கும் இராணுவம் பயன்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசிக்கும் தனிப்படைத்தலுக்கும் இராணுவத்தைப் பயன்படுத்தியமை அவர்களின் வளங்களை பயன்படுத்தியமை ஓரளவுக்கு ஏற்புடையது என்றாலும்கூட சிவில் சேவைகளுக்கும் இராணுவத்தையும் முப்படைகளையும் களமிறக்குவது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.

காவல்துறைதான் உண்மையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் இராணுவத்தை அழைப்பது ஏற்புடையதல்ல என்றும் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. விமானப்படை வீரர்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறைந்திருக்கின்றனர்.

இதேவேளை யுத்த காலத்தைப் போன்று நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது ஆயுதப்படையினர் பெருமளவிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலைகொண்டிருப்பது மக்களை பயமுறுத்துவதாக சமூக ஊடக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தற்போது மனிதாபிமான உதவிகளை உலகளவில் பெற்று வருகிறது. பட்டினியால் சாப்பிட வரிசையில் காத்திருக்கும் ஏழை மக்களுக்கு என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்க, அன்றாட வாழ்வாதாரத்திற்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கும் மக்கள் மீது  பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்துகின்றது.

ஏன் தாக்குதல் என்று கேட்டால் கலகம் விளைவிக்க முயன்றனர் என்று கூறுகிறது. எரிபொருள் வேண்டும் என்று கேட்பது கலகமா? யாரோ செய்த தவறுக்காக நாட்டு மக்கள் அனுபவிக்கும் இந்த வறுமைக்கு நடுவே மக்களை குற்றஞ்சுமத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படி மனித உரிமைகள் நாட்டில் மீறப்படும் பட்சத்தில் ஐரோப்பிய யூனியன், ஜப்பான், உலக வங்கி, ஐ.எம்.எப். ஒருபுறமிருக்க, தமிழகத்திலிருந்து கூட எங்களுக்கு உதவிகள் கிடைக்காது என்றும் தங்கள் அச்சங்களை வெளிப்படுத்தி நிற்கின்றனர் சிவில் அமைப்பினர்.

எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கட்டுப்பாடு என்பன இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் பெற்றோலிய அமைச்சு கூறுகிறது. ஆனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் இராணுவத்தினரால் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மொரட்டுவை பிரதேசவாசிகளுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையம் என்பது போர்க்களம் அல்ல, தனது நடவடிக்கையினால் சிவில் சமூகத்தில் அச்சத்தை உருவாக்கிவிடாமல் இராணுவம் கடமையாற்ற வேண்டியது கட்டாயம்.

இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் இவ்வாறான செயலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத போது பொலிஸாருக்கு உதவியாக இராணுவம் அழைக்கப்பட்டாலும், பொதுமக்களை தாக்குவதற்கு இராணுவ அதிகாரிக்கு உரிமை இருக்கிறதா?

எவ்வாறானதொரு நிலையிலும் ஒருவர் இன்னொருவரை தாக்குவது மனித உரிமை மீறல் அல்லவா? அப்படியிருக்க ஒரு சாதாரண நபரை இரு பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, என்ன ஏது என்றுகூட விசாரிக்காமல் கால்களை தூக்கி அந்த நபரின் நெஞ்சிலேயே உதைந்திருப்பது பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் காட்டுகின்றதல்லவா?

இத்தனைக்கும் அவர் கேட்டது என்னவோ எரிபொருளைத்தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13