பிரதமர் நியமனத்தில் ஜனாதிபதி வகுத்த வியூகம் வெற்றியளித்ததா ?

Published By: Digital Desk 5

08 Jul, 2022 | 12:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பினால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பெரும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கடந்த மே மாதம் 12ஆம் திகதி பிரதமராக  நியமித்து பொருளாதார மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு துரித தீர்வை வழங்கி தமக்கு எதிரான போராட்டங்களை சமாளிக்க வியூகம் வகுத்தார்.

ஆனால் அந்த வியூகத்திற்கு எதிர்பார்த்தளவு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதா என்பது சந்தேகத்திற்கிடமான விடயமாகின்றது.

ஏனெனில் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன. ஜனாதிபதியால் பொது இடங்களுக்கோ, மக்கள் சந்திப்புகளுக்கோ, பாராளுமன்றத்திற்கோ கூட செல்ல முடியாதளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான வரிசை பல கிலோமீற்றர் தூரத்திற்கு நீண்டமை, நாளாந்த மின்விநியோக துண்டிப்பு ஆகிய பல விடயங்கள் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டமாக கிளைத்தெழுந்ததுள்ளன.

இவ்வாறான பின்னணியில் மே 09ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அலரிமாளிகையில் ஒன்று கூடி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிவழி ஆர்ப்பாட்டகாரர்கள் மீது வன்மையான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டதை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம்  தீவிரமடைந்தது. இதனால் பல அரசியல்வாதிகளின் வீடுகளும் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

அரசியலில் சிரேஷ்ட தலைவராக வலம் வந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தை மே 09 சம்பவம் கேள்விக்குள்ளாக்கியது.

மே மாதம் 09ஆம் திகதி காலை அலரி மாளிகையில் ஆதரவாளர்கள் மத்தியில் 'எக்காரணிகளுக்காகவும் பதவி விலக போவதில்லை' என அரசியல்வாதிகளுக்கு உத்வேகமளித்த மஹிந்த ராஜபக்ஷ மே 09ஆம் திகதி மாலை பொழுதில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்து குடும்பத்தாருடன்; திருகோணமலை கடற்படை தலைமையகத்தில் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் தஞ்சமடைந்தார்.

அரசியல் ரீதியில் இக்கட்டான நிலைமையினை எதிர்க்கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் பதவி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் சஜித் பிரேமதாஸவை விட அரசியலில் புலமை பெற்ற ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது சிறந்ததாக அமையும் என ஒரு தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மே 12ஆம் திகதி ஒரு ஆசனத்தில் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக தெரிவு செய்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் போராட்டம் ஆகிய காரணிகளினால் பதவி விலகும் நிலைப்பாட்டிற்கு வந்த ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தடுத்து பாதுகாத்துள்ளதை பல்வேறு காரணிகளின் ஊடாக விளங்கிக்கொள்ள முடியும்.

விவசாயத்துறை உள்ளிட்ட மேற்கொள்ளப்பட்ட ஒரு சில தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் எதிர்ப்புகளுக்கும்  பிரதான காரணம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் தோல்வியடைந்த ஒரு தலைவராக பதவி விலக போவதில்லை என குறிப்பிட்டமை நகைப்புக்குரியது என பொது மேடைகளில்  விமர்சிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினை பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தின் ஊடாக பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என குறிப்பிட்டமை ஜனாதிபதியை பாதுகாக்கும் ஒரு தர்க்கமாகவே கருதப்படும்.

ஆனால் மக்களின் போராட்டமோ பாரிய மாற்றத்திற்கு வித்திட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் போராட்டம் பலவீனப்படுத்தியது. போராட்டம் இன்றேல் மஹிந்த ராஜபக்ஷ இன்றும் பிரதமராக பதவி வகித்திருப்பார்.

பொருளாதார நெருக்கடி,விசேடமாக வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி போன்ற சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது மற்றும் அதனை தொடர்ந்து நட்பு நாடுகளினதும்,உலக நாடுகளினதும் நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும். இதுவே இறுதி தீர்வு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல முறை பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.சட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள பர்மியுமாவை தலைமையகமாக கொண்டுள்ள லஸார்ட் நிறுவனமும்,லன்டனை தலைமையகமாக கொண்டுள்ள க்ளிபர்ட் சான்ஸ் நிறுவனமும் நியமிக்கப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்;த்தை வெற்றிப்பெற்றால் வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு சற்று தீர்வு கண்டு, இலங்கை மீண்டும் மூச்சி விட வாய்ப்பு கிடைக்கப்பெறும். இருப்பினும் அது நீண்டகால தீர்வாக அமையுமா என குறிப்பிட முடியாது.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் எரிபொருள்,எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளுக்கு ஒப்பீட்டளவில் தீர்வு காண முடியும். இருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து முழு நாட்டு மக்களும் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ள போதும் ஜனாதிபதி தான் நாட்டை பாதுகாத்தார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெருமிதம் கொண்டு அரசியல் செய்கின்றது.  

எனவே தான் மக்கள் விடுதலை முன்னணி,முன்னிலை சோசலிச கட்சி,மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்படும் தரப்பினர் ராஜபக்ஷர்களின் அரசியலை முழுமையாக இல்லாதொழித்து,ஊழல் மோசடியற்ற ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இதனடிப்படையில் இன்றளவில் ஆட்சிக்கு எதிரான போராட்டம் குறைவடையவில்லை. போராட்டங்களின் பிரதான இலக்கு ஜனாதிபதியின் பதவி விலகளாகும்.

ஆகவே பிரதமராக ரணிலை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வகுத்த வியூகம் மக்களின் எதிர்ப்புகளுக்கு முன் என்னவாகியுள்ளது என்பதற்கு இன்றைய அரசியல் சூழல் சிறந்த வகையில் சான்றுபகிர்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04