(ரொபட் அன்டனி)

நான் சீனாவின் நிதியமைச்சர் அல்ல.   மாறாக இலங்கையின் நிதியமைச்சராகவே உள்ளேன். அந்தவகையில்   சீன தூதுவர் முன்வைத்துள்ள   விடயங்களை நிராகரிக்கின்றேன் என்று  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.  

சீனாவிலிருந்து பெறப்படும் கடன்களின் வட்டி விகிதம் அதிகம் எனில்  ஏன் தொடர்ந்தும்  சீனாவிடம் இலங்கை கடன் கோரவேண்டும் என்று  கடந்த செவ்வாய்க்கிழமை  இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷியான்லேங்   தெரிவித்திருந்த கருத்து குறித்தே நிதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பில் நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது  

இலங்கைக்கு 2 வீதத்தில்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று  சீன தூதுவர் தெரிவித்துள்ள கருத்துக்களை நிராகரிக்கின்றேன். சீனா  2 வீத வட்டியில் கடன் கொடுத்திருந்தால் இலங்கை 2 வீதம் மட்டுமே செலுத்தும். 2 வீதத்துக்கு அதிகமாக இலங்கைக்கு கடன்கொடுக்கவில்லை என்று சீனா கூறுமானால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.   காரணம் அப்படியானால் நாங்கள் 2 வீத வட்டி மட்டுமே செலுத்தவேண்டிவரும் என்றார்.