பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேர்தலை நடத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷவை கோரினேன். தேர்தலை நடத்தினால் ஏற்பட போகும் விபரீதங்கள் தொடர்பில் மஹிந்தவுக்கும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு தெளிவுப்படுத்தினேன். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ யுத்தக்குற்றம், மின்சார கதிரை, பொருளாதார சிக்கல், சர்வதேச விசாரணை என்ற பூகம்பங்களை காட்டி தேர்தலில் வெற்றி பெற முயற்சித்தும் முடியாமல் போனது. நான் சுதந்திரக் கட்சியை தோல்வியடையச் செய்தேன் என குற்றம் சுமத்துகிறார்கள். இறுதி 24 மணித்தியாலம் வரை என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது. எனவே நாட்டை தவறான பாதையில் நடத்திச் செல்வதை தடுப்பதற்காகவே அப்போது மஹிந்தவின் ஆட்சியிலிருந்து வெளியேறினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் ஆரம்பகட்ட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை மஹரகமவில் நடைபெற்றது. இந்நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இந்த தருணம் வரை கூட ஜனாதிபதியாக இருந்திருக்க முடியும். ஆனால் இரண்டு வருட ஆட்சிகாலம் இருக்கும் போதே தேர்தலை நடாத்த தீர்மானித்தார்.

 கட்சியின் பொதுச் செயலாளர் என்றவகையில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டாம் என வற்புறுத்தினேன். சிரேஷ்ட தலைவர்களின் கூட்டத்தின் போது, ஜனாதிபதி தேர்தல் நடத்தினால் எதிர்காலத்தில் என்ன விளைவு ஏற்படும் என்பதை தெளிவுப்படுத்தி ஒவ்வொருவருக்கும் கடிதம் வழங்கினேன். 

ஆனால் இறுதியில் பொதுவேட்பாளராக நான் தெரிவு செய்யப்பட்டேன். நான் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டது நீண்ட கால திட்டம் என்றார்கள். ஆனால் இறுதி 24 மணித் தியாலம் வரை எனக்கு ஒன்றும் தெரியாது.

நாடு தவறான பாதையில் சென்றது. இராணுவத்தினரை பாதுகாக்க வேண்டும், மின்சார கதிரையை நாட்டுக்கு கொண்டுவர அனுமதிக்க கூடாது. சர்வதே விசாரணைக்கு இடமில்லை. இந்த சவால்களை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட சம்மதித்தேன்.

சர்வதேச விசாரணை இடம்பெறும், நாட்டு தலைவரை மின்சார கதிரையில் ஏற்றுவார்கள், பாரிய பொருளாதார பிரச்சினை ஏற்பட போகின்றது, இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பூகம்பகங்ளை போட்டு மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற முயற்சித்தால் அவரால் முடியாமல் போனது.

நான் தேர்தலில் வெற்றி பெற்று மேற் கூறிய விடயங்களை இல்லாமல் செய்துள்ளேன். இது பாரிய வெற்றியாகும். உலகத் தலைவர்களை சந்தித்து எமது நாட்டு சுயாதீனம் தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளேன். சகல நாடுகளும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளன. இனி பொய்யான பிரசாரங்களுக்கு இடம் கிடையாது.

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அமெரிக்காவில் தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே தரைகுறைவாக சேறும் பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது அரசியில் சாதாரண விடயமாகும். எமது நாட்டில் சிறப்பான விடயங்களை முன்னெடுக்கும் போது இது போன்ற சில பிரச்சினைகள் ஏற்படுவது இயற்கை ஆகும். 

நானே சுதந்திரக் கட்சியை தோல்வியடைய செய்தேன் என குற்றம் சுமத்துகின்றார்கள். நான் ஒருபோதும் கட்சியை தோல்வியடை செய்யவில்லை. வெற்றிபெறவே செய்துள்ளேன்.

நான் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினேனே தவிர சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறவில்லை. 

என்னுடன் பல அமைச்சர்களும் மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்தே வெளியேறினார்கள். ஆனால் சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற்றன. 

இதில் நூற்றுக்கு 12 வீதமான வாக்குகள் உண்மையான சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றது. நான் பிறந்த இடமான பொலநறுவையில் 35 சதவீதமான வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

சுதந்திரத்தை மதித்து நடக்கும் எமது நாட்டில் கடந்த  ஆட்சியில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காணப்பட்டது.

தொடர் வெற்றிகளுடன் பயணித்த சுதந்திரக் கட்சி பிளவுகள், தோல்விகள் என பல சவால்களை சந்தித்த போதும் முன்னோக்கியே செல்கிறது.

எனவே எதிர்காலத்தில் நல்லதொரு ஆட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் அமையும்.