மாற வேண்டிய தருணம்

Published By: Digital Desk 5

03 Jul, 2022 | 02:17 PM
image

என்.கண்ணன்

இலங்கையின் கடன்கள், டொலர் கையிருப்பு போன்று, எரிபொருளும் இப்போது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது.

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் யாரோ ஒருவர் எரிபொருள் வரிசையில் நிற்கின்ற அளவுக்கு நிலைமை மாறி விட்டது.

முடக்கல் காலத்திலும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்திலும் கூட, இந்தளவுக்கு வீதிகள் அமைதியாக கிடந்ததில்லை.

அந்தளவுக்கு எரிபொருள் நெருக்கடி இப்போது மோசமடைந்திருக்கிறது. 

அதனுடன் கூடவே கறுப்புச் சந்தை வியாபாரிகளும், எரிபொருள் மாபியாக்களும் முளைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கறுப்புச் சந்தையில், இரண்டாயிரம் ரூபா வரை, பெற்றோல் விற்கப்படும் நிலை உருவாகி விட்டது.

இதனைப் பயன்படுத்தி, வாடகை வாகனங்களும், கட்டணங்களை பல மடங்கு அதிகரிக்க, சாதாரண மக்களால் மாத்திரமன்றி ஓரளவுக்கு வசதி படைத்தவர்களால் கூட, அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

டொலர் கள் பற்றாக்குறையினால், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேசிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள், சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது தான் மிகப் பெரிய குறைபாடு.

இந்தநிலை வரப் போகிறது என்று அரசாங்கத்துக்குத் தெரியும். ஆனால் அதற்கேற்ற வகையில், மக்களைத் தயார்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.

பாராளுமன்ற அறிவிப்புக்களை தாண்டி பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவும் எதையும் செய்யவில்லை. 

வெறும் எச்சரிக்கை அறிவிப்புகள் மட்டும், ஒரு தேசிய நெருக்கடிக்குத் தீர்வைத் தராது. அரசாங்கம் முழு அளவில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதற்கேற்ற திட்டங்களை வகுத்திருக்க வேண்டும்.

எரிபொருள் பங்கீட்டு அட்டை முறை, செயற்பாட்டுக்கு வர முன்னரே, கருவில் இறந்த குழந்தை போல, முடிவுக்கு வந்திருக்கிறது. முன்னைய தலைமுறைகள், சைக்கிள், மாட்டு வண்டி, கால்நடை என்று பழக்கப்பட்டவை.

இன்றைய தலைமுறை, மோட்டார் சைக்கிள் அல்லது மோட்டார் வாகனங்கள் இல்லாமல் வெளியே கால் வைக்கத் தயாராக இல்லாதது.

பால், பாண், பத்திரிகைகளை அருகில் உள்ள கடைகளில் சென்று வாங்குவதற்கும், பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் வாங்குவதற்கும் அவர்களுக்கு வாகனங்கள் தேவைப்படுகின்றன.

அவசியமற்ற தேவைகளுக்கு வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்ற பழக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் அல்லது அதனை தடுப்பதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்று சாத்தியப்படாமல், எரிபொருள் நெருக்கடியை தற்போதைக்கு மாத்திரமல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கூடத் தீர்க்க முடியாது.

எரிபொருளை உச்சத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதும், வீணடிப்பை தடுப்பதுவும் இத்தருணத்தில் முக்கியம்.

தேவையற்ற – அவசியமற்ற பயணங்களுக்காக எரிபொருள் பயன்படுத்தப்படுகின்ற போது, அவசியத் தேவைகளுக்கு அது கிடைக்காமல் போவதுடன், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நெருக்கடியையும் தீவிரப்படுத்தும்.

இதற்கு மாற்றம் ஒன்று அவசியம். 

அதாவது ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறுகின்ற முறைக்கு தயாராக வேண்டும்.

கொரோனா  தொற்று பரவிய போது, உலகமே தங்களின் பரபரப்பு இயக்கத்தை மாற்றிக் கொண்டது.  வீட்டுக்குள் முடங்கிய ஒரு வாழ்க்கை முறைக்கு தாவியது.

ஒரு நிமிடம் பிந்தினால் கூட, அரைநாள் விடுமுறையாக கணிக்கின்ற கண்டிப்பான நிறுவனங்கள் கூட, வீட்டில் இருந்து வேலை செய்வதை அனுமதிக்கின்ற முறைமைக்கு மாறின. காலமும் சூழலும் தான், அத்தகைய மாற்றங்களைத் தீர்மானிக்கிறது.

1990களுக்கு முன்னர், வடக்கிற்கும் கொழும்புக்கும் இடையில் மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக இருந்தது ரயில் போக்குவரத்து தான்.

ஆனால் போர்ச் சூழலினால், அது தடைப்பட கிளாலி கடலேரியை படகில் கடந்தும், ஊரியான் பாதையில் உழவு இயந்திரங்களில் ஏறியும், காங்கேசன்துறையில் இருந்து கப்பல் மூலமும், பலாலியில் இருந்து விமானத்திலும் செல்கின்ற நிலை காலத்துக்கு காலம் ஏற்பட்டது.

நெருக்கடிகள் ஏற்படுகின்ற ஒவ்வொரு சூழலிலும், போக்குவரத்தும் அதன் முறைமைகளும் மாற்றம் காணுகின்ற பாடத்தை கற்றவர்கள் நாம்.

ஆனால், இப்போது பெட்ரோலில் இருந்து மாற்றுப் பயண வழிகளை பயன்படுத்துகின்ற மாற்றத்துக்கு தயாராகவில்லை அல்லது தயார்படுத்தப்படவில்லை.

கிடைக்கின்ற குறைந்த வளங்களை அதிகபட்ச பயன்பாட்டுக்கு உள்ளாக்குவது தான் நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வழிமுறையாகும்.

இதற்கு பொதுப் போக்குவரத்து ஒரு முக்கியமான தீர்வு. போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள், இவ்வாறான சிக்கலைத் தீர்க்கின்ற ஒரு உபாயம்.

ஆனால், போக்குவரத்துச் சபை ஊழியர்கள், தாங்கள் கடமைக்கு வருவதற்கு, பெற்றோல் தரவில்லை என்று கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் தங்களுக்கு எரிபொருள் நெருக்கடி என்று காரணம் கூறி, பாடசாலைக்குச் செல்ல மறுக்கிறார்கள். எல்லாத் துறையினருக்கும் பெற்றோல் தான் பிரச்சினையாகத் தெரிகிறதே தவிர, அந்தப் பிரச்சினையை தீர்க்கின்ற மாற்று வழிகளை தேடுகின்ற நிலை இல்லை.

இன்றைய பிரச்சினை தான் பெரும்பாலானோருக்கு முக்கியமானதாக உள்ளது.  நாளை எரிபொருள் நெருக்கடி தீர்ந்து விடும். அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தும், உருவாக்கப்பட்ட ஏனைய நெருக்கடிகளில் இருந்தும் விடுபட முடியாது.

உதாரணத்துக்கு, ஆசிரியர்களின் போராட்டத்தினால், மாணவர்களின் கல்வி பின்தள்ளப்படுகிறது.  ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கொரோனா  பரவல், கல்வியை மோசமாக பாதித்து விட்டது.

இதற்குப் பின்னரும், எரிபொருள் போன்ற காரணங்களை முன்வைத்து, அதனை பாதிப்புக்குள்ளாக்குவது அபத்தம்.

எரிபொருளைப் பயன்படுத்தி தான், பாடசாலைக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு நெகிழ்வான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

சில அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டும் உள்ளன.

அயலில் உள்ள பெரும்பலானவர்கள், மற்றையவர்கள் விடுமுறையில் இருக்க நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமா என்று சிந்திக்கின்ற நிலை மாற்றம் காண வேண்டும்.

எல்லாத் துறைகளிலும் இந்த நிலை காணப்படுகிறது. எரிபொருள் நெருக்கடியை காரணம் காட்டி வீட்டுக்குள் பதுங்குகின்ற நிலை ஏற்பட்டால், ஒட்டுமொத்த வாழ்வியலும் முடங்கிப் போகும்.

இதனை சாட்டாக வைத்து விவசாயி பயிரை விளைவிக்காது போனால், உணவு கிடைக்காது.

மருத்துவர்கள் சேவைக்கு செல்லா விட்டால், மருத்துவ மனைகள் இயங்காது.  எல்லா துறைகளுமே இந்த ஒன்றைக் காரணத்தில் தொங்கிக் கொண்டிருந்தால், எல்லாமே முடங்கிப் போகும்.

போர்க்காலங்களில், வடக்கிற்கு பெற்றோல் கிடைத்ததில்லை. பெரியளவில் வாகனங்கள் இருந்ததில்லை.

அப்போது யாரும், பெற்றோல் தந்தால் தான் வேலைக்கு வருவோம் என்று அடம் பிடித்ததும் இல்லை.  தூர இடங்களுக்கு நியமனம் கொடுக்கப்பட்ட போது அதனை யாரும் தட்டிக்கழிக்கவும் இல்லை.

வேலை கிடைத்தால் போதும் என்று சைக்கிளில் செல்வதற்கும் தயாராக இருந்தனர். இன்று யாரும் அந்த நிலைக்கு வரவில்லை. அவ்வாறான மாற்றத்துக்கும் தயாராகவில்லை. அரசாங்கமும் தயார்படுத்தவில்லை.

எரிபொருள் என்பது இன்று உலகளாவிய பிரச்சினையாக மாறி விட்டது. 

பெற்றோலின் விலை, இலங்கையில் 500 ரூபாவைத் தொடுகிறது என்றால், பிரித்தானியாவில் 2 பவுண் ஸ்ஸுக்கும், அமெரிக்கா, கனடாவில், 2 டொலருக்கும், ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் 2 யூரோவுக்கும் அதிகமாகவே விற்கப்படுகிறது.

இது ஒரு உலகளாவிய பிரச்சினை. இந்த பிரச்சினை குறுகிய காலத்துக்குள் தீர்க்கப்பட முடியாத ஒன்று.

அதற்காக உலகத்தின் இயக்கம் நிறுத்தப்படாது. உலக இயக்கத்துக்கேற்ப இலங்கையும் இயங்க வேண்டும். இல்லையேல், இன்னும் இன்னும் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதனால் எல்லா துறைகளும் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். இன்றைய சூழலில் இருந்து, இன்றைய வழக்கங்கள், பழக்கங்களில் இருந்து, மாற வேண்டும். 

அத்தகைய மாற்றம் தவிர்க்க முடியாதது. அதற்குத் தயாராக இல்லாதவர்களால், முன்னகர முடியாமல் முடங்கும் நிலைதான் ஏற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48