இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்றே ஜப்பான் தூதுவர் கூறினார் : விடயத்தை விளக்குகிறார் சுமந்திரன்

Published By: Digital Desk 5

02 Jul, 2022 | 01:17 PM
image

(நா.தனுஜா)

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நிகழ்த்திய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், இனிவருங்காலங்களில் இலங்கைக்கு ஜப்பான் உதவிகளை வழங்காது என்று கூறவில்லை எனவும், மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றே கூறினார் எனவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நடத்திய சந்திப்பின்போது,

இனிவருங்காலங்களில் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கப்போவதில்லை என்றும் அவர்களிடம் ஜப்பான் தூதுவர் உறுதியாகத் தெரிவித்ததாக தமிழ் மற்றும் ஆங்கிலப்பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்தியையடுத்து, சமூகவலைத்தளங்களிலும் அச்செய்தி பரவலாகப் பகிரப்பட்டது.

அதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து அறிக்கையொன்றை வெளியிட்ட ஜப்பான் தூதரகம், இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கப்போவதில்லை என்று ஜப்பான் தூதுவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்திருந்தது. 

அதுமாத்திரமன்றி (01) வெள்ளிக்கிழமை  ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடாகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் விளக்கப்பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருக்கும் விடயங்கள் வருமாறு:

இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் 3 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

அதன்படி தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், அச்சந்திப்பில் நான் கலந்துகொண்டிருக்கவில்லை. இருப்பினும் நான் அவர்கள் மூவருடனும் கலந்துரையாடினேன். 

அதன்படி குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தவர்களுடன்பேசி விடயத்தைத் தெளிவுபடுத்திக்கொண்டு, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற ரீதியில் இந்த விளக்கத்தை வழங்குகின்றேன்.

ஜப்பான் இலங்கைக்கு உதவிகளை வழங்காது என்று ஜப்பான் தூதுவர் கூறவில்லை. மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றே அவர் கூறினார். 

அதன்படி ஜப்பான் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகசந்திப்பில் பேசிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் தூதுவர் கூறிய அதே விடயத்தையே கூறினார்கள்.

மேலும் ஜப்பான் இலங்கையுடன் நீண்டகாலமாகப் பேணிவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லுறவிற்கு நன்றி தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ச்சியான உதவிகளை வழங்குமாறும் ஜப்பான் தூதுவரிடம் கேட்டுக்கொண்டனர். 

நிதியுதவிகள் மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஜப்பான் செய்திருக்கும் பங்களிப்பை நாம் நன்கறிவோம். 

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட தவறான செய்தி குறித்து நாம் கவலையடைகின்றோம் என்று தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12