மெளனித்துப்போயுள்ள மலையக அரசியல்

Published By: Digital Desk 5

26 Jun, 2022 | 06:48 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

மலையக மக்கள் எவ்வாறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பதை பதுளை மாவட்ட எம்.பியான வடிவேல் சுரேஷும்  கொழும்பு மாவட்ட எம்.பியான மனோ கணேசனும் மட்டுமே  பாராளுமன்றில் சற்று ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். 

நுவரெலியா மாவட்ட எம்.பிக்களின் சத்தத்தை பெரிதாகக் காணவில்லை. இ.தொ.கா.வின் இரு உறுப்பினர்களும்  எங்கு இருக்கின்றார்கள் என்பதை மக்களே அறியாதுள்ளனர்.

எனினும் கடந்த. புதன்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றியிருந்த ஜீவன் தொண்டமான் எம்.பி, பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் தரிசு நிலங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட  வேண்டும் என்றும் 20,30 வருடங்களாக விவசாயம் மேற்கொள்ளும்  நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

தொழிலாளர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு போராட்டத்துக்கும் தான் களமிறங்க தயார் என்றும்  அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த போது கூறிய விடயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

தோட்டத்தொழிலாளர்களின் காணி உரிமை தினம் 21ஆம் திகதி மலையகமெங்கும் நினைவு கூரப்பட்டாலும் அது குறித்து நுவரெலியா மாவட்டத்தின் எந்தவொரு அரசியல்வாதியும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படி ஒரு தினம் ஏன் அனுஷ்டிக்கப்படுகின்றது, பின்னணி சம்பவம் என்ன என்பது குறித்து கூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.  பாராளுமன்றத்தில் பேசிய மலையக எம்.பிக்கள், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே   ,விவசாயம் செய்ய தரிசு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்று கூறினார்களே ஒழிய அவர்களுக்கு இந்த காணி உரிமை விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. 

மலையக பெருந்தோட்ட மக்கள் சம்பளத்துக்காகவும் வீடுகளுக்காகவும் போராடிய காலத்தை சொந்த நிலத்தைப் பெற பயன்படுத்தியிருக்கலாம் என்று இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஜீவன் தொண்டமான் கூறியிருந்தார்.  ஆனால் அவை எல்லாவற்றையும் இங்கு மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.  

இதேவேளை தமது கட்சியின் சில உறுப்பினர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கு கட்சியின் தலைமைத்துவம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  எம்.பிக்களான ஜீவன் தொண்டமான் மற்றும் ராமேஷ்வரன் ஆகியோர்  ஊடகங்களை தவிர்த்து வருவதாகவே  தெரிகின்றது.  

காணி உரிமைப் பற்றி இ.தொ.கா உறுப்பினர்கள் பாராளுமன்றில் பேசாமலிருந்ததற்கு நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் மீதான காணி குற்றச்சாட்டும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அல்லது உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்கால வளங்களாக இருக்க வேண்டிய பல காணிகள் இன்று பலரின் தனிப்பட்ட சொத்துகளாக மாறியுள்ளன. 

இது தொடர்பில் இ.தொ.கா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனென்றால் அதிக குற்றச்சாட்டுகள் இ.தொ.கா உறுப்பினர்களின் மீதே எழுந்துள்ளது. இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமந்து கொண்டு எவ்வாறு இ.தொ.கா  மலையக மக்களின் காணி உரிமைகள் பற்றி பேச முடியும்?   

இதேவேளை  தமிழக அரசின் மூலம்  கிடைத்த நிவாரணப்பொருட்கள் நுவரெலியா மாவட்டத்தில் சரியாக பகிரப்படவில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை அக்கரபத்தனை பகுதியில் தொழிலாளர்கள் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். 

இலங்கையின் பல பாகங்களிலும் எந்த வித பிரச்சினைகளும் இல்லாது இந்தப் பொருட்கள் பகிரப்பட்டு வரும் போது, நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலைமை என்று நினைக்கும் போது சினம் எழுவதை தடுக்க முடியாதுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் மாத்திரமில்லாது, பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினதோ, வேறு நாடுகளினதோ அல்லது தனிநபர்களினதோ  உதவிகள், நிவாரணங்கள்  நுவரெலியா மாவட்டத்தையடையும் போது இங்கு மாத்திரம் பிரச்சினைகள் மேலோங்கி நிற்கின்றன.  

தனிநபர்களின் தலையீடுகள் இங்கு அதிகமாகவே இருக்கின்றன. கொரோனா தொற்று காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட  5ஆயிரம் நிவாரணத்தொகையைக் கூட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதில் இந்த மாவட்ட அரசியல்வாதிகள் எவருமே முன்னின்று செயற்படவில்லை.

மாறாக தமக்குத் தேவையானவர்களுக்கு மாத்திரம் அதைப்பெற்றுக்கொடுத்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தனர். மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு இந்த உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோரின் சாபங்களையும் பிரதிநிதிகள் சம்பாதித்துக்கொள்ள தவறவில்லை.  

தமிழக நிவாரணப்  பொருட்கள் இலங்கையை வந்தடைந்தவுடனேயே இதில் அரசியல் புகுந்து  விட்டதென்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. இ.தொ.காவின் தலையீடு இதில் இருப்பதாக கிராம அதிகாரிகளின் சங்கமானது  ஊடகவியலாளர் சந்திப்பின் போது பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தது. 

எனினும் அது குறித்த ஆதாரங்களை கோருவதாகவும் அப்படி இல்லாவிடின் குறித்த சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜீவன் எம்.பி தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை. எனினும் அதற்குப்பிறகு குறித்த பொருள் விநியோகம் இடம்பெறும் இடத்துக்கு இ.தொ.கா உறுப்பினர்கள் எவரும் செல்லக்கூடாது என்று தலைமையால் உத்தரவிடப்பட்டதாக தெரியவருகின்றது.

எனினும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் இந்த நிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்த செயற்பாடு  நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது ,J குறித்து பல முறைப்பாடுகள், கோரிக்கைகள் எழுந்தாலும் அதை மலையக பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. அரசியல் தலையீடு இல்லாமல் அதை உரிய முறையில் விநியோகம் செய்யும் பொறிமுறைகள் குறித்து இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை காட்டவில்லை. 

இதற்கு வேறு காரணங்களும் உள்ளன. மலையக நகரங்களில் எரிபொருளுக்காக இரவு பகலாக வரிசையில் நிற்கும் மக்களின் நிலை என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவில்லை. வந்தால் மக்களின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையும் என்ற அச்சமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எரிபொருள் விநியோகத்தில் தனி நபர் செல்வாக்கு, அடாவடித்தனம், அரசியல் மற்றும் பொலிஸாரின் அழுத்தங்கள் தாராளமாகவே இருக்கின்றன என்பதை அறிந்தும் மெளனமாக இருக்கின்றனர்.

தமது கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளின் ஊடாகவாவது  மக்களுக்கு உரிய முறையில் எரிபொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொடுக்கும் எந்த திட்டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கவில்லையென்பது மிகவும் வெட்கக்கேடான விடயம்.  

சில இடங்களில் பல அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியதோடு அனைவரும் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் சில மலையக நகரங்களில் வர்த்தக சங்கங்கள் வெற்றிகரமாக சில நடவடிக்கைகளை மக்கள் சார்பாக எடுத்துள்ளதையும் மறுக்க முடியாது. 

மலையக சமூகத்துக்கு இப்போது அமைச்சுப்பதவியொன்று இல்லையென்ற கவலை எவருக்குமில்லை. ஏனென்றால் இருக்கும் போதே கைவிடப்பட்ட சமூகமாகவே இந்த மக்கள் இருந்திருக்கின்றனர். எனவே இப்போது எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை அவர்கள் பெற்றுள்ளனர் எனலாம். 

அதேவேளை அவ்வாறு அமைச்சுப்பதவியொன்றை பெற்றாலும் கூட ஆயிரம் ரூபா நாட்சம்பளமோ அல்லது கைவிட்டுப்போன மலையக பல்கலைக்கழக காணியோ மீண்டும் கிடைத்து விடும் என்று கூறுவதற்கில்லை. எல்லாவற்றுக்கும் நாட்டின் ஆட்சியாளர்களே காரணம் என்று கைக்காட்டி விட்டு மெளனமாக இருப்பதே சிறந்தது என்ற அரசியலை தற்போது மலையக எம்.பிக்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

ஆனால் மக்களின் மெளனம் கலையும் நாளொன்று வரும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இவர்கள் இருப்பார்களோ என்பதுவும் சந்தேகம் தான். அரசியல்வாதிகளின் மெளனங்களை விட மக்களின் மெளனங்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை புரிந்துகொண்டால் சரி! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54