கால் வைக்கும் குவாட்

Published By: Digital Desk 5

26 Jun, 2022 | 04:45 PM
image

ஹரிகரன்

“இந்தியா, 1987இல் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டு அளவுக்கு ஆழமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான நெருங்கிய உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கையுடன் நெருக்கமானதொரு உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறது”

கடந்த வியாழக்கிழமை முற்பகலில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானத்தில் வந்திறங்கிய, இந்திய வெளிவிவகாரச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான குழுவினர், கொழும்பில் பரபரப்பான பேச்சுக்களை நடத்திவிட்டு அன்று மாலையே புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகாரச் செயலாளர், மத்திய வங்கி, நிதியமைச்சு, திறைசேரி அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் மாறி மாறி பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்திய நிதியமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி அனந்த நாகேஸ்வரன், மற்றும் வெளிவிவகார அமைச்சின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கான இணைச் செயலர் கார்த்திக் பாண்டே ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களின் பயணம், 1987இல், இந்திய – இலங்கை உடன்பாடு கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக, இருந்த சூழலை நினைவுபடுத்தியது. அந்தக் காலகட்டத்தில் வடக்கில் போர் நெருக்கடி அதிகரித்திருந்தது. தெற்கில், ஜே.வி.பி.கிளர்ச்சி தீவிரமடைந்து கொண்டிருந்தது.

அப்போது இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள, இந்திய வெளிவிவகார செயலர் மேனன் மற்றும் உயர் அதிகாரிகள், இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த ஜே.என்.டிக்சிட் போன்றவர்கள் மாறி மாறி கொழும்புக்கும், புதுடில்லிக்கும் இடையில் பறந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென, புதுடில்லியில் இருந்து கொழும்பு வரும், இந்திய விமானங்கள், அடுத்த சில மணிநேரங்களிலேயே சந்திப்புகளை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் செல்லும்.

அதுபோலத் தான், இந்திய வெளிவிவகாரச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான குழுவும் காலையில் வந்து மாலையில் புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

முதலீடுகளை ஊக்குவித்தல், இணைப்பு மற்றும் பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் மூலம் இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவர்கள், ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களிடம் உறுதியளித்திருக்கிறார்கள்.

எனினும், இந்த உதவிகள் எவ்வாறான முறையில் வழங்கப்படும் என்ற வழிவரைபடம், இரண்டு தரப்புகளில் இருந்தும், வெளிப்படுத்தப்படவில்லை.

மேலோட்டமாக மட்டுமே, தகவல்கள் பகிரப்பட்டிருக்கின்றன. ஆனால், விரிவாகவும், ஆழமாகவும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை, இந்தியத் தரப்பின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில்,  இந்தியா-இலங்கை இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் வெளிப்படையான, சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்றன என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளின் ஊடாக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுதல் என்பது, அவசர கதியின் முன்னெடுக்கப்படக் கூடியதொரு வேலைத்திட்டமா என்ற கேள்வி இருக்கிறது.

இலங்கைக்கு இப்போது, அவசர கதியிலான திட்டங்களே அவசியம். அதற்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதை, இந்த இணக்கப்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவரும் போது தான் தெரிந்து கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், இந்தியாவின் தற்போதைய அணுகுமுறைகளை உற்று நோக்கும் போது, இலங்கையுடன் நெருக்கமானதொரு உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறது என்பது புலனாகிறது.

அது, 1987இல் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டு அளவுக்கு ஆழமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான நெருங்கிய உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதாக இருக்க கூடும். இது இந்தியாவினது வியூகமாக மாத்திரம் எனக் குறிப்பிட முடியாது.

சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில், தங்களின் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்கான நாற்கரக் (குவாட்) கூட்டின் திட்டங்களுக்கமைவாகவே, இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.

இலங்கைக்கு இந்தியா தனியாக கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர்கள் வரை குறுகிய காலத்துக்குள் உதவியாக வழங்கியிருக்கிறது. இதற்கு மேல் இந்தியா தனிப்பட இலங்கைக்கு உதவிக்கொண்டிருக்க முடியாது.

அதேவேளை, சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையை அதனிடம் விட்டுக்கொடுக்கவும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயாராக இல்லை. ஆபிரிக்க நாடான ஜிபோட்டியை கடன்பொறியில் சிக்க வைத்த சீனா, அங்கு அமெரிக்க படைத்தளத்துக்கு அருகிலேயே தனது தளத்தை அமைத்துக் கொண்டது.

அந்த தளத்தை சீனா இப்போது பலப்படுத்தி வருகிறது. அங்கு விமானம் தாங்கி கப்பல் ஒன்றையும் நிறுத்தவுள்ளது.

அதுபோன்றே, பசுபிக் பெருங்கடலில்  அவுஸ்திரேலியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட சொலமன் தீவுகளுடன், அண்மையில் சீனா செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாடு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏனென்றால், சொலமன் தீவுகளில் சீனா தனது பாதுகாப்பு நலன்களைக் கட்டியெழுப்புவது அவுஸ்திரேலியா,ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கும், பசுபிக்கில் உள்ள அமெரிக்க தளங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

ஜிபோட்டி மற்றும் சொலமன் தீவுகள் விவகாரத்தில், மேற்குலக நாடுகள் சீனாவின் உள்நுழைவைத் தடுத்திருக்க கூடிய நிலையிலேயே இருந்தன. ஆனால், சீனா தனது கடன் பொறி இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி, இந்த நாடுகளுக்குள் புகுந்து விட்டது.

இவ்வாறான நிலையில், இலங்கையையும் அவ்வாறு இழந்து விடக்கூடாது என்பதில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு உறுதியாக இருக்கிறது.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு தலைவர் ரொபேர்ட் மெனெண்டஸ், அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, மற்றும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் ஆகியோருக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், ராஜபக்ஷக்களின் நிர்வாகத்தின் கீழ் மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் உள்ள இலங்கை மீது, குவாட் அமைப்பு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்தக் கடிதம், நெருப்பில்லாமல் புகையாது என்பதை நினைவுபடுத்துகிறது.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது குறித்த சில இரகசிய நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையே இந்த விவகாரங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான, ரிச்சர்ட் மார்லெஸ், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடந்த புதன்கிழமை சந்தித்த பின்னர், அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்திருந்தார்.

அந்தச் செவ்வியில் சீனாவின் அச்சுறுத்தல் குறித்தும், இலங்கைக்கான உதவி குறித்தும் அவர் சில விடயங்களை தெரிவித்திருந்தார்.

“சீனா எங்களின் மிகப்பெரிய பாதுகாப்பு கவலையாக உள்ளது. இந்தியாவும், அவுஸ்ரேலியாவும், இதனை இணைந்து கையாள முயற்சிக்கின்றன. இது இலகுவான பிரச்சினை அல்ல.” என்று அவர் கூறியிருந்தார்.

அத்துடன், இலங்கைக்கு உதவும் வகையில் முக்கிய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது எனவும், இப்போது எமது கவனம் எப்படி, இருதரப்பு விடயங்களில் இலங்கைக்கு உதவ முடியும்  என்பதில் தான் இருக்கிறது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவின் மூன்றாவது அதிநவீன விமானம் தாங்கி கப்பலான, பியூஜியான் (Fujian) கடந்த 17ஆம் திகதி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ள நிலையில், குவாட் நாடுகள் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தங்களின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை தனியொரு நாடாக கையாளாமல், குவாட் பங்காளிகள், பொதுப்படையான ஒரு திட்டத்தின் கீழ் கையாளுவதற்கு முனைகின்றன என்பதை, அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் கருத்து புலப்படுத்துகிறது.

அதேவேளை, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, அவுஸ்ரேலியா மாத்திரமன்றி, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளும், இலங்கைக்கு நேரடியான நிதி உதவிகளை வழங்குவதற்கு இன்னமும் உத்தரவாதங்களை வழங்கவில்லை.

ஆனால், மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுகின்றன. அவை அளவில் சிறியவை. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின் ஊடாகவே, பொருளாதார நெருக்கடியை அந்த நாடுகள் கையாள முனைகின்றன.

அதற்கு அப்பால், முதலீடுகளின் மூலமாக பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதில் பொதுவானதொரு திட்டத்தின் கீழ், இந்தியா மற்றும் குவாட் நாடுகள் செயற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அனைத்து நாடுகளினதும் குரல் ஒரேவிதமாகவே ஒலிப்பதில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்த பொதுப்படையான மூலோபாய திட்டம் என்னவென்பது, இப்போதைக்கு இரகசியமானதாகவே உள்ளது. போகப் போகத் தான் வெளிச்சத்துக்கு வரும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41