ஆபத்துக்கள் நிறைந்த கிவுல் ஓயா திட்டம்

Published By: Digital Desk 5

26 Jun, 2022 | 06:28 PM
image

ஆர்.ராம்

'வடக்கில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும், திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒதுக்கக் காடுகள் மற்றும் தொல்பொருளியல் பகுதிகளை அழித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்படவுள்ள இனம் சார்ந்த நீர்பாசனத்திட்டம்'

மகாவலி அதிகார சபையினால் வடமாகாணத்தின் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மகாவலி கங்கையின் நீரைக் கொண்டு செல்வதை இலக்காக வைத்து 'மகாவலி-எல்' வலயத்திட்டம் முன்மொழியப்பட்டது.

இது, உட்கட்டமைப்பு, அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வடமாகாணத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் உள்நோக்கத்தினைக் கொண்டது என்பதை வெளிப்படையாக உணரப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன.

போரின் பின்னரான சூழலில் 'மகாவலி-எல்' வலய விஸ்தரிப்புக்களுக்கான முயற்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டபோதும், மக்கள் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சிகள் முழுமையாக வெற்றியளித்திருக்கவில்லை.

காலநிலை மாற்றம் தொடர்பான அண்மைக்கால ஆய்வுகளின் பிராகரம், 'மகாவலி-எல்' வலயத்திற்கு நீரைக் கொண்டு செல்வதானது, 'கல்லில் நார் உரிப்பதற்கு சமமானது' என்பது உணரப்பட்டதன் பின்னர் தற்போது புதிய மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதனடிப்படையில் தான், 'கிவுல் ஓயா' நீர்பாசனத் திட்மும் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இது, 'மகாவலி-எல்' வலயத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கானதொரு துணைத் திட்டம் தான்.

இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதால், வடக்கின் எல்லையில் குடிப்பரம்பல் தீவிரமடையும், தொல்பொருளியல் பகுதிகள் மாயமாகும், வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும், சுற்றுச்சுழலின் பாதுகாப்பு மோசமாகும். குறிப்பாக, ஒதுக்கக் காடுகள் அழிக்கப்பட்டுவதோடு, யானை-மனித மோதல்கள் உட்பட விலங்குகள், பூச்சியினங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

No description available.

கிவுல் ஓயா திட்டம் பற்றிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின் பின் இணைப்புக்கள் மட்டுமே பொதுமக்களுக்கு பொதுப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தனது கரிசனையை வெளியிட்டு அவதானங்களை எழுத்துமூலமாகப் பரிந்துரைத்திருக்கின்றது.

ஆனால், அந்தப் பரிந்துரைகள் உட்பட, பிரதேச வாசிகளின் கோரிக்கைகள் கூட கரிசனையில் கொள்ளப்பட்டு, கிவுல் ஓயா திட்டத்திற்கான உத்தேச முன்மொழிவுகள் மீளவும் மறுசீரமைக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆரம்பத்தில் திட்டமிட்டவாறே அந்த நீர்ப்பாசனத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. 

திட்டத்தின் விபரம்

வவுனியா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்க்குச் செல்லும் 'மா ஓயா'வின் பிரதான கிளை நதியே கிவுல் ஓயா.

இந்தக் கிவுல் ஓயாவை மையப்படுத்தி அணையைக்கட்டுவதன் மூலமாக, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கான நீர் மற்றும் குடிநீர் வசதியை ஏற்படுத்த முடியும் என்று மகாவலி அதிகார சபை முன்மொழிந்து இந்த திட்டத்தினை வடிவமைத்துள்ளது.

இத்திட்டத்தில், நீர்ப்பாசன உட்கட்மைப்பு அபிவிருத்திக்காக 6230மில்லியன் ரூபாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 832மில்லின் ரூபாவுமாக, மொத்தம் 7062மில்லியன் ரூபா செலவிடப்;படவுள்ளது.

அத்துடன், குறித்த திட்டமானது, வலயம் 'ஏ' - கிவுல் ஓயா நீர்த்தேக்கம் அணைக்கட்டு மற்றும் வெள்ளப் பெருக்குப் பகுதி, வலயம் 'பி' - விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள், வலயம் 'சி' – கிவுல் ஓயா திட்டத்தின் கீழான குடியேற்ற பகுதிகள், வலயம் 'டி' - சிறு தாங்கிகள் மற்றும் அவற்றை அண்மித்த குடியிருப்புகள், வலயம் 'ஈ' -முன்மொழியப்பட்ட யானை வழித்தடம் என்று ஐந்து கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தினால், ஏற்கனவே குடியேற்றப்பட்டுள்ள 4,372குடும்பங்கள், மற்றும் புதிதாக குடியேற்றப்படவுள்ள 1626குடும்பங்களென மொத்தமாக 6000விவசாயக் குடும்பங்கள் நேரடிப்பயனாளிகளாகவும், 50ஆயிரம் பேர் குடிநீரைப் பெறும் பயனாளிகளாகவும் இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தத் திட்டத்தின் ஊடான பயனாளிகள் அனைவரும் 1983இன் பின்னர் குடியேற்றப்பட்ட 'சிங்கள' விவசாயிகளாக இருக்கின்றார்கள் என்றும் அவர்களில் 0.86சதவீதத்தினர் மட்டுமே ரோமன் கத்தோலிக்கர்கள் என்றும் ஏனையவர்கள் பௌத்தர்கள் என்றும் சுட்டிக்கூறப்பட்டுள்ளது.

No description available.

குடியேற்றப்பட்டவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் காணப்படாமையாலும், நீர்ப்பாசன வசதி காணப்படாமையாலும், வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதோடு, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற தேவைப்பாடுகளும் அவசியமாக உள்ளன என்றும் உத்தேச திட்டத்தின் இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரமடையும் குடிப்பரம்பல்

முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்பாசனத்திட்டத்திற்கு சமாந்தரமாகத்தான்  வவுனியாவிலிருந்து, முல்லைத்தீவுக்கு ஆரம்பகாலங்களில் தமிழ் மக்கள் கால் நடையாக பயணித்திருக்கின்றனர்.

குறிப்பாக, கொக்குளாயிலிருந்து, கருவாடு உள்ளிட்ட கடல்சார் பொருட்களை பொதிகளாக்கி வெடிவைத்தகல்லு, மருதோடை, காஞ்சிரமோட்டை பகுதிகளுக்கு எருமை மாடுகளில் ஏற்றி  விநியோகித்ததோடு, அம்மக்கள் தமக்கு தேவையான மிளகாய் உள்ளிட்ட தானியங்களையும் மீளப் பெற்றுச்சென்ற நினைவுகள் தற்போதும் உள்ளன.

இவ்வாறிருக்கையில் தான் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்ட முன்மொழிவின் அடிப்படையில், வடக்கில் வலிந்து குடியேற்றப்பட்ட சிங்கள பௌத்தர்களை மட்டுமே இத்திட்டம் மையமாகக் கொண்டது என்பதோடு, குடியேற்றப்பட்ட ஒரு குடும்பத்திற்கு தலா 1.17மில்லின் ரூபா நீர்வழங்கல் வசதிக்காக மட்டும் செலவிடப்படவுள்ளமையும் வெளிப்பட்டுள்ளது.

குடியேற்றப்பட்ட சிங்கள, பௌத்தர்களின் நீர்த்தேவைக்காக மட்டும் இவ்வளவு தொகை செலவிடப்படுகின்றதென்றால், அவர்களுக்கான இருப்பிடங்கள் உள்ளிட்ட ஏனைய அடிப்படை வசதிகளுக்காக எவ்வளவு செலவிடப்பட்டிருக்கும் என்பது தொடர்பிலும் ஆழமான கரிசனை கொள்ளவேண்டிய தேவை இங்கு இயல்பாகவே எழுகின்றது.

அதுமட்டுமின்றி, இந்நீர்ப்பாசனத் திட்டம் முற்றுப்பெறுகின்றபோது ஒதுக்கக் காடுகள் மேலும் அழிக்கப்பட்டு மேலதிகமான குடியேற்றங்கள் இடம்பெறுகின்றமைக்கான ஏதுநிலைகளும் இல்லாமலில்லை. அவ்விதமான நிலைமை ஏற்படுகின்றபோது வவுனியா மற்றும் முல்லைத்தீவின் குடிப்பரம்பலில் சடுதியான மாற்றங்கள் ஏற்படும்

மாயமாகும் நிலையில் தொல்பொருள் பகுதிகள்

இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதற்கடமையாக இருப்பது, நாட்டின் தொல்பொருள்  பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான பிரதான ஒழுங்குமுறை அமைப்பாக உச்சபட்சமான அளவில் செயற்படுவதாகும்.

வடக்கிலும், கிழக்கிலும், தமிழர்களினது பூர்வீகமான இடங்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் பெயரால் பௌத்த வரலாற்று இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்ற தருணங்களில் மேலே கூறிய தமக்குள்ள முதற்கடமையின் அடிப்படையில் தான் செயற்படுகின்றோம் என்று; தொல்பொருளியல் திணைக்களம் வாதம் செய்தது. தனது செயற்பாடுகளையும் நியாயப்படுத்தியது. தற்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

யாழ்.நிலாவரை, வவுனியா வெடுக்குநாறி, முல்லைத்தீவு குருந்தூர்மலை, திருகோணமலை கன்னியா பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை உள்ளிட்ட பகுதிகளை மீட்கும் போராட்டங்களின் போதும் பேச்சுவார்த்தைகளின் போதும் தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதிபலிப்புக்கள் அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகவுள்ளன.

அவ்வாறிருக்கையில், கிவுல் ஓயா நீர்பாசனத் திட்;டம் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள வரலாற்று இடங்கள், இந்து, பௌத்த மடாலய தளங்கள், மட்பாண்டங்கள் மற்றும் தளங்கள், பிற தொல்பொருள் இடங்கள் உள்ளிட்டவைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படவுள்ளன.

குறிப்பாக, வலயம்-'ஏ'இல் 9இடங்களும், வலயம்-'பி'இல் 17இடங்களும், வலயம்-'சி'இல் 19இடங்களும், வலயம்-'டி'இல் 2இடங்களுமாக மொத்தம் 47 தொல்பொருளியல் இடங்கள் முறையாக பராமரிக்க முடியாதும் சில நீரினுள் மூழ்கி அடையாளமே தெரியாது போவதற்கான சத்தியங்களும் அதிகமுள்ளன.

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே தொல்பொட்களைக் கொண்டுள்ளவையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிவுல் ஓயா திட்டத்திற்கு தொல்பொருளியல் திணைக்களம் எவ்வாறு பச்சைக்கொடி காண்பித்தது? கூடவே, கிவுல் ஓயா திட்டத்திற்காக தொல்பொருளியல் திணைக்களம், தனது முதற்கடமையிலிருந்தே விலகி நிற்கின்றதா?

தமிழர்களின் பூர்வீகத்தை பறைசாற்றும் வகையில் வன்னி இராச்சியத்துடன் தொடர்புடைய தொன்மங்களே அதிகளவில் இப்பகுதியில் காணப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இப்பகுதிக்கு கள வியஜம் மேற்கொண்டிருக்கும் தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறாயின், தமிழர்கள் சார்ந்த தொன்ம விடயங்களை பொருட்டாக கொள்ளாது தொல்பொருளியல் திணைக்களம் இனரீதியான பாகுபாட்டுடன் செயற்பாடுகளை முன்னெடுகின்றது என்ற சந்தேகம் எழுவதை இவ்விடத்தில் தவிர்க்க முடியாதுள்ளது.

வெள்ளத்தால் மூழ்கப்போகும் கிராமங்களும் குளங்களும்

கிவுல் ஓயா திட்டம் முற்றுப்பெறும் பட்சத்தில், காட்டுப்பூவரங்குளம், வெடிவைத்தகல்லு, மருதோடை, காஞ்சிரமோட்டை, கூழாங்குளம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. குறிப்பாக, காட்டுப்பூவரங்குளத்தில் 430ஏக்கர்களும், வெடிவைத்தகல்லில் 475ஏக்கர்களும் வெள்ள அனர்த்த அபாயத்தில் உள்ளன.

இந்தக் கிராமங்களில் இன்னமும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நிறைவேறாத நிலைமை நீடித்துக் கொண்டிருக்கையில் தான் இவ்வறான வெள்ள அனர்த்த அபாய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

இக்கிராமங்களில் பூர்வீகமாக வாழ்ந்தவர்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகள் மற்றும் வாழ்வாதார நிலங்கள் காணப்படுகின்றபோதும் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இன்னமும் தாமதங்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.

இதனைவிடவும், இராமன்குளம், வேலன்குளம் உள்ளிட்ட சிறுகுங்கள் மற்றும் நீரேந்துப்பகுதிகள் இத்திட்டத்தின் ஊடாக மூழ்கும் நிலையே உருவாகியுள்ளமை குறிப்பிடதக்கதாகின்றது.

கருத்திற்கொள்ளப்படாத சுற்றுச்சூழல் பாதுகாப்பு

வவுனியா பெரியகட்டிக்குளம் பகுதியில் காணப்பட்ட ஒதுக்கக்காடுகள் அழிக்கப்பட்டே கிவுல் ஓயா திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் கொக்குத்தொடுவாயில் உள்ள ‘கிரிபன் வெவ’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள ஆமையன் குளத்திற்கு நீரை நகர்த்துகின்றபோது 2500ஹெக்டெயர் காடுகள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை அண்மித்த புதிய குடியேற்றங்கள் காரணமாக, 1500ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தினை வனஜீவராசிகள் இழப்பதால் மனிதன்-யானை மற்றும் ஏனைய வன ஜீவராசிகளுக்கிடையிலான மோதல் தீவிரமடையும் என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால், மேம்படுத்தப்படுத்தப்படவுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப்படுமாக இருந்தால் காட்டுயானைகள் மற்றும் ஏனைய வன ஜீவராசிகளின் நடமாட்டம் கேள்விகுறியாகும் சூழல் தோன்றுவதால் அவற்றின் உயிர்வாழ்வு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகுகின்றன.

காட்டுயானைகள் உள்ளிட்டவை, புதிய வழித்தடங்களை நாடினால் மின்சார வேலிகளை மேலும் 50கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் நிலைமைகள் ஏற்படுவதோடு, அதற்காக, மேலதிக நிதி ஒதுக்கீடும் தேவையாகும் என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைகளம் கரிசனை வெளியிட்டுள்ளது.

மனிதன்-யானை மற்றும் ஏனைய ஜீவிராசிகளுக்கு இடையிலான மோதலைத் தடுப்பதற்காக நீர்ப்பாசனத் திட்டத்தின் அணைக்கு கீழே வழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரவேலி தடுப்புக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பூரணப்படுத்துவதற்கு முன்னதாக விவசாய நிலங்களுக்கு பிரவேசிக்கும் யானைகள் உள்ளிட்ட வன ஜீவராசிகளை தடுப்பதற்கான எவ்விதமான திட்டங்களும் கூறப்படவில்லை.

எதிர்காலத்தில், ஒதுக்காடுகளை அழிக்கும் நிலைமைகள் மேலும் தீவிரமடைந்தால் நீண்டகாலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான நிலைமைகள் தோற்றம் பெறலாம் என்றும், திட்டப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த 88 தாவர இனங்களில் இரண்டு தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை என்றும் முக்கியமான ஏழு தவர இனங்கள் உள்ளன என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவுசெய்யப்பட்ட 214 விலங்கு இனங்களில், 14 உள்ளுரைச் சேர்ந்தவையாக இருப்பதோடு நான்கு இனங்கள் உலக அளவில் ஆபத்துக்குள்ளானவையாகவும் எட்டு இனங்கள் தேசிய அளவில் அழிந்து வருபவையாகவும் உள்ளன. பறவைகளில், 10 புலம்பெயர்ந்த இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துகின்றபோது இத்திட்டத்தின் நேர்மறையான முடிவுகளை விடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பல ஆபத்துக்கள் நிறைந்திருக்கின்ற கிவுல் ஓயா திட்டமானது, வெளிப்படைத்தன்மையற்ற வகையில், களஆய்வு அறிக்கைகள் தயார்படுத்தப்பட்டு, வரையறைகளைக் கடந்து அதிகாரத்தின் பால் அனுமதிகள் வழங்கப்பட்டு உள்நாட்டு நிதி ஒதுக்கீட்டிலேயே திட்டத்தினை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் கிவுல் ஓயா திட்டத்தின் பின்னால் உள்ள நோக்கையும், இலக்கையும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22