மீளத் திறக்கும் பலாலி

Published By: Digital Desk 5

26 Jun, 2022 | 04:37 PM
image

கபில்

“பலாலியில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதால், இந்தியாவில் அதிகளவானோர் புகலிடம் தேடுகின்ற நிலையும் ஏற்படலாம். அவ்வாறான நிலையை இந்திய அரசாங்கம் விரும்புமா என்ற கேள்வியும் உள்ளது”

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை, மீண்டும் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கு, அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில், பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டு, திறந்து வைக்கப்பட்டதுடன், சென்னைக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவைகளும் தொடங்கப்பட்டன.

அலையன்ஸ் எயர் நிறுவனம், 75 ஆசனங்களைக் கொண்ட விமானங்களை, சென்னையில் இருந்து பலாலிக்கு சேவையில் ஈடுபடுத்தியது.

அப்போது கட்டுநாயக்கவுக்கும் சென்னைக்கும் இடையிலான பயணக் கட்டணத்துக்கும், பலாலி – சென்னை இடையிலான பயணக் கட்டணத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்பட்டது.

பலாலி- சென்னை விமானக் கட்டணம் பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களால் அதிகமாக காணப்பட்டது. 

அத்துடன், பயணப் பொதிகளின் எடை அளவிலும் மட்டுப்பாடுகள் காணப்பட்டன.

இதனால், வடக்கில் இருந்து வழக்கமாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களும், இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் பயணம் மேற்கொள்பவர்களும், தங்களின் தேவைகளுக்காக பலாலி விமான நிலையத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

பலாலி விமான நிலையம் ஊடாக, இந்தியாவுக்கான பயணங்களை சுலபமாக்குவதன் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாப் பயணங்களை அதிகரிக்க முடியும் என்றும், இருதரப்பு மக்களிடையிலான உறவுகளை அதிகரிக்க முடியும் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், 2019இல் தொடங்கப்பட்ட விமான சேவை அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக இருக்கவில்லை. 

விமானக் கட்டணம் மற்றும் பொதிகள் தொடர்பாக இருந்த குறைபாடுகள், அந்தச் சேவைக்குப் பெரும் வரவேற்பை அளிக்கவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ராஜபக்ஷவினர் பலாலி விமான சேவையை நிறுத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில், அந்த விமான சேவை, கொரோனா தொற்றுடன் நின்று போனது. 

அதற்குப் பின்னர், கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களைத் திறந்து விட்ட ராஜபக்ஷ அரசாங்கம், பலாலி விமான நிலையத்தை மட்டும் திறந்து விட மறுத்தது.

விமான நிலையம் போதிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னரே, போக்குவரத்துக்காக திறந்து விடப்படும் என்று அரசாங்கத்தினால் இழுத்தடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியத் தரப்பு இலங்கை அரசுடனான பேச்சுக்களில் பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பதற்கும், காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கும், வலியுறுத்துகின்ற நிலை காணப்பட்டது.

ஆனாலும், இந்தியாவின் அந்தக் கோரிக்கைகளை கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிக் கொண்டிருந்த அப்போதைய அரசாங்கம், இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகரிக்க விரும்பவில்லை.

ஆனால் தற்போது நிலைமைகள் மாறியுள்ளன. பொருளாதார நெருக்குவாரங்களால், அரசாங்கம் திணறிப் போயிருக்கிறது.

இந்தியாவிடம் இருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் உதவிகளால் மட்டும், செயற்படக் கூடிய நிலையை நாடு அடைந்திருக்கிறது.

இவ்வாறான நிலையில் இந்தியாவிடம் உதவிகளைப் பெறுவதற்காக, இந்தியா கூறுகின்றவற்றுக்கெல்லாம் தலையாட்ட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

பலாலி விமான நிலையத்தை திறந்து, சென்னை, திருச்சிக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கும், காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கும், இப்போது முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளின் பின்னணி இது தான்.

அதேவேளை, கோட்டா - ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வெளிநாட்டு நாணய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, சில புதிய நகர்வுகளை எடுத்திருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது அதில் முக்கியமானது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தற்போதைய நிலையில் அதிகளவில் ஈர்க்க முடியாதிருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழர்களை அதிகளவில் நாட்டுக்கு அழைத்து வருவது அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் நாட்டுக்கு வரவில்லை.

இந்த ஆண்டு உலகளவில் கொரோனா தொற்று தணிந்திருக்கிறது. அது சார்ந்த கட்டுப்பாடுகளும் நீங்கியுள்ளன.

இந்த நிலையில் விடுமுறைக்காலத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள, அதிகளவு புலம்பெயர் மக்கள் திட்டமிட்டிருந்தனர். 

எனினும், பொருளாதார நெருக்கடிகள், எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றினால், பெருமளவானோர் தமது பயணத் திட்டங்களை மீளாய்வு செய்கின்றனர் அல்லது ரத்துச் செய்துள்ளனர்.

ஜூன் தொடக்கம் ஓகஸ்ட் வரையான காலப்பகுதி புலம்பெயர் நாடுகளில் கோடை விடுமுறைக் காலமாகும்.

வடக்கில் முக்கிய ஆலயங்களின் திருவிழாக் காலமும் இதுவாகும். இந்தக் காலப்பகுதிகளில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வந்தால், அது அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கச் செய்யும் என்று அரசாங்கம் நம்புகிறது.

ஆனால், தற்போதைய எரிபொருள் நெருக்கடி புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஒரு சாதாரண பயணிகள் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரு வழிக்கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாக அறவிடப்படுகிறது.

அதைவிட வாகனங்களை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையும் காணப்படுகிறது. டீசல் இல்லை என்று வாடகை வாகன உரிமையாளர்கள், அவற்றை சேவையில் ஈடுபடுத்த தயங்குகிறார்கள்.

இவ்வாறான நிலையில், புலம்பெயர் தமிழர்களை, நல்லூர் திருவிழாக் காலத்தில் வடக்கிற்கு அதிகளவில் ஈர்ப்பது கடினமான காரியமாக இருக்கும்.

இதற்கான ஒரு மாற்றுத் திட்டமாகத் தான், பலாலி விமான நிலையத்தை அவசரஅவசரமாக திறந்து விட முனைந்திருக்கிறது அரசாங்கம்.

பலாலி விமான நிலையத்தின் ஊடாக சேவைகளை தொடங்கினால், நேரடியாக சென்னை ஊடாக, புலம்பெயர் தமிழர்களால் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர முடியும்.

இது பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துவதுடன்,  தற்போதைய எரிபொருள் சிக்கலுக்கும் தீர்வாக அமையும்.

இதனால், புலம்பெயர் தமிழர்கள் கோடை விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு அதிகளவில் வருவார்கள் என்று, அரசாங்கம் நம்புகிறது.

அதேவேளை, இந்தியாவில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், பலாலி விமான சேவை உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது எந்தளவுக்கு, சாத்தியமாகும் என்பதை பொறுத்திரந்தே பார்க்க  வேண்டும்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். 

அவர்களில் பெரும்பாலானோர், குறைந்தளவு பணத்தையே செலவிடுபவர்கள். வர்த்தக நோக்கத்துக்காக வரும் அவர்கள், அதிகம் செலவிடாதவர்கள். 

அவர்களுக்கு ஏற்ற வசதிகளை பலாலி விமான நிலையம் வழங்கினால் மட்டுமே, அதிகளவில் அந்தச் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இதனிடையே, பலாலியில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதால், இந்தியாவில் அதிகளவானோர் புகலிடம் தேடுகின்ற நிலையும் ஏற்படலாம்.

இங்குள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்க வசதியுள்ளவர்கள், இந்தியாவில் சிறிது காலத்தை செலவிட முனையலாம்.

அவ்வாறான நிலையை இந்திய அரசாங்கம் விரும்புமா என்ற கேள்வியும் உள்ளது.

தமிழக அரசு இந்த விடயத்தில் அக்கறை செலுத்தினாலும், மத்திய அரசாங்கம் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளது என்பது தான் முக்கியமானது.

பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பதான பிரசாரங்களுக்கு மத்தியில், அது மக்களுக்குப் பயனுள்ள வகையில் எவ்வாறு இயக்கப்படும் என்பதே முக்கியம்.

அந்த இலக்கில் இருந்து நழுவினால், மீண்டும் அது மூடப்படும் நிலையை நோக்கி தள்ளிச் செல்லப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04