மஹிந்த ராஜபக்ஷ , ஜோன்ஸ்டன் ஆகியோருக்கு  வேறு சட்டமா ? - ஜே.வி.பி. கேள்வி

Published By: Vishnu

24 Jun, 2022 | 03:52 PM
image

(எம்.மனோசித்ரா)

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒரு சட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிரிதொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தமையகத்தில் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரில் சிலரை தேர்ந்தெடுத்து கைது செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை பழிவாங்குவதை விடுத்து அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதரும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

கைது செய்து ஆர்ப்பாட்டங்களை முடக்குவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு பதில் மேலும் ஐவர் உருவாகுவார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை முதல் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒரு சட்டமும் , காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பிரிதொரு சட்டமும் அல்ல. அனைவருக்கும் சட்டம் சமமானது. சிறிதளவும் இரக்கம் அற்ற இந்த அரசாங்கம் அனைத்து சுமைகளை மக்கள் மீது சுமத்துகிறது.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து பொலிஸார் முதலில் சமர்ப்பித்த பீ அறிக்கையை மாற்றியுள்ளனர்.

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க முடியாது என்பதால் , பொலிஸார் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியால் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை ஏற்க முடியும். ஆனால் அதற்கான அதிகாரத்தை மக்கள் எமக்கு ஒப்படைக்க வேண்டும்.

அதனை விடுத்து சதித்திட்டங்கள் மூலம் அதிகாரத்தைப் பெற நாம் விரும்பவில்லை. மக்கள் மீது துளியளவும் இரக்கமின்றி செயற்படும் பிரதமரும் ஜனாதிபதியும் குற்றவாளிகளாவர். இவ்வாறு நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுடன் தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் ஒன்றிணைந்து செயற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்