இந்திய உதவிகளுக்கு சவால்

Published By: Digital Desk 5

19 Jun, 2022 | 03:43 PM
image

என்.கண்ணன்

அரச நிறுவனங்களின் தலைவர்கள், பதவி விலகுவதும் புதியவர்கள் நியமிக்கப்படுவதும் தற்போதைய அரசாங்கத்தில் புதியதொரு விடயம் இல்லை.

அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்  அதிகளவில் மாற்றம் பெற்றதும், பதவி விலகியதும், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் அதிகம்.

இவ்வாறான நிலையில், அரச துறை நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மாற்றப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

சரியாகப் பணியாற்ற முடியாத பல அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல பணிக்கப்படுகின்றனர் அல்லது வீட்டுக்குச் செல்வதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபய ராஜபக்ஷ, இறுதிக்கட்டப் போரில், இராணுவத்துக்கு தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பயன்படுத்திய அதே உத்தியைத் தான் அரசியலிலும் பின்பற்றுகிறார்.

இறுதிப் போரில், தினமும் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்க கூடிய அதிகாரிகளால் தான், அங்கு நிலைத்திருக்க முடிந்தது.

முன்னேற்றங்களையோ, வெற்றிகளையோ காட்ட முடியாதவர்களும், பின்னடைவுகளை எதிர்கொண்டவர்களும், படையினருடன் பின்னுக்கு எடுக்கப்பட்டனர்.

படைப்பிரிவு மறுசீரமைப்பு என்ற பெயரில் புதிய கட்டளை அதிகாரியுடன், அவர்கள் வெற்றியைப் பெறுவதற்காக முன்னரங்க நிலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனால், நீண்ட போர்க்காலத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மூத்த படைத் தளபதிகள் பலர், இரண்டரை ஆண்டு இறுதிக்கட்டப் போரில், வெற்றிகளை குவித்துக் கொடுக்க முடியாமல் போனதால், விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதே உத்தி இப்போது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலும் கையாளப்படுகிறது. எப்படியாவது நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக- அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். 

அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். அரச துறை நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும், லிட்ரோ எரிவாயு நிறுவனம், இலங்கை மின்சார சபை போன்ற எரிசக்தி மற்றும் மின்சக்தியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகள் பதவி விலகல் என்பது அடிக்கடி நிகழத் தொடங்கியிருக்கிறது.

அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மாற்றப்பட்டார். அதுபோல, இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த பேர்டினன்டோ பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏனைய அரச துறை நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகல் என்பது, குறிப்பிட்ட சில அடைவுகளை காண்பிக்க முடியாததால், அல்லது தவறுகள், அல்லது முறையாகச் செயற்பட முடியாதிருப்பதால், இடம்பெற்றது,

ஆனால் இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்த பேர்டினன்டோ பதவியில் இருந்து விலகிக் கொண்டமைக்குப் பின்னால், பெரியதொரு கதை உள்ளது.

அவர், கோப் குழுவின் முன்பாக வெளியிட்ட தகவல்கள், இலங்கையையும், இந்தியாவையும், சிக்கலானதொரு நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில், இலங்கைக்கு உதவிக் கொண்டிருக்கும் ஒரே நண்பனாக இந்தியா தான் இருக்கிறது.

இந்தியாவின் உதவிகளை மதிப்பதாகவும், அதன் உதவிகள் இலங்கைக்கு கிடைப்பதை வரவேற்பதாகவும், சீனாவே கூறுகின்ற அளவுக்கு நிலைமைகள் உள்ளன.

இலங்கைக்கு உதவ முனைந்தால், பெருமளவில் அதற்காக செலவிட வேண்டும் என்பது சீனாவுக்குத் தெரியும்.

தற்போதைய நிலையில் பெரியளவிலான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராக இல்லை.

இந்தியாவின் உதவியை தட்டிக் கொடுத்து வரவேற்பதுடன் நிறுத்திக் கொள்கிறது.

இலங்கைக்கு இந்தியாவின் நிதியுதவி, கடன்கள் மற்றும் எரிபொருள் போன்றவை கிடைக்காமல் போயிருந்தால், நாடு எப்போதோ செயலிழந்து போயிருக்கும்.

இந்தியா தொடர்ந்து உதவிக் கொண்டிருப்பதால் தான், இன்று வரை, இலங்கை ஓரளவுக்காவது, எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து வசதிகளை மட்டுமன்றி, உணவுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த உதவிக்குப் பின்னால், இந்தியாவுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறமுடியாது. 

அதேவேளை, எல்லா உதவிகளுக்குப் பின்னாலும், இந்தியாவின் சுயநலன் இருக்கிறது என்று கருதவும் முடியாது.

இலங்கையுடன் இந்தியாவுக்கு நீண்டகால உறவுகளும் உள்ளன. அதேவேளை இலங்கையின் மீது இந்தியாவுக்கு நலன்களும் இருக்கின்றன.

எந்தப் பின்னணியில் இந்தியா உதவினாலும், இலங்கையின் தேவைகள், தற்போது, அதிகளவில் இந்தியாவின் மீது தங்கியிருக்கிறது என்பதே உண்மை.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டது போன்று, உலக நாடுகள் எல்லாம் உதவ மறுத்து விட்ட நிலையில், இந்தியாவும் கைவிட்டால், இலங்கையின் நிலை என்னவாகும் என்ற கேள்வி இருக்கிறது.

இந்தியாவின் உதவிகளை சர்ச்சைக்குட்படுத்தி கேள்வி எழுப்பச் செய்யும் வகையில், மின்சார சபைத் தலைவர் பேர்டினன்டோ, சாட்சியம் அளித்திருந்தார்.

கோப் குழுவில் முன்னிலையாகிய அவரிடம், எதற்காக மன்னார் காற்றாலை மின் திட்டம், கேள்விப்பத்திரங்களைக் கோராமல், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது என சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த, பேர்டினன்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  அழுத்தங்களால், தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு கூறினார் என்று கூறியிருந்தார்.

“நவம்பர் 24 ஆம் திகதி என நினைக்கின்றேன், இந்த திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குங்கள் என ஜனாதிபதி கூறினார். 

அதனை வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி தனக்கு அழுத்தங்களை கொடுக்கிறார் என அவர் என்னிடம் கூறினார். 

இது எனக்கும், இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உள்ள பிரச்சினை இல்லை. இது முதலீட்டு சபைக்குரிய பிரச்சினை என நான் கூறினேன். 

ஜனாதிபதி எனக்கு உத்தரவு பிறப்பிக்கின்றார், அதனால், நிதி அமைச்சு இதனை செய்து கொள்ளுமாறு நான் கடிதமொன்றை எழுதினேன்" என பேர்டினன்டோ தெரிவித்திருந்தார்.

எனினும், மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை தலைவர் வெளியிட்ட கருத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை தான் வழங்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர், கோப் குழுவின் முன்னிலையில் தான் தெரிவித்த கருத்தை விலக்கிக் கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பேர்டினன்டோ அறிவித்திருந்தார்.

வேலைப்பளு காரணமாக, உணவு உட்கொள்ளாமல் பணியாற்றியமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாக அவர் நியாயப்படுத்தி விட்டு, பதவியில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார்.

அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாத்திரம் சிக்கலுக்குள் தள்ளவில்லை. இந்தியப் பிரதமர் மோடியையும் சேர்த்தே குழிக்குள் தள்ளி விட்டிருக்கிறார்.

மோடியின் பூர்வீகமான குஜராத்தைச் சேர்ந்த அதானி இப்போது, அம்பானியையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல்நிலைப் பணக்காரராக மாறியுள்ளார்.

அதானிக்கு தற்போதைய பா.ஜ.க. அரசு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை வழங்குவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

எவ்வாறாயினும், தங்களை தூய்மையான, நேர்மையான கட்சி என்று காட்டிக் கொள்ளும், பாஜகவுக்கு, இந்த விவகாரம் கறையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே ராகுல் காந்தி இதனைப் பற்றி கருத்து வெளியிட்டிருக்கிறார். மோடியின் கரங்கள் இலங்கை வரை நீண்டிருப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

இதையடுத்து, அதானி குழுமம் அதிருப்தியை வெளிப்படுத்தும் கருத்தை வெளியிட்டிருக்கிறது.

இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக கவலையடைவதாக அதானி குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அதானி குழுமத்தின் வேலைத்திட்டம் இலங்கை, இந்தியாவிற்கிடையிலான தொடர்பிற்கு முக்கியமானது என்றும், இலங்கையில் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதே தமது நிறுவனத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறினார்.

இந்தியாவின் அரசியல் அழுத்தங்களுக்கமையவே மன்னார் காற்றாலை மின் திட்டம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான அந்த நிறுவனத்தின் முதலீட்டை பாதிக்குமோ என்ற கவலைகளையும் எழுப்பியிருக்கிறது.

மின்சார சபை தலைவர் பேர்டினன்டோ உண்மையைத் தான் கூறியிருக்கிறார் என்று மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

தொழிற்சங்கங்கள், அதானி குழுமத்தின் முதலீட்டை எதிர்க்கின்றன. அதற்குப் பின்னால் தனியொரு அரசியலும், நலன்களும் இருக்கின்றன.

மன்னார் காற்றாலை மின்திட்டம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கைக்கு இந்த திட்டமும் கைவிட்டுப் போனால் பெரும் நெருக்கடி ஏற்படும்.

இலங்கையில் இந்தியா தனது நலன்களை உறுதிப்படுத்த முனைகிறது, என்பது உண்மையே என்றாலும் எல்லா விடயங்களிலும் அது தனது நலன்களைத் தான் எதிர்பார்க்கிறது என்று அர்த்தமில்லை.

அவ்வாறானதொரு கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கசப்பைக் கடந்து இரண்டு நாடுகளும் எவ்வாறு திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றன?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13