நஞ்சாகும் பிஞ்சுகளின் எதிர்காலம்

Published By: Digital Desk 5

19 Jun, 2022 | 03:32 PM
image

ஆர்.ராம்

”இலங்கையில் 17 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

அத்துடன் 4.9 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். 1.7மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்களாக உள்ளனர். 

86சதவீதமானவர்கள் மலிவான விலைகளில் பொருட்களை பெறுதல் போன்ற சமாளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். 95சதவீதமானவர்கள் குறைவான சத்துள்ள உணவைப் பயன்படுத்துகின்றனர்.

83சதவீதமானவர்கள் பகுதி அளவில் உணவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். 66சதவீதமானவர்கள் தினசரி உணவின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர்” என்று உலக உணவுத் திட்டத்தின் சமகால நிலைமைகளை உள்ளீர்த்துள்ள ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

”இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம்.

அந்த மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கோரப்பட்டுள்ளது” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி தெரிவித்துள்ளார். 

”இலங்கையர்களில் 49இலட்சம் பேருக்கு உணவுக்கான உதவிகள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டு விளைச்சல் 40 தொடக்கம் 50 வீதம் வரை குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகிறது” என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் கூறியுள்ளார்.

”இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளின் தொடர்ச்சியாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக பெருமளவான சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டிருப்பதுடன், பல்வேறு சமூகப்பிரச்சினைகளும் தோற்றம்பெற்றுள்ளன” என்று உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விமலேந்திரஷரன் குறிப்பிட்டுள்ளார். 

உலக உணவுப் பாதுகாப்பு தினமான ஜுன் 7ஆம் திகதி  'உலகின் பட்டினி அபாய நாடுகள் மற்றும் அடுத்த மூன்று மாதங்களில் மிக மோசமான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நாடுகள்' என்ற தலைப்பில் வெளியான ஆய்வு அறிக்கையில், “அதிகரித்துச் செல்லும் விலையேற்றம் காரணமாக இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மோசமடையும். இதனால் ஜூன் - செப்டம்பர் காலப்பகுதிக்குள் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படும்” என்று உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் வெளிப்படுத்தியுள்ளன.

மேற்படி ஐந்து கூற்றுக்களும் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழவிருக்கும் அவலங்களை நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு வெளியிலும் இருந்தும் பகிரங்கமாக்கியவையாக காணப்படுகின்றன. 

அதுமட்டுமன்றி மேற்படி தரப்பினரின் கூற்றுக்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு அப்பால் ஒவ்வொரு பொதுமகனாலும் அன்றாட வாழ்வில் உணரக்கூடிய நிலைமை ஏற்பட்டாகிவிட்டது. 

இவ்வாறான நிலையில் இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு செல்லப்போகின்றது என்ற பாரிய கேள்விகள் அனைவரின் உள்மனக் கிடக்கையாக நீடித்துக்கொண்டிருக்கின்றன. 

தற்போதைய சூழலில் நாடளவிய ரீதியில் கர்ப்பத்தில் உள்ள சிசுக்கள் முதல் எதிர்கால சந்ததியினரின் மூன்று வேளை உணவைப்பெற்று சுகதேகியாக வாழும் நிலைமைகளை இருள் சூழந்து கொண்டுள்ளது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னதாகவே தெற்காசியப் பிராந்தியத்தில், மந்தபோசணையுடைய சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது.

அவ்வாறானதொரு நாட்டில் அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் சராசரியாக 195சதவீதத்தினால் அதிகரித்துள்ள நிலையில் நிலைமைகள் எவ்வாறிருக்கும் என்று விபரிக்க வேண்டிய அவசியமே இல்லை. 

இந்நிலையில் முதலாவதாக, வெளியுலகமே காணாத சிசுக்களின் நிலைமைகளை கவனத்தில் கொள்கின்றபோது, கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறைந்த நிறைகொண்ட பிள்ளைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திரிபோஷ வேலைத்திட்டம் 2021இன் பிற்பகுதியில் இருந்து சோளம் மற்றும் சோயா என்பனவற்றின் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சுக்கு மாதாந்தம் 750 கிராம் நிறைக்கொண்ட சுமார் 16 இலட்சம் திரிபோஷ பக்கட்டுக்கள் தேவைப்படும் நிலையில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு, 1,100 மெட்ரிக் தொன் சோளமும், 550 மெட்ரிக் தொன் சோயாவும் தேவைப்படுகின்றது. 

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும், போசானை உணவுகளுக்கான பற்றுச்சீட்டுக்கள் முறையாக விநியோகிப்பதிலும், அதற்கான பொருட்களை பெற்றுக்கொள்வதிலும் தேக்கநிலைமைகள் அதிகரித்துள்ளன. 

அதேநேரம், “6மாதம் முதல் ஒன்றரை வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பல்நுண்ஊட்டச்சத்து பாணம் (எம்.எம்.என்) கடந்த 3மாதங்களாக வழங்கப்படவில்லை” என்று இலங்கை குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

அத்துடன் “5வயதிற்கும் கீழ் உள்ள, குறைந்த நிறையுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பி-100 பிஸ்கட்களும் 4 மாதங்களாக வழங்கப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த நிலைமையானது, இயற்கையாகவே, கருவுற்ற காலத்திலிருந்து 5 வயது வரையில் 80சதவீதமான மூளை வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை இங்கு சுட்டிக்கூற வேண்டியுள்ளது. 

அடுத்தகட்டமாக நாட்டின் நாளை தலைவர்களாகும் சிறுவர்களின் நிலைமைகள் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா “இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அத்துடன், “கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53சிறுவர்களில் 11பேர் அதாவது, 15முதல் 20சதவீதமானவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள். அதில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், “நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அண்மைய நாட்களில் நூறுக்கும் அதிகமான சிறுவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டமை பதிவாகியுள்ளது” என்றும் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், “இலங்கையில், அடுத்துவரும் 7மாதங்களில் 1.7மில்லியன் சிறுவர்களுக்கு அவசியமான போசணை, சுகாதாரம், தூயகுடிநீர், கல்வி மற்றும் உளநலசேவை உள்ளிட்ட தேவைப்பாடுகள் உள்ளது” என்று தெரிவித்தார்.  

அத்துடன், “எமது அமைப்பின் மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையில் 2.3மில்லியன் சிறுவர்கள், அதாவது இரண்டுக்கு ஒன்று விகிதத்திலானவர்கள் ஏதேனுமொரு வகையிலான அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், “சிறுவர்களுக்கும், கர்ப்பிணிப்பெண்களுக்கும் அவசியமான அவசர சிகிச்சைப்பிரிவிலும், உயிர்காக்கும் சத்திரசிகிச்சைகளின் போதும் பயன்படுத்தப்படும் 25இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் அடுத்த 2 மாதங்களில் முடிவடையும் நிலையில் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேநேரம், “சுமார் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்மையை எதிர்நோக்க நேரிடும்' என்று எச்சரித்துள்ள சேவ் த சில்ரன் அமைப்பானது, நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை, உறுதிப்படுத்தும்இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் “சிறுவர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காத நிலையில் கல்வி முறைக்குள் வருகின்றமையானது நாட்டிற்கு நீண்டகாலப் பாதிப்புக்களை தோற்றுவிக்கும்” என்று அபாயச் சமிக்ஞையொன்றை வெளிப்படுத்தினார். 

அச்சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன், “ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை அரசாங்கம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்காத நிலையில்; உணவு வழங்கலுக்காக கடைகளில் கடன்களைப் பெற்றிருக்கும் அதிபர்கள் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின், ஊட்டச்சத்து திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ, “நாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கின்றமை சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, உணவு நெருக்கடி மோசமடைவதால் அந்நிலை மேலும் அதிகரிக்கலாம்” என்று கூறினார். 

அத்துடன், “நெருக்கடிகளின் போதான ஊட்டச்சத்து நிலைமைகள் குறித்து நாடாளவிய தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அவற்றை வெளியிட முடியும்” என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலைமைகளை சமாளிப்பதற்காக அரச தரப்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதில், குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா, 'கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோருக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான பல்வேறு மட்டப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகிறது' என்று கூறினார். 

அதேநேரம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, “திரிபோஷா உற்பத்திக்கான 2 மாதங்களுக்கு தேவையான சோளம் மற்றும் சோயா ஆகியன இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் கிடைக்கப் பெறவுள்ளன. அதனைத் தொடர்வதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத்திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதனைவிடவும், எதிர்கால சந்ததியினருக்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு கோரியுள்ளது. சீனா பாடசாலை மாணவர்களின் உணவுத்திட்டத்திற்காக 10ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்குவதாக அறிவித்துள்ளது. உலக உணவுத்திட்டமும் பல ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளது. ஏனைய தொண்டு நிறுவனங்களும் களத்தில் உள்ளன. 

ஆனால் இவையெல்லாம் எப்போது பாதிக்கப்பட்டவர்களை சென்றடையும் என்பது தான் கேள்வியாகவுள்ளது. ஏனென்றால் அரச கட்டமைப்புக்கும், பாடசாலை சமூகத்திற்கும் இரண்டுவார விடுமுறை வழங்கப்பட்டு விட்டது. இது நீடிப்பதற்கான ஏதுநிலைகளும் அதிகமுள்ளன.  அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் உரியவர்களை உதவிகள் சென்றடைவதற்கான பொறிமுறைகள் என்ன என்பதற்கு தற்போது வரையில் உரிய தரப்புக்களிடமிருந்து பதில்கள் இல்லை.

உணவுக்கான நெருக்கடிகளின் ஆரம்பத் தருணத்திலேயே நாட்டில்; 8 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்களில் ஒரு இலட்சத்து 84ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழிலில் ஈடுபடுகின்றனர். 

உடனடி நடவடிக்கைகள் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் அதற்கான உடற்சக்தி சிறுவர்களிடத்தில் இல்லாது போகும் ஆபத்துக்கள் உள்ளன. அதற்குமப்பால் பூமியைப் பார்க்கவுள்ள, பார்த்த பிஞ்சுகளின் எதிர்காலம்...! நஞ்சாகிவிடும்?  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22