பிரதமர் பதவியை ஏற்குமாறு என்னிடமும் கோரப்பட்டது - சம்பிக்க விசேட செவ்வி

Published By: Digital Desk 5

19 Jun, 2022 | 02:05 PM
image

நேர் கண்டவர் - ரொபட் அன்டனி 

  • வடக்கு கிழக்கை  கோராமல் புலம்பெயர்ந்தோர் இலங்கையில் முதலீடு செய்யவேணடும் 

  • ராஜபக்சவிடம் கடனுக்கு பெறப்பட்ட அரசின் பிரதமராக ரணில் 

  • மக்களின் போக்கு எதிர்க்கட்சிக்கு புரியவில்லை 

  • 13 ஐ அமுல்படுத்துவதே மட்டுமே தீர்வுக்கு சாத்தியம் 

  • பொலிஸ் திணைக்களத்தில் தமிழ் பிரிவை உருவாக்கலாம் 

  • சுமந்திரன் சிங்கள மக்களின் கெளரவத்தை பெறவேண்டும் 

  • மனோ கணேசனே தமிழ் தேசிய அரசியல் தலைவராக தெரிகிறார்

  • சம்பந்தன் தலைமை பதவியை இளம் பிரதிநிதிக்கு வழங்கவேண்டும் 

  • மைத்திரிபால சிறிசேன கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டார் 

  • மஹிந்த குடும்பத்துடன் வெளியேறவேண்டும் 

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து பிரதமர்  பதவியை ஏற்க எனக்கு  எந்த அழைப்பும் வரவில்லை. அதனை நான் பெருமையாக கருதுகிறேன். ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அப்போது நான் ராஜபக்ஷ குடும்பம் வெளியேறினால் நாட்டைக் கொண்டு நடத்த முடியும் என்று பதில் கூறினேன்  என்று  சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.  

13 தாண்டிய எந்த ஒரு தீர்வு திட்டத்திற்கும் இலங்கையில் எந்தவிதமான ஒ  இடமும் இல்லை சாத்தியமும் இல்லை   என்றும் அவர் குறிப்பிட்டார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.  செவ்வியின் விபரம் வருமாறு 

கேள்வி தமிழ் தெரியுமா ?

பதில் அவ்வளவாக தெரியாது அது தொடர்பாக நான் கவலை அடைகிறேன். ஆனால் எனது பிள்ளைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும்.

கேள்வி தமிழ் அரசியல்வாதிகள் தமிழில் உரையாற்றும்போது முழுமையாக மொழிபெயர்ப்பை தான் கேட்பீர்களா ?

பதில் சமகால மொழிபெயர்ப்பை கேட்பேன். 

கேள்வி தற்போது பொதுவாக எவ்வாறு உங்கள் நாட்கள் கழிகின்றன?

பதில் தற்போது நாட்டு நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. மக்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனை அப்படியே எங்களுக்கும் இருக்கின்றது.

எரிபொருள் இல்லாததால் பயணங்கள் செல்ல முடியாமல் உள்ளது. பல மாதங்களாக கொழும்புக்கு வெளியே செல்லவில்லை.

மின்சார பிரச்சனை இருக்கிறது. இது தொடர்பாக என்னிடம் பலர் கேள்வி கேட்கின்றனர். நான்தான் 2010ஆம் ஆண்டு முதல் முதலாக சோலார் சூரிய ஒளி மின்சார திட்டத்தை அறிமுகப் படுத்தினேன்.

கூரைகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி கருவியை பொருத்தி அதனை முன்னெடுக்குமாறு நான் கூறினேன். மறுபுறம் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தேட வேண்டியுள்ளது. அதுவும் தற்போது பாரிய அளவில் விலை அதிகரித்திருக்கிறது.

20 லட்சத்தில் இருந்த மின்சாரத்தில் ஓடக்கூடிய ஒரு கார் தற்போது 86 லட்சம் 90 லட்சத்திற்கும் உயர்ந்துவிட்டது. வீட்டில் சிறிய பகுதியில் மரக்கறி பயிர் செய்கையை மேற்கொண்டுள்ளேன் . 

கேள்வி நடந்து சென்று அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமோ? 

பதில் அது எனக்கு பிரச்சனை அல்ல. நாம் சிறிய காலத்தில் காலத்திலிருந்தே நடந்து இருக்கிறோம். 

கேள்வி சைக்கிள் ?

பதில் சைக்கிள் ஓட்ட முடியும். ஆனால் ஒரு சைக்கிளும் தற்போது 50 ஆயிரத்தை தாண்டி விலை அதிகரித்துவிட்டது. 

கேள்வி நாட்டின் தலைவராக வர வேண்டும் என்றால் முழு நாட்டுக்கும் பயணம் செய்து பிரச்சாரம் செய்ய வேண்டுமே. நடந்து செல்ல முடியுமா?

பதில் நாடு முழுவதும் நடந்து செல்ல முடியாது. ஆனால் தற்போது சூம் கடுமையான தொழில்நுட்பம் இருப்பதால் தொடர்பு கொள்கிறோம். இதுதான் எதிர்காலமாக இருக்கப்போகிறது. காரணம் இந்த எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு உடனடியாக கிடைக்காது.

கேள்வி நீங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்று இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு பங்களிப்பு செய்திருக்கலாமே?

பதில் ரணில் விக்கிரமசிங்க தான் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கப் போவதாக கூறினார். இடைக்கால அரசாங்கம் அமைப்பதாக கூறினார்.

ஆனால் அவை இரண்டும் செய்யப்படவில்லை. இது ராஜபக்சவிடம் கடனுக்கு பெறப்பட்ட அரசாங்கமாகவே இருக்கிறது. பிரதமர் ரணில் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து இருக்கிறார். அதனை நாம் ஆரம்பத்திலேயே கண்டனம அதனால்தான் அதில் இணைந்து கொள்ளவில்லை.

கேள்வி பிரதமர் ரனில் உங்களுக்கு அரசாங்கத்தில் இணைய அழைப்பு விடுத்தாரா?

பதில் அழைப்புவிடுத்தார். ஆனால் சர்வகட்சி அரசை அவர் அமைக்கவில்லை. 

கேள்வி பிரதமர் ரனில் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்தும் கட்சிகள் அதில் இணைந்து கொள்ளாமல் பின் வாங்குவதற்கு அவர் என்ன செய்வார் ?

பதில் ரணில் விக்ரமசிங்கதான் கட்சிகளுடன் இந்த வேலைத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அவர் முயற்சிக்கவில்லை. சில கட்சியில் இருந்து ஒருசில உறுப்பினர்களை பிரித்தெடுத்தார்.

அதனை அவருடைய தவறு என்றும் கூற முடியாது. இது ராஜபக்சமாரின் பிரச்சினையாக இருக்கிறது. யாரும் அரசியலில் தலைவராக உருவாகுவதற்கு ராஜபக்சக்கள் விரும்பமாட்டார்கள்.

அவர்கள் தற்காலிகமாக ஒருவர் மீது இந்த சுமையை சுமத்தி விட்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர். அதனால்தான் கோட்டபாய ராஜபக்ச கூட ஜனாதிபதி பதவியை விடாமல் இருக்கின்றார். ஆனால் முழு நாடும் இந்த இந்த தரப்பினர் வீடு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. 

கேள்வி ஆனால் அதற்காக நாட்டை கட்டியெழுப்பாமல் இருக்க முடியுமா?  

பதில் இன்று இருப்பது ஒரு மனிதர் சம்பந்தமான பிரச்சனை அல்ல. வாகனம் ஒன்று இருக்கிறது.  ஆனால் வீதிகளில் வளைவுகள் காணப்படுகின்றன. மழையும் பெய்கிறது.

சிறந்த ஒரு சாரதி இருந்தால் மட்டுமே வாகனத்தை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.  ஆனால் இப்போது நிலைமை அப்படி அல்ல. வாகனம் உடைந்துவிட்டது. 

அப்போது சாரதி  நல்லவராக இருந்தாலும் பயணத்தை செல்ல முடியாது.  முதலாவது வாகனத்தை சரி செய்ய வேண்டும். 

கேள்வி  இந்த விடயங்கள் தொடர்பில் நீங்கள் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? 

பதில்  ரணில் பிரதமராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் நான் அவருடன் கலந்துரையாடினேன்.

கேள்வி ரணில் பதவியேற்ற பின்னர் உங்களுக்கு அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்தாரா?

பதில் பிரதமர் அழைப்பு விடுத்தார்.   இங்குள்ள தடைகளை பாருங்கள்.  21வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்குக் கூட ராஜபக்சவினர் இடம் கொடுக்காமல் இருக்கின்றனரே ? 

கேள்வி உள்ளே சென்று அழுத்தம் பிரயோகிக்கலாமே? 

பதில் பிரதமர்  தற்போது கஷ்டப்படுகிறார்.  இன்னும் சரியான அதிகார மாற்றம் கூட நடைபெறவில்லை.  மத்திய வங்கிக்கும் திறைசேரிக்கும் சிறந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அவ்வளவுதான். 

கேள்வி இவர்களுடன் செய்ய முடியாது என்று இருப்பது சரியா அல்லது ஏதாவது செய்து நாட்டை மீட்பது சரியா?

 பதில் நீங்கள் நிலைமையை சற்று பாருங்கள். ரணில் பதவியேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால்  முன்னேற்றம் இன்னும் இடம்பெறவில்லை. நான் அந்த இடத்திற்கு சென்றாலும் இந்த நிலைமைதான் ஏற்படும். 

ராஜபக்ஷ   வெளியேற வேண்டும்.  அவ்வாறு அவர்கள் சென்ற பின்னர்  இந்த நாடு ஜனநாயகமானது என்று உலகத்திற்கு தெரியவேண்டும். மக்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை வரவேண்டும். 

வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள்  கூட எமது நாட்டுக்கு டொலர்களை அனுப்புவதில்லை.  அந்தளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது.   

கேள்வி எனினும் நீங்கள் நிதியமைச்சர் பதவியை கேட்டதாகவும் அது கிடைக்காததால் அரசாங்கத்தில் இணையவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில் நான் எந்த ஒரு அமைச்சையும்  கேட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.  நிதியமைச்சுக்கு  செயற்பாட்டு ரீதியான ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.   நிதியமைச்சை கொண்டு செல்வதுதான் நாட்டின் மிக கடினமான ஒரு பணி. ஆனால் எனக்கு இது இந்த விடயத்தில் அனுபவம் இருக்கின்றது. காரணம் நான் நிர்வகித்த ஒரு அரச நிறுவனமும் நட்டம் அடையவில்லை. ஆனால்   ஜனாதிபதி பிரதமர் தரப்பிலிருந்து தடைகள் வந்தால் அதனை கொண்டு நடத்த முடியாது. 

கேள்வி உங்களால் நிதியமைச்சை கொண்டு நடத்த முடியுமா? 

பதில்   சிறந்த சூழலில் சர்வட்சி அரசாங்கத்தில் மற்றும்   இடைக்கால ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒரு பதவியையும் ஏற்று செயல்பட தயாராக இருக்கிறேன்.  

கேள்வி  உங்களால்  டொலர்   கொண்டு வர முடியுமா?

பதில் நிச்சயமாக கொண்டு வர முடியும்.  தற்போது மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கின்றோம்.  எரிபொருள் இல்லை.  இந்தியாவிடம் மீண்டும் 500 மில்லியன் டொலர்களுக்கு உடன்படிக்கை கைச்சாத்திட்டாலும்கூட அதனூடாக எரிபொருள் வருவதற்கு இன்னும் சில நாட்கள் எடுக்கலாம். 

கேள்வி பிரதமர் பதவி ஏற்பதற்கு உங்களுக்கு ஏதும் அழைப்பு வந்ததா? 

பதில் எனக்கு ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனை நான் பெருமையாக கருதுகிறேன். ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அப்போது நான் ராஜபக்ஷ குடும்பம் வெளியேறினால் நாட்டைக் கொண்டு நடத்த முடியும் என்று பதில் கூறினேன்.  காரணம் ராஜபக்ஷ குடும்பம்  அரசில் இருக்கும் வரை வெளிநாடுகள்  நல்ல கண்களை கொண்டு இலங்கையை  பார்க்காது.   முதலில் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். நாட்டில் 50 லட்சம் வாகனங்கள்  உள்ளன. ஆனால் போக்குவரத்து பஸ்கள் பதினெட்டாயிரம்   உள்ளன.  எனவே  முன்னுரிமை அடிப்படையில்  யாருக்கு முதலில் எரிபொருள் தேவை என்பதை உணர்ந்து செயற்படுவது அவசியம்.    மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் பொருள் விநியோகம் செய்கின்றவர்கள், விவசாய உற்பத்தி போக்குவரத்து ‍சேவைகள் என்பனவற்று முதலில் எரிபொருள் வழங்க வேண்டும்.  அங்கு உற்பத்தி நடக்கிறது.  அவற்றில்தான் பொருளாதாரம் இயங்குகிறது.  ஆனால் முன்னுரிமையின்றி எரிபொருள் விநியோகிப்பதில் அர்த்தமில்லை.  

கேள்வி ஐக்கிய மக்கள் சக்தியை கை விட்டு சஜித்‍தை விட்டு வெளியேற காரணம் என்ன ?

பதில்  சஜித்தை கைவிடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கொள்கைகளை மாற்ற வேண்டும்.  நடுத்தர மக்கள் மத்தியில் அந்த கட்சிக்கு வரவேற்பு இல்லை.  இளைஞர்கள் மத்தியில் அந்த கட்சிக்கு வரவேற்பு இல்லை. அவற்றை மாற்றி பயணிப்பது அவசியம். அதில் நான் குறைகளை பார்க்கின்றேன்.  

கேள்வி உங்கள் அரசியல் பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பொருத்தமானதாக இல்லையா ?

பதில் எனது பயணத்தை விட நாட்டின் பயணமே முக்கியமானது.  இன்று மக்கள் 225 பேரையும் வேண்டாம் என்று கூறுகின்றனர். சஜித் பிரேமதாச கோட்டகோகமவுக்கு செல்லும்போது அங்கு அவருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.  நான்  சென்றிருந்தாலும் அடித்திருப்பார்கள்.  இதுதான் நாட்டு நிலைமையாக இருக்கின்றது. முதலாவது சுற்றில்  ஆளுங்கட்சியினரின் வீடுகள் தாக்கப்பட்டன்.  இனி    எங்கள் வீடுகள் தாக்கப்படலாம்.  அதனால்  நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.  

கேள்வி நீங்கள் கூறுகின்ற  இந்த புதிய நிலைமையை எதிர்கட்சி புரிந்து கொள்ளவில்லையா?

பதில் அதுதான் மிகவும் கவலையான ஒரு விடயமாக உள்ளது. அவர்கள் தமது பாதையை மாற்றி விடுவார்கள் என நம்புகிறோம்.  எப்படியிருப்பினும் இந்த போராட்டம் காரணமாக ராஜபக்ஷமார் அரசியலிலிருந்து வெளியேறும்   வழி ஏற்பட்டது.  பிரதான கட்சிகளில் பூகம்பங்கள் ஏற்பட்டன. புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கம் பலர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.  

கேள்வி சுயாதீனமான வந்துள்ள நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? 

 பதில் குடும்ப அரசியலுக்கு எதிராக இளம் சந்ததியினருக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுப்பது  எனது நோக்கமாகும்.   நல்ல மனிதர்களை இந்த நாட்டின் எதிர்கால பயணத்திற்காக இணைத்துக் கொள்வதற்கு நான் இந்த முடிவை எடுத்தேன். 

கேள்வி  அப்படியானால் சம்பிக்க ரணவக்கவுக்கு நாட்டின் பிரதான கதிரையில் அமர்வதற்கான ஆசை வந்துவிட்டதா ? 

பதில் என்னைப்பொறுத்தவரையில் பிரதேச சபை   உறுப்பினர் பதவி கூட வேண்டாம்.  ஆனால் இந்த நாட்டில் அரசியல் பயணத்தை  இழந்த ஒரு தரப்பினர் இருக்கின்றனர்.   யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் பெற்றோர் வழியில் அந்த பதவிக்கு வரவில்லை.  யாழ். மின்சார சபையின் தலைமை அதிகாரி பெற்றோர் வழியில்  அந்த பதவிக்கு வரவில்லை.  திறமை மற்றும் கல்வி ஊடாக அங்கு வந்தனர்.  ஆனால் அரசியலில் மட்டும் பெற்றோரின் ஆதிக்கத்தின் ஊடாகவே  வருகின்றனர்.  இதுதான் பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறந்த தலைவர்கள் உள்ளனர்.  அந்த தரப்பினருக்கு உரிமையை பெற்றுக் கொடுப்பது எனது நோக்கமே தவிர பிரதான கதிரைக்கு செல்வது எனது நோக்கமல்ல.

கேள்வி  ஆனால் நாட்டை நிர்வகிக்க பிரதான முடிவுகள் எடுக்க பிரதான கதிரை அவசியமாகின்றதே? 

பதில் அதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

கேள்வி நீங்கள் அதற்கு நீங்கள் தயாரா ?

பதில்  நான் பணியாற்றுவது எனது தேவைக்காக அல்ல.  யுகத்தின் தேவைக்காகவே செயற்படுகின்றேன். 

 கேள்வி   யுகம் உங்களை கேட்கிறதா?

 பதில் புதிய அரசியல் தலைமைத்துவத்தை இந்த யுகம் கேட்கிறது

 கேள்வி நீங்கள் அப்படிப்பட்ட ஒரு தலைவரா?

 பதில் நான் புதிய தலைவர் அல்ல. பழைய தலைவர்.  இந்த நெருக்கடிக்கு நாமும் பொறுப்புக்கூற வேண்டும்.  புதிய தரப்பினருக்கு பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான எனது கருத்து. 

கேள்வி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல்  தீர்வு விடயத்தில் உங்கள் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதே? 

பதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே எமது நம்பிக்கையாக இருந்தது.  காரணம் அவர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டே கதைத்தார்கள்.  புலிகள் எப்போதுமே யுத்தத்தை பல படுத்துவதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தினார்கள்.  புலிகள் சிங்கள மக்களை மட்டும் கொல்லவில்லை. தமிழ் தலைவர்களை  கொலை செய்தனர்.  அத்துடன் மூன்று லட்சத்துக்கு மேல் தமிழ் மக்களை  பணயக் கைதிகளாக வைத்திருந்தனர்.  அவை மனித உரிமை மீறல்கள் .  இன்று உயிருடன் இருக்கின்ற பன்னிரண்டாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள்  கடும் கஷ்டங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர்.  அவர்கள் கல்வி கற்கவில்லை. சமூகத்தில் அவர்களுக்கு ஒரு  சிறந்த அந்தஸ்து கிடைப்பதில்லை.  இராணுவத்தினர் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் வெளிநாடு சென்று இருக்கின்றனர்.  ஆனால் இங்கிருக்கின்றவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை.   அரசியல் தீர்வு என்று பேசிக் கொண்டிருக்கின்ற தமிழ் கூட்டமைப்புக்கு   இது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு இல்லை. 

இந்நிலையில் எப்படியோ இந்தியா பலவந்தமாக தலையிட்டு மாகாண சபை முறைமையை கொடுத்திருக்கிறது.  அதனை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாகவே நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.   காரணம் 13 தாண்டிய எந்த ஒரு தீர்வு திட்டத்திற்கும் இலங்கையில் எந்தவிதமான ஒ  இடமும் இல்லை சாத்தியமும் இல்லை அதற்கு இந்தியாவும் இடம் அளிக்காது

கேள்வி   ஆனால் 13-இல் இருக்கின்ற அதிகாரங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லையே?

 பதில் நீங்கள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை பற்றி கூறுகின்றீர்கள். காணி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் தேசிய காணி ஆணைக்குழு அமைக்கப்பட வில்லை. மாறாக  காணி விவகாரத்தில் சிக்கலில்லை.   பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் சிக்கல் இருக்கின்றது.  இது இலங்கை ஒரு சிறிய நாடு. எனவே இங்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் என்பது சிக்கலாகும்.  இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் ஒரு தமிழ் பிரிவை உருவாக்கி அதனூடாக தமிழ் மொழிமூல நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற  நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களிலும் ஒரு தமிழ் பிரிவு கட்டாயமாக உருவாக்கப்படவேண்டும்.  

கேள்வி நீங்கள் மின்சக்தி அமைச்சராக இருந்தீர்கள். தற்போது நாங்கள் பாரியதொரு மின்வெட்டு பிரச்சனையை எதிர் கொண்டிருக்கின்றோம்.  இதற்கு எதிர்காலத்தில் தீர்வு இருக்கின்றதா?

பதில் எனது காலத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. எனது காலத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது.  யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டது. சுன்னாகத்தில் இருந்து வவுனியாவுக்கு ஒரு தொகுதியை அமைத்தோம்.   முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினோம்.   பிரபாகரன் உயிரிழந்த பின்னர் மூன்று மாதங்களில் புதுமாத்தளன் பகுதிக்கு மின்சாரம் வழங்கினோம்.தற்போதுள்ள பிரச்சனை ‍டொலர்  இன்மையால் டீசலை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகும்.   அதனால் டீசலில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் போதுமானதாக இல்லை.  எனவே நாம் தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு செல்ல வேண்டும்.  இலங்கையில் மிக அதிகமாக புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் காங்கேசன்துறை பூநகரி மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.   சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை நானே கொண்டு வந்தேன்.  அதனை இலங்கை முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது. 

நான் இலங்கையில் இருக்கின்ற அரசியல் தலைவர்களின் பெயர்களை கூறுகின்றேன் அவர்கள் தொடர்பான உங்களது மனதில் தோன்றும் எண்ணங்களை நீங்கள் பகிரலாம். 

மஹிந்த ராஜபக்ச 

பதில் இந்த நாடு வங்குரோத்து நிலைமைக்கு செல்ல இவரை பிரதானமானவர். அவர் தற்போது தனது குடும்பத்தில் இருக்கின்ற சகலரையும் அரசியலில் இருந்து ஒதுக்கி கொள்ள வேண்டும்ங

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 

பதில் இவர் உடனடியாக விலகி செல்ல வேண்டும்.

 உதய கம்மன்பில 

பதில் 2015ஆம் ஆண்டு நான்  மகிந்தவிடம் இருந்து விலகி வந்தபோது கம்மன்பில என்னை தேசத்துரோகி ஒன்றும் மஹிந்தவை  கடவுள் என்றும் கூறினார்.  கோட்டாபய ராஜபக்சவை  லீ குவான் யூ என்று கூறினார்.  

கேள்வி மீண்டும் அவருடன் இணையும் சாத்தியம் இருக்கிறதா? 

பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை கம்மன்பில இந்த நாடு வங்குரோத்து அவைதற்கு பங்களிப்பு செய்யவில்லை.

 மைத்திரிபால சிறிசேன 

பதில் மைத்ரிபபால இரண்டு விடயங்களில் இலங்கையில் முக்கியமானவராக இருக்கிறார்.   ராஜபக்சவை தோற்கடிக்க முடியாது என கூறப்பட்ட போது தைரியமாக வெளியே வந்தவர்.  இரண்டாவதாக அவர்  இலங்கையின் அரசியலில் வகுப்பு மட்டத்தில் இருந்து வந்தவர் அல்ல.  ஆனால் அவருக்குக் கிடைத்த அந்த பொன்னான வாய்ப்பை  தவற விட்டார்.

 கர்தினால் ஆண்டகை 

பதில்  கருதினால் ஆண்டகை பல விமர்சனங்களுக்குட்பட்டிருக்கிறார்.  ஆனால் இவர் பௌத்த மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரு ஆண்‍டகையாக  இருக்கிறார்.   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது நாட்டில்  வன்முறை ஏற்படுவதை தடுப்பதற்கு பங்களிப்பை செய்தவர்.  ஆனால் மஹிந்த மீண்டும் வெற்றிபெற  மறைமுகமாக செயற்ட்டவராக கர்தினால் பார்க்கப்படுகிறார்.   கத்தோலிக்க மக்களின் ஆதரவை மறைமுகமாக பெற்றுக் கொடுத்தவர்.

 சம்பந்தன் 

பதில்  சம்பந்தனுடன் எனக்கு தொடர்பு இருக்கின்றது. அவர் பாராளுமன்றத்தில்  இருக்கின்ற சிரேஸ்ட தலைவர்.  எஸ் டி செல்வநாயகம் உருவாக்கிய தனி ராஜ்ஜிய  கோட்பாடுகளில் இருந்து சம்பந்தனிடம் வெளியே வரவில்லை.  புலிகளின் அழுத்தங்களையும் தாண்டி அவர் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இன்றுவரை இருக்கின்றமை ஒரு வெற்றியாகும்.  ஆனால் அவர் தற்போது இளம் தகுதியான தலைமைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

கேள்வி  அவருக்குப் பின்னர் ஒரு தலைமைத்துவத்தை இயக்கக்கூடிய யாரையாவது நீங்கள் காண்கிறீர்களா?

 பதில்  சிலர் உருவாகியிருக்கின்றனர்.   மாவை சேனாதிராஜா போன்ற சிரேஷ்ட தலைவர்களும் இருக்கின்றனர்.  சுமந்திரன் சாணக்கியன் போன்ற தலைவர்களும் உருவாகியிருக்கின்றனர்.  நல்ல தமிழ் தலைவர்கள் சிங்கள மக்களின் கௌரவத்தை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும். 

டலஸ் அழகப்பெரும 

பதில்  நானும் டலஸும் ஒரே காலத்திலேயே அமைச்சரவைக்கு பிரவேசித்தோம்,  அவரை  எனக்கு நன்றாக தெரியும்.  குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர் அல்ல.  அவர் எதிர்காலத்தில் ஒரு புதிய அரசியலை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

 கேள்வி இணையும் சாத்தியம் இருக்கிறதா?

பதில் சந்தர்ப்பம் உருவாகினால் சாத்தியம் இருக்கிறது 

காஞ்சன விஜேசேகர 

பதில் தனது தந்தை காரணமாகவே அரசியலுக்கு வந்தார். ஆனால்   திறமையாக  செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு ஒன்றைக் கூறுகிறேன். கடுமையானவர்கள், இருக்கின்ற இடம் அது.   இளம் தலைவர் ஒருவர் உருவாகும்போது ராஜபக்சமார் பொறாமைப்படுவார்கள்.  விழிப்புடன் பயணித்தால் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கின்ற ஒரு அரசியல் தலைவராக காஞ்சனவை பார்க்கிறேன்.

ரவூப் ஹக்கீம் 

பதில் ரவூப் ஹக்கீம்  என்னுடைய சிறந்த நண்பர்.  அவர் சிறந்த தொழில் சார் அரசியல்வாதி.  சிறந்த அறிவாற்றல் உலக அறிவு என்பது அவருக்கு இருக்கின்றன.  ஆனால் அவரது கட்சியினர் அவ்வாறு இல்லை. எனவே அவர் புதிய இளம் அறிவார்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கவேண்டும். 

மனோ கணேசன் 

பதில்   இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ் தலைவராக தமிழ் தேசிய தலைவராக நான் மனோ கணேசனை பார்க்கிறேன்.  சிங்கள மக்களும் அவரை ஏற்றுக் கொள்கின்றனர்.  எப்போது பேசும்போதும் சிங்கள மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத்து பேசுகிறார்.  தமிழ்தேசிய கூட்டமைப்பின் சமஸ்டி பற்றி பேசும்போது சாத்தியமில்லை என்று மனோ கணேசன் கூறினார்.   எனவே மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.  தமிழக முதலமைச்சர் இலங்கைக்கு தமிழ் மக்களுக்கு நிவாரணம் அனுப்பும்போது தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.  எனவே சகலருக்கும் உணவு அனுப்புங்கள் என்று கூறியவர்.   தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற சிங்கள மக்களின் அன்பைப் பெற்ற தமிழ் தேசிய தலைவராக மனோ  இருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க 

பதில் ரணில் விக்ரமசிங்க சிறந்த அனுபவம் உள்ளவர்.   2015ஆம் ஆண்டு அவர் தனது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.   அவருக்கு சிறந்த அறிவாற்றல்  இருக்கிறது.    அவருக்கு ஒரு சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது.  அப்படி செய்தால் கௌரவத்திற்கு உட்பட்ட   தலைவராக   ஓய்வுபெறலாம்.  இல்லாவிடில் அடுத்த சில வாரங்களில் நாடு மிக ஒரு அழிவு நிலைக்கு செல்லும்.

சுமந்திரன் 

பதில்  பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஒரு புத்திசாலியான மக்கள் பிரதிநிதி.   அரசியலமைப்பு  நெருக்கடியின் போது அவர் தலையிடும் விதம் மிகவும் அபூர்வமானது. அவர் தேசிய தலைவராக வேண்டுமானால் தமிழ் மக்களின் புகழை பெற்றுக் கொள்வது மட்டுமன்றி சிங்கள மக்களின் கௌரவத்தையும் பெற வேண்டும்.  அப்படி செய்தால் சிறந்த எதிர்காலம் அவருக்கு இருக்கிறது.

கேள்வி புலம் பெயர் மக்கள் தொடர்பான உங்கள் பார்வை என்ன ?

பதில் இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.  அவர்களில் புலிகளுக்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம்.  எனினும்  இவர்கள்  வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும்.   வடக்கு கிழக்கை எமக்கு  தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் முன்னேற்ற செய்யலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49