(ஆர்.வி.கே.)

போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் உடனான சந்திப்பின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை கொழும்பில் சந்தித்து பேசவுள்ளனர்.


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம்  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது. 


யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன்  பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


இக் கலந்துரையாடலில் அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளையடுத்து  தமது போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன்  நாளை பகல்  கொழும்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் ஒன்றியம் ஆகியவற்றுடனான சந்திப்பொன்று  இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனினும் காலை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதிகோரி சக மாணவர்கள் பல்கலைகழக வாயில் கதவினை மூடி நிர்வாக செயற்பாட்டை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.