மீண்டும் பழையபடி

Published By: Priyatharshan

31 Oct, 2016 | 01:06 PM
image

மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்ததைக் கண்டனம் செய்வதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் அந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. மாணவர்கள் பலியான கொடூரச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருந்ததால் ஹர்த்தாலுக்கு அவர்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் குடாநாட்டில் கடையடைப்பும் “எழுக தமிழ்” பேரணியும் நடத்தப்பட்டு சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் வடமாகாணம் ஒரு ஹர்த்தாலைக் கண்டது.

சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரில் பெரும் அழிவுகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்த தமிழ் மக்கள், வழமை வாழ்வுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அதுவும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழரை வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் வடக்கின் நிகழ்வுப் போக்குகள் குழப்பகரமானவையாக விரைந்து மாறிக்கொண்டு வருகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலகட்டத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் குடிமக்கள் கொல்லப்பட்ட பாரதூரமான முதல் சம்பவமாக கொக்குவிலில் நடராஜா கஜன், பவுண்ராஜ்சுலக் ஷன் என்ற இரு யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணங்களும் அமைந்திருக்கின்றன. சம்பவதினமான அக்டோபர் 20 வியாழக்கிழமை  பின்னிரவு கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடமையிலிருந்ததாகக் கூறப்படும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னைய ராஜபக் ஷ அரசாங்கமாக இருந்திருந்தால் இவ்வாறாக உடனடியாக பொலிஸ்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்களா என்ற கேள்வி இன்றைய அரசாங்கத்தை விரும்பாதவர்களிடமிருந்தும் கூட தவிர்க்க முடியாமல் வந்தது.

மாணவர்களின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. முதலில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் விபத்து என்று கூறப்பட்ட இச்சம்பவம் குறித்து பிறகு கருத்து வெளியிட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பொலிஸார் முன்கூட்டியே திட்டமிட்டுத் துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்யவில்லை என்றும் அது தற்செயலாகவே நிகழ்ந்திருக்கிறது என்றும் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பலியான மாணவர்களின் குடும்பத்தவர்களை சம்பவ தினத்துக்கு அடுத்தடுத்த நாளே அணுகிய உயர் பொலிஸ் அதிகாரிகள் மரணச் சடங்குகளுக்கான முழுச்செலவையும் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவும் அந்தக் குடும்பங்களில் படித்த இளைஞர், யுவதிகள் இருந்தால் அவர்களுக்கு உகந்த வேலைவாய்ப்புகளையும் நஷ்ட ஈட்டையும் வழங்கவும் தயாராயிருப்பதாக கூறியதாக வெளியான செய்திகளை தங்கள் தரப்பில் தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை பொலிஸார் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்?

பொலிஸார் மறித்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் இரு மாணவர்களும் விரைந்து சென்றதாலேயே துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. நிறுத்தாமல் சென்றவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தால் அதை ஓட்டிச் சென்றவர் அல்ல, பின்னால் அமர்ந்திருந்தவரே சுடப்பட்டிருப்பார்.இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனைத்தான் குண்டு துழைத்திருக்கிறது. இது எவ்வாறு நடந்திருக்க முடியும் என்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியிருந்தார். மோட்டார் சைக்கிளில் சென்ற இரு மாணவர்களுமே உயிருடன் இல்லை. அதனால் சம்பவம் தொடர்பில் அவர்கள் தரப்பு விளக்கத்தை அறிய எந்த வாய்ப்பும் இல்லை. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொலிஸார் கூறவிருப்பதை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இத்தகையதொரு சூழ்நிலையில் உண்மை வெளிவர வாய்ப்பு உண்டா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இச்சம்பவம் தொடர்பாக இது வரையில் நிலைவரம் தெளிவாக இல்லை என்று சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக கூறியிருக்கிறார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முன்னெடுக்கப்பட்ட முறையும் அதை அடிப்படையாகக் கொண்டே தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கு அந்தந்தக் காலகட்டங்களில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த அரசியல் அணுகுமுறைகளும் போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதில் காட்டப்படுகின்ற தயக்கமும் அதிகப் பெரும்பான்மையாக சிங்களவர்களையே கொண்ட ஆயுதப்படைகள் மத்தியிலும் பொலிஸார் மத்தியிலும் தாங்கள் போரில் வெற்றிக்கொள்ளப்பட்ட ஒரு "எதிரிச்  சனத்தொகையின்" மத்தியில் நிலைவைக்கப்பட்ட ஒரு படையினர் என்ற உணர்வுடன் செயற்படுவதற்கே வழிவகுத்திருக்கிறது. போர் வெற்றிக் குதூகலத்தில் சிங்கள மக்களை மிதக்கவிட்டு அரசியல் அனுகூலம் அடைவதற்கு முன்னைய ஆட்சியாளர்களினால் போர்க்காலத்தில் மாத்திரமல்ல, போரின் முடிவுக்குப் பின்னரும் கூட மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகளின் விளைவாக அந்த மக்கள் மத்தியில் ஒரு இராணுவவாத அரசியல் உணர்வுகளே மேலோங்கியிருந்தன. இன்றும் அந்த நிலைமையில் பெரிதாக மாற்றம் இல்லை. அதே மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற ஆயுதப் படைகளினதும் பொலிஸ் படையினதும் உறுப்பினர்களில் பெரும்பாலும் எல்லோரிடமும் அதே உணர்வுகள் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் வடக்குஇகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பணிபுரியும் போது தோற்கடிக்கப்பட்ட பிராந்தியத்தில் ஒரு அந்நிய சமூகத்தின் மத்தியில் தாங்கள் இருப்பதாக நினைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறதே தவிரஇ தங்கள் நாட்டின் சொந்தப் பிரஜைகளான இன்னொரு சமூகத்தின் மத்தியில் இருக்கின்றோம் என்ற உணர்வை வளர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றுதான் கூற வேண்டும். இது இயல்பாகவே அந்த சமூகத்தின் மனித உரிமைகளை மதிக்க வேண்டுமென்ற மனப்போக்கையும் செயற் சார்பையும் ஊக்குவிக்க உதவாது. இந்தக் கருத்தியலின் அடிப்படையிலும் கொக்குவில் சம்பவத்தை நோக்க வேண்டும். வெறுமனே ஒரு ஆட்சிமாற்றம்! ­ அதுவும் இராணுவ வாத அரசியலின் போக்குகளை முற்றுமுழுதாகப் பகைத்துக் கொள்வதற்கு துணிச்சல் கொள்ளாத அரசியல் தலைவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ்இ ­ இந்த துரதிஷ்டவசமான மனப்போக்கை சடுதியாக மாற்றிவிடுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.

வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட தினத்துக்கு முதல் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்டு தங்களின் இரு சகாக்களினதும் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று நீதிகோரினார்கள். அவர்களின் அந்தப் போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு தென்னிலங்கையில் உள்ள சகல பல்கலைக்கழகங்களின் முன்பாகவும் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டங்களை அதே தினம் நடத்தியிருந்தது. இது கெடுதியாக அமைந்த ஒரு சம்பவத்திற்குள்ளால் 'ஒரு நல்ல' காரியத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. 

அந்த சம்மேளனம் கொக்குவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பல்கலைக்கழக மாணவர் சமுதாயம் முழுவதற்கும் எதிரான பொலிஸாரின் ஒரு அட்டூழியமாகவே நோக்கியது. போர்காலத்தில் அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கில் சொந்தப் பிரஜைகள் மீதே விமானக் குண்டு வீச்சுக்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில்  அப்பாவி மக்களைக்கொன்ற போது அந்த மிலேச்சத்தனத்தைக் கண்டித்து தென்னிலங்கையில் இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் கூட சிறு ஆர்ப்பாட்டத்தையேனும் நடத்துவதற்கு துணிச்சல் கொள்ளவில்லை. அத்தகையதொரு அருவருக்கத்தக்க காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கும் நாம் இன்று வடக்கில் பொலிஸாரின்  அத்துமீறலில் மாணவர்கள் பலியான சம்பவத்துக்கு எதிராக தென்னிலங்கை மாணவர்கள் கிளர்ந்தெழவதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்றால், அதிலிருந்து சிங்கள அரசியல் சமுதாயத்தைக் காட்டிலும் தமிழ் அரசியல் சமுதாயமே  முறையான சமிக்ஞையைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக மாத்திரமல்ல, அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் தென்னிலங்கை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்காக எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்யலாம் என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களை வீதிப் போராட்டங்களுக்குத்  தயார் செய்வதில் அக்கறை காட்டுகின்ற அரசியல் சக்திகள் இது விடயத்தில் கூடுதல் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவமும் அதனைத் தொடர்ந்து வடக்கில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற நிகழ்வுப் போக்குகளும் தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பெரும் பதற்றத்தையும்  கவலையையும் தோற்றுவித்திருக்கின்றன கடந்த மாதம் யாழ். நகரில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் மூலமாக தமிழர் அரசியல் மீண்டும் தீவிரவாத மயப்படுத்தப்படுவதாக தென்னிலங்கையில் எச்சரிக்கைக்குரல் கள்  எழுந்திருக்கும் பின்புலத்தில் வைத்தும் இரு மாணவர்களின் மரணங்களின் பின்னணி பற்றிய ஊகங்கள் செய்யப்படுகின்றன என்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

போரின் முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நல்லிணக்கச் செயற்பாடுகள் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் நலன்களை உறுதிப்படுத்துவனாக இருக்க வேண்டும். அது விடயத்தில் இன்றைய அரசாங்கம் மேற்கொள்கின்ற செயற்பாடுகளின் பாரதூரமான போதாமையே வடக்கில் மீண்டும் குழப்பகரமான நிலைமைக்கு வழிவகுக்கிறது. இதை தடுத்து நிறுத்துவது முற்றிலும் அரசாங்கத்தைப் பொறுத்ததே.

போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர் என்று காலஞ்சென்ற சீனத் தலைவர் மாஓசேதுங் கூறினார். இரத்தம் சிந்தும் அரசியலைச் செய்த ஒரு சமூகம் இப்போது இரத்தம் சிந்தாத போரையே செய்யக்கூடியதாக இருக்கிறது. உரிமைகள் மறுக்கப்படுகின்ற எந்தவொரு மக்கள் சமூகமும் இரத்தம்  சிந்தாத போரைச் செய்தேயாக வேண்டும். இது நியதி.  இன்று வடக்குஇ கிழக்கில் வாழ்கின்ற இளஞ் சந்ததியினர் உள்நாட்டுப் போர்க் கால கட்டத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்   அவர்களுக்கு தெரிந்த நடைமுறை அரசியல் என்பதோ உரிமைப் போராட்டம் என்பதோ இனப்போர் சார்ந்த செயற்பாடுகள் தான். அந்த உணர்வுடனேயே அவர்கள் சமூகத்தில் வளர்ந்திருக்கிறார்கள். அவர்களை ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அழைத்து ஈடுபடுத்தும் போது   அவர்களை நிதானமாகக் கையாளாத பட்சத்தில் உணர்ச்சிவேகத்தில் அதில் இருக்கக்கூடிய ஜனநாயக வரம்பை அவர்கள் மீறுவற்கு நீண்ட நாள் எடுக்காது. அதன் பல்வேறு அறிகுறிகளை அண்மைக்காலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஜனநாயக அரசியல் போராட்டங்களுக்காக அந்த இளஞ் சந்ததிக்கு அழைப்பு விடுக்கும் தமிழ் அரசியல் சக்திகள் இது விடயத்தில் தங்களுக்கு இருக்கின்ற பெரும் பொறுப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.

( வீ.தனபாலசிங்கம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21