மைனா கோ கம, கோட்டா கோ கம தாக்குதல்கள் : தேசபந்து தென்னகோன் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு நீதிமன்று உத்தரவு

Published By: Vishnu

15 Jun, 2022 | 10:49 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்தவும் சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைகளை இதுவரை அமுல் செய்யாமை தொடர்பில்  நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் 15 ஆம் திகதி புதன்கிழமை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின்  செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான  வழக்கு விசாரணைகள் 15 ஆம் திகதி புதன்கிழமை கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்  விசாரணைக்கு வந்த போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

15 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைகளின் போது விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினருக்காக  சிரேஷ்ட பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் டிலான் ரத்னாநாயக்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் றியாஸ் பாரி, அரச சட்டவாதி சஜித் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான யு.ஆர்.டி சில்வா,அனுஜ பிரேமரத்ன, சம்பத் மென்டிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ச குலரத்ன ,சரத் ஜயமான்ன ஆகியோர் மாவனெல்லை நீதிமன்றில் நடக்கும் ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஆஜராகும் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய,மைத்திரி குணவரத்ன  உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இவ்வழக்கில்  ஆஜராகின.

சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டியின் ஆலோசனைக்கு அமைய  சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆஜரானார்.வழக்கை மேற்பார்வை செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகினார்.

இந்நிலையில் மன்றில் இதுவரையிலான விசாரணை நிலைமையை  சிரேஷ்ட பிரதி சொலிசிஸ்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்க மன்றில் முன் வைத்தார்.

' கனம் நீதிவான் அவர்களே,  இந்த விவகாரத்தில் இதுவரை 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 747 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்ப்ட்டுள்ளன. 

அதில் 366 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள். 338 பேர்  சிவிலியன்கள். கடந்த தவணை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய  உயர் பொலிஸ் அதிகாரிகள் நால்வரின்  கடமை நேர, தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் உரை தொடர்பில் உள வள நிபுணர்களின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.

மற்றொரு சந்தேக நபரான சமன் லால் பெர்ணான்டோ மற்றும்  அலரி மாளிகை விடுகை நிகழ்வை தொகுத்தளித்த தொகுப்பாளரின் உரைகள் தொடர்பிலும்  உள வள அறிக்கை பெறப்பட்டுள்ளது.

அந்த உரைகள் பொது மக்களை வன்முறையின் பால் தூண்டியதா என்பது தொடர்பில் அதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சி.சி.ரி.வி. பதிவுகள் பிரகாரம் மற்றொரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொறட்டுவை நகர சபை உறுப்பினரான  பிரதீப் ஷ்ரியந்த பெர்ணான்டோ என்பவரே அந்த சந்தேக நபர் ஆவார்.  அவர்  தனது வசிப்பிடத்திலிருந்து மறைந்து வாழும் நிலையில், அவருக்கு வெளிநாடு செல்ல  தடை விதிக்குமாறு கோருகின்றேன் ( தடை விதிக்கப்பட்டது)

 இந்த விவகாரத்தில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவு செய்து, கடந்த 8 ஆம் திகதி சட்ட மா அதிபருக்கு கோவையை கையளித்துள்ளனர்.

அந்த கோவையை சட்ட மா அதிபர் ஆராய்ந்து வரும் நிலையில் விரைவில் அது குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

 அத்துடன்  மேலும் இருவரை சந்தேக நபர்களாக பெயரிடவும், அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்குமாரும் கோருகின்றேன்.

 முதல் நபர்  சஜித் சாராங்க. இவர் மைனா கோ கம மீதான தாக்குதலின் போது,  விஷேட தேவை உடைய  முன்னாள் இராணுவ வீரரை தாக்குவது அவரே. 

அவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனினும் அவர் நாடு திரும்பும் போதேனும் கைது செய்ய அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கவும்.

 அடுத்த நபர்  துஷித் சம்பத் நாண்யக்கார.  இந்த சந்தேக நபரே,  ' இது தான் கோல் பேஸுக்குள் இறங்க நல்ல சந்தர்ப்பம் ' என சப்தமிட்டு மக்களை கூட்டியவர். 

இவரது வதிவிட முகவரியை கூட கண்டுபிடிக்க முடியாத நிலையில் உடனடியாக அவரின்  வெளிநாட்டு பயணத்தையும் தடைச் செய்யவும் ( அக்கோரிக்கைகளுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன )

 அத்துடன் கடந்த மே 9 ஆம் திகதி தாக்குதல்கள் நடந்த தினம், காலை வேளையில் பொலிஸ் மா அதிபர் தலைமையில் ஒரு சூம் கலந்துரையாடல் நடந்தமை தொடர்பில் கடந்த தவணை வெளிபப்டுத்தப்ப்ட்டது.

 இதன்போது 42 பொலிஸ்  அதிகாரிகள் அதில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் 25 பேரின்  வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்ப்ட்டுள்ளன.

 இதுதான் விசாரணையின் நிலைமை. இதற்கு முன்னர் தெரிவித்ததைப் போன்றே, விளக்கமறியலில் இருக்கும்  5 ஆம் சந்தேக நபர் சனத் நிசாந்த, 6 ஆம் சந்தேக நபர் டேன் பிரியசாத் மற்றும்  7 ஆம்  சந்தேக நபர் சமன் லால் பெர்ணான்டோவுக்கு பிணையளிக்க ஆட்சேபனைகளை முன் வைக்கின்றேன்.

அவர்களுக்கு பிணையளித்தால் பொது  மக்களிடையே குழப்பம்  ஏற்படலாம். அத்துடன் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.  இந்த 3 விடயங்களையும் மையப்படுத்தி அவர்களுக்கு பிணையளிக்க  ஆட்சேபனை முன் வைக்கின்றேன். ' என  வாதங்களை முன் வைத்தார்.

இதனையடுத்து சந்தேக நபர்களுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான யூ. ஆர்.டி. சில்வா மற்றும் அனுஜ பிரேமரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி ஜயந்த டயஸ் நாண்யக்கார ஆகியோர்  வாதங்களை முன் வைத்தனர்.

 சமன்லால் பெர்ணான்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி  யூ. ஆர்.டி. சில்வா வாதங்களை முன் வைத்த நிலையில், தனது சேவை பெறுநருக்கு எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் பிணையளிக்குமாறு கோரினார்.

 பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த சார்பில் வாதங்களை முன் வைத்த  ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன,  முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிணையளிக்க முடியுமான குற்றச்சாட்டுக்கள் எனவும், தனது சேவை பெறுநர் சார் விசாரணைகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விளக்கமறியலில் அவர் இருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி அவருக்கு பிணையளிக்குமாறு கோரினார்.

 டேன் பிரியசாத்துக்காக மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ஜயந்த டயஸ் நாணயக்கார, அவருக்கு பிணை கோரிய போதும்,  இதனையொத்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய அவ்வழக்கின் பாதிக்கப்பட்ட தரப்பு முன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பில்  நீதிமன்றின் உத்தரவு வழங்கப்படும் வரை இவ்வழக்கில் டேன் பிரியசாத்துக்கு பிணையளிக்க முடியாது என  நீதிவான் அறிவித்தார்.

 எனினும் சனத் நிசாந்த,  சமன்லால் பெர்ணான்டோ உள்ளிட்ட 3 சந்தேக நபர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்ததுடன் அவர்களது வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து உத்தரவிட்டார்.

இந் நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய வாதங்களை முன் வைத்து,  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனே இந்த முழு சம்பவங்களினதும் பின்னனியில் இருந்த  பிரதான சுத்திரதாரி என தெரிவித்ததுடன், அவர் தொடர்பில் நடவடிக்கைஎடுக்க, அல்லது கைது செய்ய சி.ஐ.டி.யினர் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக பின்வாங்குவதாக குறிப்பிட்டனர். அதனால் அவரை சந்தேக நபராக பெயரிடுமாறு அவர் நீதிவானிடம் கோரிக்கை விடுத்தார்.

 இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன வாதங்களை முன் வைத்து,  தேசபந்து தென்னகோன் கடந்த மே 23 ஆம் திகதி எஸ்.டி.ஐ.ஜி./ டப்ளியூ. பி./10207/2022 எனும் இலக்கத்தின் கீழ்  சி.ஐ.டி.  பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பொலிஸ் மா அதிபர்  சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு பதிலளிக்க தனக்கும் , கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும்  கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கும்  வாய்ப்பளிக்க அதில் தேசபந்து தென்னகோன் கோரியிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இது விசாரணைகளில் மேற்கொள்ளப்படும் தலையீடு என கூறினார். அத்துடன் முன்னாள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன அப்பதவியை விட்டு செல்ல, தேசபந்துவின் அழுத்தமே காரணம் என அவர் தெரிவித்ததுடன்,  மே 8 ஆம் திகதி நடந்த சூம் கலந்துரையாடலில், மறு நாள் எவரும் அலரி மாளிகையில் ஒன்று கூடுவோர் மீது  கண்ணீர் புகை, தண்ணீர் பிரயோகம் செய்யக் கூடாது என தேசபந்து தெளிவான கட்டளைகளை வழங்கியிருந்ததாக குறிப்பிட்டார்.

 இதனால் பாரிய விளைவுகள் வரப்போவதை உணர்ந்து, ஜனாதிபதி செயலகம் மற்றும்  அதனை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன மறு நாள் வேலைக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது வாக்கு மூலம் கூட இன்னும் சி.ஐ.டி.யினரால் பதிவு செய்யப்படவில்லை என  ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.

அத்துடன்  சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியும் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக  இடமாற்றம்,  ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்காமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஹெட்டி ஆரச்சியை மன்றுக்கு அழைத்து விளக்கம் கேட்குமாறும் அவர் கோரினார்.

 இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, தேசபந்து தென்னகோனுக்கு எதிராக  இடமாற்றம்,  ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்காமை தொடர்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஹெட்டி ஆரச்சியை  மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டதுடன், அவரின் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்ய சி.ஐ.டி.யினருக்கும் பணித்தார்.

 அத்துடன் சி.ஐ.டி. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன,  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்யவும்,  தேசபந்து தென்னகோன்  கடந்த மே 23 ஆம் திகதி சி.ஐ.டி.க்கு அனுப்பிய கடிதத்தை மன்றில்  சமர்ப்பிக்கவும் நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33