பஷிலின் ஆர்.எஸ்.எஸ். அரசியல்

15 Jun, 2022 | 08:18 AM
image

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிறகு பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் வாக்களித்த மக்கள் இதுவரையில் அதற்காக கவலைப்பட்டிருக்கவேண்டும்.ஆனால், அவ்வாறு கவலைப்படவில்லையானால், கடந்த வாரம் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பிறகு அந்த மக்கள் கவலைப்படாமல் இருந்திருக்கவே முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த பஷில், ஜுன்- 9 பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோது," ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கடந்த இரு தேர்தல்களில் வாக்களித்த மக்களும் ஒரளவுக்கு பொறுப்பாளிகளாவர் " என்று அவர் குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

சுதந்திர இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு திணறிக்கொண்டிருக்கும் மக்கள் வீதிப்போராட்டங்களில் இறங்கி ஜனாதிபதி கோட்டாபயவையும் அரசாங்கத்தையும் பதவிவிலகுமாறு கோருகின்ற நிலையில் ஐந்து வருடங்கள் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு தனக்கு 69 இலட்சம் மக்களின் ஆணை இருக்கிறது என்று கூறி அவர் அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், சகோதரர் பஷில் அந்த ஆணையை வழங்கிய அந்த மக்களை அவமதிக்கும் வகையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பாளிகளாக்குகிறார். கடந்த இரு தேர்தல்களிலும் பொதுஜன பெரமுனவுக்கு அமோகமாக ஆதரவளித்த மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த தங்களது ஆட்சியின் தவறுகளுக்காக மக்களிடம் உகந்த முறையில் வருத்தம் தெரிவிக்கக்கூட பஷிலுக்கு மனம்வரவில்லை.செய்தியாளர் மநாட்டின் முடிவில் எழும்பிச்செல்லும்போது மாத்திரம் '' இடம்பெற்றிருந்தால் வருந்துகிறேன்'' என்று வேண்டாவெறுப்பாக சொன்னார். தோல்வி கண்ட அரசில்வாதியாக அவர் தன்னை கருதுவதாக இல்லை.

2015 ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இரு இலக்குகளை மனதிற்கொண்டே மீண்டும் அரசியலில் ஈடுபட்டதாக கூறிய அவர் அந்த இலக்குகளை தான் அடைந்துவிட்டதாக பெருமைப்படவும் செய்கிறார்.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களிடம் ஆணைகேட்ட மஹிந்த ராஜபக்ஷ கண்ட தோல்விக்கு பெரும் பொறுப்பு பஷில்தான் என்று அந்த நேரத்தில் பரவலாக கூறப்பட்டது. மஹிந்தவை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில்  இருந்து விடுபடுவதுமே அந்த இலக்குகள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோட்டாபய ஜனாதிபதியாகவும் மஹிந்த பிரதமராகவும் வந்து ராஜபக்ஷக்களின் ஆட்சி மீண்டும் ஏற்பட்டது. உண்மை. ஆனால்,பலம்பொருந்திய உறுதியான தலைவராக காட்சிப்படுத்தப்பட்ட கோட்டாபய இன்று மக்கள் போராட்டங்களின் நெருக்குதல்களுக்குள்ளாகி மிகவும் பலவீனமான ஜனாதிபதியாக நிற்பதையும் இலங்கையில் மிகுந்த செல்வாக்குடைய தலைவராக விளங்கிய மகிந்த மக்களின் வெறுப்புக்குள்ளாகி பிரதமர் பதவியில் இருந்து கடந்தமாதம் விலகியதையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது ராஜபக்ஷக்களின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தனது இலக்கை சாதித்ததாக பஷில் உரிமை கோருகின்ற பெருமையின் இலட்சணம் தெளிவாகத் தெரிகிறதல்லவா?

7 வருடங்களுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்ட பிறகு அலரிமாளிகையில் இருந்து வெளியேறி தெற்கில் தங்காலையில் தனது வீட்டுக்கு மகிந்த சென்றபோது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவரை அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

அவரும் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். ஆனால், அதே மஹிந்தவின் வீட்டை கடந்த மாதம் முற்றுகையிட்ட மக்கள் பதவிவிலகுமாறு கோரிநின்றதைக் கண்டோம்.ராஜபக்ஷக்களின் கோட்டைக்குள்ளேயே அவர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ராஜபக்ஷ குடும்பம் முற்றாக அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் இரண்டரை வருடகாலத்துக்குள் கொந்தளிப்பார்கள் என்று எந்த ராஜபக்ஷவும் எதிர்பார்திருக்கமாட்டார்.

அதேவேளை,ராஜபக்ஷக்களுக்கு ஏற்பட்ட இந்த அபகீர்த்திக்கு தானே பெருமளவுக்கு பொறுப்பு என்று பரவலாக கூறப்படுவதையும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு நிதியமைச்சராக தன்னால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்படுவதையும் அறியாதவர் போன்று செய்தியாளர் மநாட்டில் பஷிலின் கதையளப்புகள் அமைந்திருந்தன.

தனக்கு எதிரான பல்வேறு ஊழல் வழக்குகளில் இருந்து பஷில் நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது உண்மை.கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமான பலரின் வழக்குகளுக்கு நேர்ந்த கதியே பஷிலின் வழக்குகளுக்கும் நேர்ந்திருக்கின்றது.

அரச வழக்குத்தொடுநர் தரப்பிலான குளறுபடிகள், போதிய சாட்சியமின்மை மற்றும் நுட்பநுணுக்கங்கள் காரணமாகவே பெரும்பாலும் அவரும் அவர் சார்ந்தவர்களும் வழக்குகளில் விடுவிக்கப்படக்கூடியதாக இருந்தது என்பதும் உண்மையே. ஆனால், இறுதியில் முக்கியமானது மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு.ராஜபக்ஷக்களை எந்தளவுக்கு மக்கள் வெறுக்கிறார்கள் என்பது அடுத்துவரக்கூடிய தேர்தலொன்றில் தான் பிரகாசமாக வெளிப்படும்.

அரசியலில் தங்களது ஆதிக்கம் அஸ்தமனத்துக்கு வருவதாக ராஜபக்ஷக்கள் இனனமும் நம்பவில்லை.தங்களால் தற்போதைய நிலையில் இருந்து மீண்டுவரமுடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள் போலும். இந்த நாட்டு மக்கள் மூன்று தடவைகள் ராஜபக்ஷக்களை ஜனாதிபதியாக தெரிவுசெய்திருக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் மத்தியில் பெருமைப்பட்ட பஷில் மூன்றாவது ராஜபக்ஷவாக ஜனாதிபதி பதவிக்கு வருவது குறித்து கனவு கண்டுகொண்டிருந்தவர்.

ஆனால், இப்போது அரசாங்க பதவிகளை ஏற்காமல் அரசியலில் தொடரப்போவதாக கூறுகிறார். அதற்கு அவர் உதாரணமாக இந்தியாவில் உள்ள 'இந்துவெறி' அமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவக்கை (ஆர்.எஸ்.எஸ்.) காட்டுகிறார். பல தசாப்தங்களாக அந்த அமைப்பு செயற்பட்டுவருகின்றபோதிலும், ஆட்சியில் அக்கறை காட்டியதில்லை. பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருக்கிறது.அது போன்று தங்களால் செயற்படமுடியும் என்று பஷில் கூறினார்.

பாரதிய ஜனதாவை முன்னுதாரணமாக அவர் குறிப்பிடுவது இதுதான் முதற்தடவையல்ல. பொதுஜன பெரமுன பின்பற்றக்கூடிய வகைமாதிரிகளாக பாரதிய ஜனதாவையும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியையும் அவர் முன்னரும் குறிப்பிட்டிருந்தார்.சீன கம்யூனிஸ்ட் கட்சி உதாரணம் ஒருபுறமிருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் பாரதிய ஜனதாவையும் அவர் தங்களுக்கு முன்மாதிரியாகக் கூறுவதில் பொருத்தப்பாடு இருக்கவே செய்கிறது.

ஏனென்றால் இந்தியாவில் மதசார்பின்மைக் கோட்பாட்டுக்கு விரோதமாக மக்கள் மத்தியில் மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் இந்துவாத கொள்கையை பாரதிய ஜனதா கடைப்பிடிக்கிறது.இந்துத்வா கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டுமென்று மோடி அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். செயற்பட்டுவருகிறது.

அதேபோன்றே ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவும் தீவிரமான சிங்கள பௌத்த பெரும்பான்மையினவாத கொள்கைகளைப் பின்பற்றுகிறது.நாட்டு மக்களிடையே இன,மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சியை தொடருவதிலேயே அவர்கள் அக்கறை காட்டினார்கள்.சிங்கள பௌத்தவாதத்தை ராஜபக்ஷக்கள் தங்களுக்கு அனுகூலமாக உச்ச பட்சத்துக்கு இராணுவவாத அணுகுமுறையுடன் பயன்படுத்தினார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்த சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும் முக்கியஸ்தர்களும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெளிச்சத்தைக் கண்டு பதுங்குகி்ற கரப்பான் பூச்சிகள் போன்று பதுங்கியிருக்கிறார்கள்.ராஜபக்ஷக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டால் பேரினவாதத்தை தீவிரமாக முன்னெடுப்பதில் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை அந்த அமைப்புகளுக்கு உண்டு.

ராஜபக்ஷக்கள் எந்தளவுக்கு சிங்கள பௌத்தவாதத்தை பயன்படுத்தி இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தினார்கள் என்பதை பௌத்த கற்கைகளுக்கான வல்பொல ராகுல தேரோ நிறுவனத்தின் தலைவரான வண. கல்கந்த தம்மானந்த தேரர் அண்மையில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கச்சிதமாக விளக்கியிருந்தார்.

''முன்னைய அரசாங்கங்களும் சிங்கள பௌத்த வாதத்தை அரசியல் அனுகூலத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றன.ஆனால் தற்போதைய அரசாங்கம்(ராஜபக்ஷ அரசாங்கம்) சிங்கள பௌத்த கேடயத்தை தனக்கு அனுகூலமாக உச்சபட்சத்துக்கு பயங்கரமான முறையில் பயன்படுத்தியது. அறநெறி பற்றிய எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் அவர்கள் மதத்தைப் பயன்படுத்தினார்கள்.

முஸ்லிம் சமூகத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்காக பிக்குமார் மத்தியில் கருத்தரங்குகளை அவர்கள் நடத்தினார்கள்.பிக்குமார் தங்களது மதப் பிரசங்கங்களின்போது 10 --15 நிமிடங்களை இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசுவதற்கு ஒதுக்கவேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.தேர்தலுக்கு முன்னர் பல மாதங்களாக இவ்வாறு நடந்தது.

வெளிமாவட்டங்களில் உள்ள பல பிக்குகள் எனக்கு இது பற்றி முறையிட்டார்கள்.பௌத்த பிரசங்கங்கள் இது போன்று முன்னர் ஒருபோதும் தவறாக பயன்படு்த்தப்பட்டதில்லை. மதத்தீவிரவாதம் பற்றி பேசுமாறு பிக்குமாரை நிர்ப்பந்தித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்த்தது.இந்தளவுக்கு பலவந்தமாக பௌத்தமதம் பயன்படுத்தப்பட்டதை நான் முன்னர் ஒருபோதும் கண்டதில்லை. குண்டர்கள் போன்ற பிக்குகளையும் உற்சாகப்படுத்தி பல இடங்களில் அவர்கள் பயன்படுத்தினார்கள்'' என்று அந்த தேரர் கூறியிருந்தார்.

தனது குடும்பம் ஆட்சிசெய்வதிலும் பார்க்க அரசியலைச் சிறப்பாகச் செய்யும் என்று பஷில் கூறியதையும் கவனிக்கவேண்டும்.அந்த குடும்பம் எத்தகைய அரசியலை அவர்கள் இதுவரை செய்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.பழிபாவத்துக்கு அஞ்சாதமுறையில் எந்தவிதமான ஒழுக்க நெறிமுறைக்கும் மதிப்புக்கொடுக்காமல் அரசியல் செய்வதில் என்ன 'சிறப்பு' இருக்கிறதோ தெரியவில்லை.

அரசியலை விடவும் அரசாங்கத்தின் மீதே மக்கள் கூடுதல் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளக்கூடிய விவேகமான தலைவர்களிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பிராங்ளின் டி. ருஸ்வெல்ட் ஒரு தடவை கூறியிருந்தார். அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ அதை வாசிக்கவில்லைப் போலும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04