மீண்டும் விரல்களில் மை பூசுவதற்கான நகர்வுகள்

Published By: Digital Desk 3

13 Jun, 2022 | 09:27 AM
image

ரொபட் அன்டனி 

நாட்டில்  பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தொடர்ந்து தீவிரமடைந்து செல்கின்றது.  இதுவரை சகல கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்பட்டிருக்கிறது.  அதில் சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள்,  பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள்  சக்தியின் பிரதிநிதிகள்  என சிலர் பங்கேற்று இருக்கின்றனர்.  ஆனால் அந்த கட்சிகள் உத்தியோகபூர்வமாக இந்த இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்கவில்லை.  எனவே இதனை முழுமையான ஒரு இடைக்கால சர்வ கட்சி அரசாங்கம் என்று கூறமுடியாது.  எப்படியிருப்பினும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

கடந்த செவ்வாய்க்கிழமைக்கூட  பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சகல கட்சிகளையும் வந்து இந்த சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  இவ்வாறான  சூழலில் நெருக்கடி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  

வரிசைகள் நீடிக்கின்றன.  பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வு என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  மக்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஒரு நெருக்கடியை  எதிர்கொண்டு வருகின்றனர்.  எவ்வாறு தமது அன்றாட குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது மக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்திருக்கின்றது.  மூன்றுவேளை உணவை பெற்றுக் கொள்வதென்பது இன்று ஒரு சவாலாக மாறி இருக்கின்றது.  குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஒரு மந்தபோஷன  நிலைமை  காணப்படுவதாக வைத்திய துறையினர் தெரிவித்து வருகின்றனர். 

அண்மையில் கொழும்பு சீமாட்டி சிறுவர்  வைத்தியசாலையில் 50 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 40 வீதமானவர்களுக்கு மந்த போஷாக்கான நிலைமை காணப்படுவதாகவும் அதில் 20 வீதமானவர்களுக்கு தீவிர  மந்த போஷாக்கு நிலைமை காணப்படுவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிப்படுத்தப்பட்டது.  இந்த விடயங்கள் ஒரு ஆபத்தான அபாயகரமான நிலைமையை தொடர்ந்து எடுத்துக்காட்டு கொண்டிருக்கின்றன.  எனவே விரைவாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. 

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. ஒருபுறம் 21ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன.   ஆனால் அதிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் ஒரு இணக்கப்பாட்டை எட்ட முடியாத நிலைமை காணப்படுகின்றது.  

கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் 21 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு   சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது.  ஆனால் அது முறையாக இடம்பெறவில்லை.  அமைச்சரவை கூட்டத்தின் இறுதியில் ஒரு ஆவணத்தையும் நீதியமைச்சர்  வெளியிட்டிருக்கின்றார்.  உத்தியோகபூர்வமாக அமைச்சரவைக்கு 21வது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை.    கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு இல்லாத நிலைமை நீடிப்பதால் அதனை சமர்ப்பிப்பதில் நீதி அமைச்சருக்கும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறதா என்று ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.  அரசியல் கட்சிகள் மத்தியிலும் இது தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.  தற்போது உடனடியாக தேர்தல் நடத்த முடியாத சூழல் நாட்டில் காணப்படுகிறது  என்பது சகலருக்கும் தெரியும்.  ஒரு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாயின் கிட்டத்தட்ட 800 கோடி ரூபா  நிதி தேவைப்படுகின்றது.  அந்த நிதியை தற்போது திரட்டிக்கொள்வது என்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கின்றது.  காரணம் இலங்கையில் தற்போதைய நிலையில்   ரூபாவும் இல்லை டொலரும் இல்லை என்ற நிலைமை  நீடித்துக் கொண்டிருக்கின்றது. 

எனவே உடனடியாக அவ்வாறு ஒரு தொகையை செலவழித்து தேர்தலை நடத்துவது சவாலானதாகவே உள்ளது.   அதுமட்டுமன்றி தேர்தலில் வாக்களிக்கும் மன நிலையில் மக்கள் இல்லை.  காரணம் மக்கள் தமது அன்றாட பொருளாதார வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத  நிலையிலேயே கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் வீதிகளில் வரிசைகளில் நின்று கொண்டிருக்கின்ற சூழலில் தேர்தலில் வந்து வாக்களிப்பார்களா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அது சாத்தியமற்றதாகவே உள்ளது.  எனவே தேர்தலை நடத்துவது என்பது சாதகமாக அமையுமா என்பது தெரியவில்லை.

ஆனால் தேர்தலை நோக்கிய நகர்வுகள் இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் அதற்கான வியூகங்கள் அமைக்கப்படுவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. அரசியல்  கட்சிகளைப் பொறுத்தவரையில் உடனடியான ஒரு தேர்தலை சில கட்சிகள் விரும்புகின்றன.  ஆனால் சில கட்சிகள் விரும்பவில்லை.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை விரும்புகின்றது.  ஆனால் தேர்தலை நடத்துவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்ற கருத்தை அக்கட்சியின் முக்கியஸ்தர்கள்  தெரிவித்து வருகின்றனர்.  

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும்  தேர்தல் நடத்தப்படுவதை  விரும்புகிறது.  அதாவது புதிய மக்கள் ஆணை பாராளுமன்றத்திற்கு பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  ஆனால் உடனடியாக தேர்தலை நடத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கியமக்கள் சக்தியும் இல்லை.  அதற்கு மக்கள் இன்னும் தயாராகவில்லை என்ற கருத்தை பிரதான எதிர்க்கட்சி அறிவித்து வருகிறது. 

எனினும் மக்கள் விடுதலை முன்னணியை பொறுத்தவரையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றது.  வேறு சில கட்சிகளும் கூட தேர்தல் நடத்தப்பட்டு புதிய மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என்ற கருத்தை கொண்டிருக்கின்றன. 

எனினும் அதன் சட்டப்பின்னணி குறித்தும் பார்க்கவேண்டியுள்ளது. தற்போது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு 2023   மார்ச் மாதமளவில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் கிடைக்கின்றது.  காரணம் 20வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி எந்த நேரத்திலும் கலைக்கலாம். 

 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பாராளுமன்றம் ஆரம்பமானது.  எனவே அதிலிருந்து இரண்டரை வருடங்களை கழிக்கும்போது 2023ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.  அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டுமாயின்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  150  கையொப்பம் இட்டு பிரேரணை சமர்பிக்கவேண்டும். அதற்கு 150 எம்,பி. க்கள் தயாராக இருக்கின்றனரா  என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. 

எப்படியிருப்பினும் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலைமயை பார்க்கும்போது  அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றம்   தெரிவு செய்யப்படலாம்  என்றும் தெரிகின்றது.   எனவே பெரும்பாலும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.   

முக்கியமாக இந்த எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசை என்பன இந்த வருடம் முழுவதும் நீடிக்கும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.  அதனை கட்டுப்படுத்துவதற்கு அதனை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது எந்தளவு தூரம் வெற்றியடையும் என்பதை தற்போது எதுவும் கூற முடியாது.    டிசம்பர் மாதம் அளவில் சர்வதேச நாணய நிதியத்தின் டொலர் கடன் கிடைத்ததன் பின்னர் ஓரளவு பொருளாதார நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அந்தவகையிலேயே   மார்ச் மாதமளவில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.  அதனால் பெரும்பாலும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம்.  பாராளுமன்றம் கலைக்கப்படலாம். பாராளுமன்ற  தேர்தல் வரலாம் என்று ஒரு நிலைமை அரசியல் களத்தில் காணப்படுகிறது.  அது தொடர்பாக விவாதங்கள் வாதப்பிரதி வாதங்கள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  இந்த விடயங்கள்  அலசி ஆராயப்பட்டு கொண்டு இருக்கின்றன.  ஆனால் தற்போதைய சூழலில் மக்களை பொறுத்தவரையில் தேர்தலுக்குத் தயாராக இல்லை என்பதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது.  காரணம்  தேர்தல் செலவை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில்  நாடு இல்லை என்பதை சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.  

அரசியல் கட்சிகளும் அதனை ஏற்றுக் கொள்கின்றன.  வாக்காளர்களும் அது தொடர்பாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.  எப்படி இருப்பினும் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கின்றது.  மீண்டும் விரல்களில் மை பூசுவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிகின்றது.  அது இன்னும் சில மாதங்களில் இடம்பெறலாம்.  அடுத்த மார்ச் மாதம் இடம் பெறலாம்.  அல்லது அடுத்த ஏப்ரல் மாதம் நடை பெறலாம்.  ஆனால் தேர்தல் ஒன்று வரப்போகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04