தர்மம் தொலைத்த ஊடகங்களுக்குள் மரிக்கும் மத நல்லிணக்கம்

Published By: Digital Desk 5

12 Jun, 2022 | 04:34 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

“பா.ஜ.க.அரசியல்வாதி நபி பெருமானாரை நிந்தித்ததாகக் கூறப்படும் சர்ச்சையின் அறியப்படாத முகம்”

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அரசியல்வாதி பேசுகிறார். உள்@ர் மசூதி பற்றிய பிரச்சினை. வாதப் பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. பேசப்படும் விதம் மதம் என்பதால் உணர்வுகள் கொந்தளிக்கின்றன.

பேச்சாளர் எதிரெதிர் மதங்களைத் தாக்கிப் பேசுகிறார்கள். தொகுப்பாளருக்கு குஷி. தூண்டி விடுகிறார். நிறுவனத்தின் தரைநிலை எகிறும் என்பது அவரது கணக்கு. 

பேச்சாளர் எல்லை மீறுகிறார். தொலைக்காட்சித் திரையைத் தாண்டி, உணர்வுகள் கடத்தப்படுகின்றன. மக்கள் கொதிக்கிறார்கள். இரு சமூகங்களுக்கு இடையி;ல் சண்டை.

அதில் ஒன்று இந்துச் சமூகம். மற்றையது முஸ்லிம் சமூகம். கசப்புணர்வுகள் பூகோள எல்லைகளைத் தாண்டுகின்றன.  இந்தியாவில் நடந்த சம்பவம். கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம். சவூதி அரேபியா, ஈரான், மாலைதீவுகள் ஆகிய நாடுகளிலும் எதிரொலிக்கிறது.

கட்டாரின் ஆட்சியாளர்கள் இந்திய தூதுவரை அழைக்கிறார்கள். தமது கண்டனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பும் கண்டிக்கின்றது.

இந்தியாவின் இந்து தேசியவாதிகள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கிறார்கள். கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனத்தை பகிஷ்கரிக்கக் கோருகிறார்கள்.

நரேந்திர மோடியின் பா.ஜ.க அரசாங்கம் அசைகிறது. நிலைமையை சமாளிக்கப் பார்க்கிறது. கடும் நடவடிக்கையை எடுக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லை தாண்டிய அரசியல்வாதி இடைநிறுத்தப்படுகிறார். கூடவே, இஸ்லாம் பற்றி ருவிட்டரில் பதிவிட்ட இன்னொரு அரசியல்வாதியும் இடைநிறுத்தப்படுகின்றார். 

முன்னையவர், முக்கியமானவர். பா.ஜ.க.வின் தேசிய மட்டத்திலான பேச்சாளர். பெயர் நுப்பூர் ஷர்மா என்ற 37 வயதான பெண். மற்றையவர் கட்சியின் புதுடெல்லி பேச்சாளர்.

நுப்பூர் ஷர்மா கருத்தை வாபஸ் பெறுகிறார். ருவிட்டரில் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். அவர்கள் சிவலிங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார்கள். தாம் நபி பெருமானாரையும், மூன்றாம் மனைவி ஆயிஷாவையும் பற்றி பேசினேன் என்று ஷர்மா சொல்கிறார்.

“தொடர்ச்சியான அவதூற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, நானும் பதிலளிக்க வேண்டியிருந்தது. சொன்னதைத் திரும்பப் பெறுகிறேன்” என்கிறார். 

சர்ச்சை சமாதானமாக முடிகிறது. அப்போது சுபம் தானே என்கிறீர்களா? அது தான் இல்லை. 

சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் தொடர்கிறது. நான் நுப்பூர் ஷர்மாவின் பக்கம் என்று ஒரு தரப்பு பதிவிடுகிறது. அந்தப் பெண்ணின் தலை வேண்டும் என்று மற்றைய தரப்பு ஆர்ப்பரிக்கிறது.

இதற்குள் சமய நெறிகள், சமூக விழுமியங்கள், தனிமனித சுதந்திரம், ஜனநாயக வரம்புகள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள், ஆர்ப்பாட்டக் களங்களைத் தாண்டி, சமூக வலைதளங்களின் ஓயாத மேடைகளுக்குள் ஓங்கியொலிக்கின்றன.

கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதுமொன்றை, இந்தப் பெண் எப்படி அவதூறு செய்யலாம் என்று இஸ்லாமியர்கள் தரப்பில் வாதங்கள். அப்போது, இந்துக்களின் இறைவனை நிந்திப்பது எந்த வகையில் நேர்த்தி என்று இந்துக்களின் பதில் வாதங்கள்.

மதச் சார்பற்ற இந்தியாவின் சமூகக் கட்டமைப்பிற்குள், பாடசாலைகளிலும் கூட எல்லா மதமும் சமம் என்றே போதிக்கப்படுகிறது. இந்துத்துவ மேலாதிக்கம் பா.ஜ.க.வின் தாரக மந்திரம் என்றாலும், ஷர்மாவின் கருத்து தேவையற்றதொன்றென ஒரு தரப்புச் சொல்கிறது

வெளித்தரப்பு அழுத்தங்கள் பற்றியும் விமர்சனங்கள். ஜனநாயகம் என்னதென்பதை அறியாத நாடுகள், எவ்வாறு இந்தியாவிற்கு பன்முகத்தன்மையையும், மனித உரிமைகளையும் போதிக்கலாம் என்ற விமர்சனத்தை முதன்மைப்படுத்தலாம்.  

இந்தக் கேள்வி தீவிர வலதுசாh இந்துத்துவ கோட்பாடுகளை அனுசரிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் மீது, அதன் ஆதரவாளர்களால் மிக மூர்க்கமாக முன்வைக்கப்படுகிறது என்றால், அதில் உள்ள அரசியலை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில நாடுகள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியபோது, நுப்பூர் ஷர்மா மீது நடவடிக்கை எடுத்த பா.ஜ.க. அரசு, அவரது கருத்தால் உள்நாட்டு முஸ்லிம்களின் மனம் புண்பட்டபோது, ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்நாடுகளில் இருந்து எண்ணெய் கிடைப்பதால், இங்கு வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவு பணம் அனுப்புவதால், இந்நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளால், பா.ஜ.க. அரசு அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கலாம்.

முஸ்லிம் உலகுடன் இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதில், நரேந்திர மோடி கணிசமான அளவு வெற்றி கண்டிருக்கிறார். இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டு தமது நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கில் நரேந்திர மோதி அவ்வாறு செய்திருக்கலாம்.

இந்த விடயத்தில் பாரதீய ஜனதா கட்சி இரட்டை வேடம் பூணுகிறதா என்ற கேள்விகள் இல்லாமல் இல்லை. சர்வதேச சமூகத்தை சமாளிக்க நட்புமுகம். தேர்தல் என்று வந்து விட்டால், உள்@ரில் இஸ்லாமிய எதிர்ப்பு முகத்தை காட்டாமல் இருக்க முடியாது.

இந்த வாதம் தான் உண்மையெனத் தோன்றுகிறது. உள்நாட்டு முஸ்லிம்களை ஒதுக்கி வைப்பதால், இந்தியாவிற்குள் அரசியல் விலையொன்றை செலுத்தத் தேவையில்லை என நினைத்ததால், பா.ஜ.க. ஆரம்பத்தில் மௌனம் காத்திருக்கலாம்.

தேர்தலில் அடுத்தடுத்து கிடைக்கும் வெற்றிகளைப் பார்க்கையில், எதற்காக மதரீதியான பன்முகத்தன்மை பற்றியும், சகலரையும் உள்ளடக்கிய சமூகம் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டும் என்றும் பா.ஜ.க.வின் தலைவர்கள் நினைத்திருக்கலாம்.

நுப்பூர் ஷர்மா விவகாரத்தில் தாமதித்து செயற்பட்டதால், இந்தியாவிற்கு இருமுனை அழுத்தங்களை சமாளிக்க வேண்டியிருந்தது. ஒருபுறத்தில் அனேகமான இந்தியர்கள் வேலை செய்யும் பகுதிகளாக முஸ்லிம் நாடுகள் உள்ளன. மறுபுறத்தில் முஸ்லிம் நாடுகளுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதாக நம்பும் பீஜேபியின் ஆதரவாளர்கள். பின்னையவர்கள், பா.ஜ.க. செயலை துரோகமாகவே பார்க்கிறார்கள்.

இந்த வாதப் பிரதிவாதங்கள் யாவும் ஊடகங்களில் நிகழ்வதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால், இலாபம் சம்பாதிப்பதற்காக கடுகடுப்பான அரசியல் விவாதங்களை நடத்தும் மோசமான கலாசாரம் ஊடகப் போட்டியில் வலிந்து திணிக்கப்படுகிறது என்பதே உண்மை.

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அப்படித்தான். எதிரெதிர்த் துருவங்களாகவும், மற்றவரை மிகவும் மோசமாக தாக்கிப் பேசக் கூடியவராகவும் இருப்பவர்களை அழைப்பார்கள். எவ்வளவு கௌரவக் குறைச்சலான, விஷத்தைக் கக்கக் கூடிய வார்த்தைகளை உச்சரிக்க வைப்பதில் தான்; தொகுப்பாளர்களின் வெற்றி உள்ளது.

அந்த வார்த்தைகள் அநாவசியமானவையாக இருப்பதைப் பற்றியெல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு கவலையில்லை. ஒருவர் தவறிழைத்தார். மன்னிப்புக் கோரினார். தவறு என்பதை சுட்டிக்காட்டிய தரப்பும், தவறிழைத்தவரை தண்டித்த தரப்பும் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டபோதிலும், பிழைப்பிற்காக மதவாதத்தைத் தூண்டும் கடும்போக்கு சக்திகளும், இலாபம் தேடும் ஊடக முதலைகளும் ஓயப்போவதில்லை. அவை ‘ஆறிய புண்ணை கிளறி’ விட்டுக் கொண்டே தான் இருக்கப் போகின்றன.

இஸ்லாமிய நாடுகள் இராஜதந்திர ரீதியில் வெளியிட்ட கண்டன அறிக்கைகளை இந்தியாவிற்கு எதிரானதென சித்தரிக்க முனையும் இந்துத்துவ தேசியவாதிகளும், இந்தப் பிரச்சினையை இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக சித்தரித்து, இதற்கு அல்கொய்தா இயக்கத்தின் தற்கொலைத் தாக்குதலே சரியான பழிவாங்கல் என தர்க்கம் புரியும் இஸ்லாமிய கடும்போக்குவாதிகளும், இந்த இருதரப்பிற்கும் களம் அமைத்துக் கொடுக்கும் கறைபடிந்த ஊடகங்களும் இருக்கும் வரையில் பிரச்சினை ஓயப்போவதில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49