பொறுப்புடன் செயற்படுமா?

Published By: Digital Desk 5

12 Jun, 2022 | 03:33 PM
image

-சத்ரியன்

 “ரணில் விக்கிரமசிங்க மக்களைத் தயார்படுத்துகிறோம் என்ற பெயரில், பீதியை உருவாக்கி, தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார். இதையே தான், மஹிந்த பிரதமராக இருந்த காலகட்டத்தில் உதய கம்மன்பிலவும், ஏனையவர்களும் செய்தனர்”

கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் தோல்வியில் இருந்து உருவாகிய, கோட்டா– ரணில் அரசாங்கம், நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்கப் போவதாக கூறி ஆட்சிக்கு வந்த போதும், சரியான பாதையில் பயணிக்கிறதா என்ற சந்தேகங்கள் தோன்றத் தொடங்கி விட்டன.

ஆரம்பத்தில் ரணில் வந்து விட்டார், மேற்குலகத்தின் உதவிகள் கிட்டும், நிலைமைகள் சரியாகி விடும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்பட்டது. மேற்குலகமும், இந்தியாவும் தான் அவரைக் கொண்டு வந்தன என்று பேச்சும் அடிபட்டது.

ஆனால், மேற்குலக இராஜதந்திரிகளும், இந்திய இராஜதந்திரிகளும், ரணிலின் வருகையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அது தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும், தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் கூறியதாக தெரிகிறது.

எவ்வாறாயினும், நிலைமையை சீர்படுத்துவதற்கு நிலையானதொரு அரசாங்கம் அவசியம் என்ற அடிப்படையில் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக மேற்குலக, இந்திய இராஜதந்திரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், கோட்டா- ரணில் அரசாங்கத்தின் போக்கு, நிலைமையைச் சமாளிப்பதில் வெற்றிகரமானதாகச் செயற்பட்டதாக கூறமுடியாது.

ஏனென்றால், கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது- தற்போது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் விலைவாசி அதிகரிப்பையும், பணவீக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

உணவுப் பணவீக்கம் 59 சதவீதமாக அதிகரித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

ரணில் பதவிக்கு வந்த பின்னர், வரி அதிகரிப்பு, போன்றவற்றின் காரணமாக, தொடர்ச்சியாக பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதாக கூறி பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை, மீண்டும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது.

அடுத்த மூன்று வாரங்களுக்கு, எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும், மக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், வெளியிட்ட அறிவிப்பு, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் குவிந்தன. மீண்டும் மக்கள் பொருட்களுக்காக படையெடுக்கத் தொடங்கினார்கள்.

கொழும்பு பங்குச் சந்தையும் கூட வீழ்ச்சி கண்டதுடன் ஒரே நாளில் 114 மில்லியன் ரூபா பங்குகளை விற்று விட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினார்கள்.

ரணில் விக்கிரமசிங்க மக்களைத் தயார்படுத்துகிறோம் என்ற பெயரில், பீதியை உருவாக்கி, தட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்.

இதையே தான், மஹிந்த பிரதமராக இருந்த காலகட்டத்தில் உதய கம்மன்பிலவும், ஏனைய அமைச்சர்களும், எரிவாயு நிறுவனங்களின் தலைவர்களும், பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்களும், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் செய்தனர்.

நெருக்கடி வரப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதனை சமாளிப்பதற்கான வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதிலேயே, கவனம் செலுத்தினார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு மக்களைத் தயார்படுத்துவது வேறு, மக்களை தயார்படுத்துகிறோம் என்ற பெயரில், அவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது வேறு.

தற்போதைய பொருளாதார நெருக்கடி விவகாரத்தில், பெரும்பாலான தரப்பினர், மக்களைத் தயார்படுத்துவதற்குப் பதிலாக, வீணான பதற்றத்தை ஏற்படுத்துவதிலேயே குறியாக  இருந்தனர்.

தாங்கள் உண்மையைப் பேசுவதாக- உண்மை நிலையை மக்களிடம் கூறுவதாக, நினைத்துக் கொண்டு, வீணான குழப்பங்களையே ஏற்படுத்துகின்றனர்.

எல்லா இடங்களிலும் அரசாங்கம் உண்மையைக் கூறவேண்டும் என்றில்லை. அதற்காக பொய்கூற வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. 

நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களுக்காக உண்மையை கூறாமல் தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடி விடயத்தில் அரசாங்கத்துக்குத் தான், எல்லா நிலைமைகளும் தெரியும்.

வெளிப்படைத்தன்மை என்ற பெயரில், அதனை போட்டு உடைக்கும் போது, சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஏனென்றால், பணவசதியுள்ளவர்கள் தங்களுக்குத் தேவையானதை விட மேலதிகமாக கொள்வனவு செய்து பதுக்குவார்கள்.

அதேவேளை, அன்றாட உழைப்பாளர்களும், பணவசதி குறைந்தவர்களும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் போகும் அல்லது அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும்.

அரசாங்கம் மாறினாலும், மக்களை இவ்வாறான நெருக்கடியில் இருந்து இன்னமும் மீட்கவில்லை. இது தனியே பொருட்களின் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டதல்ல.

மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் வீணான பதற்றங்கள், பீதிகளால் உருவாக்கப்படும் செயற்கையான தட்டுப்பாடு. 

இது கறுப்புச் சந்தைக்காரர்களுக்கும், பணபலம் கொண்டவர்களுக்குமே சாதகமானது. அவ்வாறான ஒரு அரசாங்கமாகத் தான் ரணில் அரசாங்கமும் செயற்படுகிறது.

எரிபொருள் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவிப்பதும், அதற்காக எரிபொருள் வழங்கலை இரகசியமாக மட்டுப்படுத்துவதும் தான் கையாள வேண்டிய அணுகுமுறை.

மாறாக அரசாங்கம், அடுத்த சில வாரங்கள் கடினமானவை என்று மிரட்டுகிறது. அதேவேளை எரிபொருள் விநியோகத்தை சீராக மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எரிபொருள் விநியோக நடைமுறையை அரசாங்கம் சீராக கையாளவில்லை. அதற்கென சரியான திட்டத்தை இன்னமும் வகுக்கவில்லை. அது தான் நெருக்கடிகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

எரிபொருள் தட்டுப்பாடு அரசாங்கத்தினாலேயே உருவாக்கப்பட்டது. தேவைக்கு அதிகமாக மக்கள் எரிபொருளை சேகரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வாகனங்களை வைத்திருப்பவர்கள் அனைவரும், பெருமளவில் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கின்றனர் என்பது அப்பட்டமான உண்மை.

கிடைக்கின்ற நேரத்தில், கிடைக்கின்ற அளவுக்கு வாங்கிப் பதுக்குகின்ற நிலையே, காணப்படுகிறது. இது அரசாங்கத்தின் தவறான நடைமுறைகளின் விளைவு.

தேவைக்கு அதிகமாக பதுக்கப்பட்டுள்ள எரிபொருளே, பல வாரங்களுக்கு போதுமானதாக இருக்கும். இந்தநிலை அரசாங்கத்துக்கும் தெரியாமல் இல்லை. அவ்வாறிருந்தும், ரணில் விக்ரமசிங்க ஏன் குழப்பத்தை உருவாக்க முயன்றார்?

அவர் உண்மைகளைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு வெளியிட்ட பல தகவல்கள், பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றத்துக்கும் காரணமாகியது.

இதேபோன்று தான், அரிசி இருப்புத் தொடர்பாகவும் அரசாங்கமும், தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களும் குழப்பமான தகவல்களை வெளியிடுகின்றனர்.

அடுத்த சில மாதங்களில் ஆயிரம் ரூபாவுக்கு அரிசி விற்கும் என்று ஒருவர் எச்சரிக்கிறார்.

இன்னொருவர், இன்னும் இரண்டு மாதங்களுக்கான கையிருப்பே இருக்கிறது என்கிறார். ஆனால் அரசாங்கமோ, செப்டம்பர் வரை போதுமான அரிசி கையிருப்பில் இருப்பதாக கூறுகிறது.

இவ்வாறான அறிவிப்புகள், தான் எரிவாயு, மின்சாரம், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் என்று எல்லா விடயங்களிலும் மக்களுக்கு குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

கறுப்புச் சந்தையாளர்களுக்கும், பதுக்குபவர்களுக்கும் சாதகமாகவே அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. அது தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்கிறது.

உண்மையை வெளிப்படுத்துவதாக- வெளிப்படையாக செயற்படுவதாக கருதிக் கொண்டு மக்களை வீணான பதற்றத்துக்குள் தள்ளுவதைவிட, ஆக்கபூர்வமான முறையில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் முக்கியம்.

தேவைக்கு அதிகமாக பதுக்குவதற்கு இடமளிக்கும் போது, வீண்விரயமும் தவிர்க்க முடியாமல் போகும்.

தற்போதைய நிலையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடும் நெருக்கடியை சந்திக்கும் அரசாங்கம், அவை வீணாக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இவை எல்லாவற்றுக்கும், அரசாங்கம் பொறுப்புடன், தகவல்களை வெளியிடுவது தான் முக்கியம். அதனை இனிமேலாவது செய்யுமா? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21