தூண்டப்படும் வெளியேற்றம்

Published By: Digital Desk 5

12 Jun, 2022 | 01:50 PM
image

சுபத்ரா

“அவுஸ்ரேலியாவும், இலங்கையும் படகு அகதிகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்டினாலும், அத்தகைய பயணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை”

சில நாட்களுக்கு முன்னதாக, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 91 பேர் படகு ஒன்றிலும், படகில் ஏறுவதற்காக விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலும்- சிலாபம் மற்றும் மாரவில பகுதிகளில், கடற்படையினர் மற்றும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் இலக்கு இலங்கையை விட்டு வெளியே போவது தான். சட்டவிரோதமாக படகு மூலம், அவுஸ்ரேலியா அல்லது நியூசிலாந்து அல்லது வேறெந்த இடத்தை நோக்கியோ செல்வதற்காக காத்திருந்த போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக படகு மூலம் பயணத்தை ஆரம்பிக்கவிருந்தவர்களும், ஆரம்பித்தவர்களும் எனப் பலர் கடந்த பல மாதங்களில் கடற்படையினர் அல்லது பொலிஸாரிடம் அகப்பட்டிருக்கிறார்கள்.

அதேவேளை, கடற்படையினரின் கண்களில் அகப்படாமல், அவுஸ்ரேலியா நோக்கிப் பயணம் மேற்கொண்டு, கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே அவுஸ்ரேலிய எல்லைக்காவல் படையினால் வழிமறிக்கப்பட்ட படகில் இருந்த 15 பேரும், கடந்த வியாழக்கிழமை அதிகாலை, கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அவுஸ்ரேலியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திய தேர்தல் நடந்த மே 21 ஆம் திகதி, இவர்களின் படகு கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மூன்று வாரங்களுக்குப் பின்னர், 15 புகலிடக் கோரிக்கையாளர்களும், வாடகை விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு, ஒருவருக்கு இரண்டு பேர் வீதம் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இரவோடு இரவாக அவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அவுஸ்ரேலியாவில் ஆட்சி மாறினாலும் புகலிடக் கோரிக்கை தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை என்பதை திடமாக வெளிப்படுத்தியிருக்கும் சம்பவம் இது.

ஆனாலும், அவுஸ்ரேலியாவை தேடி ஓடுகின்ற நிலை இப்போது அதிகரித்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.

கடந்த வாரத்தில் இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 48 பேர் உள்ளிட்ட 50 பேர், அவுஸ்ரேலியா விமானப்படையின் விசேட விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள், அவுஸ்ரேலிய கடற்படையினருடன் இணைந்து, இரண்டு வாரங்களுக்கு ‘கன்பெரா’ என்ற போர்க்கப்பலில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதுடன், அதே கப்பலில் ஹவாய் தீவுக்குப் பயணம் செய்து, அமெரிக்காவினால்  நடத்தப்படவுள்ள பாரிய கூட்டுப் பயிற்சியிலும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை இராணுவம் விடயத்தில், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விலகியே இருந்து வந்தாலும், கடற்படையுடன் தந்திரோபாய உறவுகளை நெருக்கமாக பேணி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே, ஹவாய் தீவுக்கு இலங்கை கடற்படை அணி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை கடற்படை அணியை அவுஸ்ரேலியா தனது விமானத்தை அனுப்பி, அழைத்துச் சென்று, தனது கப்பலில் பயிற்சி அளித்து, அதே கப்பலில் ஹவாய்க்கு அழைத்துச் சென்று கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

இலங்கையில் இருந்து புறப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை தடுப்பதற்கு அவுஸ்ரேலியாவுக்கு இலங்கைக் கடற்படையினரின் ஆதரவு தேவை. அதனை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அவுஸ்ரேலியாவும், இலங்கையும் படகு அகதிகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்டினாலும், அத்தகைய பயணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்பதையே, அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அவுஸ்ரேலியாவைத் தேடி ஓடுகின்ற நிலை மாத்திரமல்ல, பொதுவாகவே நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரித்திருக்கிறது.

உள்நாட்டில், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் தான், மக்களை நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

பொருளாதார அழுத்தங்களும், சுமைகளும், மக்களைப் பெரிதும் நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.

அதனால் ஆபத்தான கடல் வழிப் பயணங்களுக்குக் கூட அவர்கள் துணிகிறார்கள்.

பலர் இந்தியாவை நோக்கி செல்கிறார்கள். இன்னும் பலர் வேறு நாடுகளை தேடி ஓட முனைகிறார்கள்.

சட்டரீதியாகவும், நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களில், கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை 250 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் கூறியிருக்கிறது.

இது எந்தளவுக்கு மக்கள் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். அரசாங்கமே இப்போது, வெளிநாட்டுக்கு மக்கள் செல்வதை ஊக்குவிக்க ஆரம்பித்திருக்கிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும், அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

வெளிநாட்டு நாணய நெருக்கடியில் சிக்கியிருக்கின்ற இலங்கை அரசாங்கம், இந்த திட்டத்தின் மூலம் இரட்டை நன்மையை எதிர்பார்க்கிறது.

அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அங்கிருந்து கிடைக்கும் டொலரின் அளவு அதிகரிக்கும். அதேவேளை, அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவும் மீதியாகும்.

அரசியல் மயப்படுத்தப்பட்ட அரச துறை நியமனங்களால், பெரும்பாலான அரச நிறுவனங்களில், மிகையான ஊழியர்கள் காணப்படுகின்றனர்.

பல அலுவலகங்களில் தங்களுக்கான வேலை என்ன என்று கூடத் தெரியாமல் பல அதிகாரிகள், பணியாளர்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், அவர்களை விடுமுறை கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிடுகிறது.

அதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் மூளை வளத்தையும் சேர்த்தே வெளியே கொண்டு போகிறது என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த ஆபத்து பற்றி எச்சரித்திருந்தார்.

அறிவுள்ளோர் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது என்றும், திறமைசாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் நடைமுறைக்கு பொருத்தமான முன்னேற்ற திட்டங்களை செயற்படுத்தவில்லை  என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால், உண்மையென்னவென்றால், திறமைசாலிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் கொள்கையை தான் அரசாங்கம் கடைப்பிடிக்கிறது.

அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றால், அங்கிருந்து டொலர்களை அனுப்புவார்கள் என்று மாத்திரமே சிந்திக்கிறது. அது உள்நாட்டில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை கருத்தில் கொள்ளவில்லை.

திறமையான ஆசிரியர்களின் வெளியேற்றம் எதிர்கால சந்ததியை பாதிக்கும். திறமைமிக்க தொழிலாளர்களின் வெளியேற்றம் நாட்டின் உற்பத்தியை பாதிக்கும். பொருளாதார நெருக்கடியே இதற்கு மூல காரணம்.

போர் நெருக்கடியும் அதனைத் தொடர்ந்து காணப்பட்ட நெருக்கடிகளும், கடந்த தசாப்தத்தின் முற்பகுதி வரை இத்தகைய வெளியேற்றம் அதிகளவில் இடம்பெறக் காரணமாக இருந்தது.

இப்போது, தவறான பொருளாதார முகாமைத்துவமும், ஆட்சி நிர்வாகமும், பொருளாதார நெருக்கடியும், மக்களை வெளியேறத் தூண்டுகிறது. இது செயற்கையானதொரு புலம்பெயர்வு. 

இயல்புக்கு மாறான இந்த புலம்பெயர்வை, ஒரு புறத்தில் சட்டரீதியாக தூண்டுகின்ற அரசாங்கம், இன்னொரு பக்கம் சட்டரீதியற்ற புலம்பெயர்வைத் தடுக்கவும் முனைவது தான் முரண்பாடான அணுகுமுறை. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது அரசாங்கம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48