பறிபோனது குருந்தூர்மலை : தீவிரமடையும் விஸ்தரிப்பு

Published By: Digital Desk 5

12 Jun, 2022 | 12:47 PM
image

-ஆர்.ராம்-

முல்லைத்தீவு, தண்ணீரூற்று குருந்தூர் மலையில் உள்ள 'குருந்தாவசோக' ராஜ்மாஹா விகாரையில் புத்தர்சிலை மற்றும் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்தலுடன் விசேட வழிபாடொன்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் அனைவரையும் பங்கேற்குமாறு, ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரையின் விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

குருந்தூர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில்  காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் உள்ளிட்ட பூர்வீக வழிபாடுகள் நிறுத்தப்பட்டு, சூலம் பிடுங்கி எறியப்பட்டுள்ளது.  ஆதிசிவன் ஐயனாரின் சூலம் காணப்பட்ட பகுதியில் பௌத்த விகாரைக்கான சிறுமண்டப வடிவிலான நிர்மாணமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, 2018இல் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து முழுக் குருந்தூர் மலையும் தொல்பொருளியல் ஆய்வுப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆய்வுகளின் பெயரால் ஆட்களின் பிரசன்னம் தடுக்கப்பட்டது. படைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஆள், அரவம் புகாத பகுதியாக மாற்றப்பட்ட குருந்தூர் மலையில் தொல்பொருள் சின்னங்கள் கண்டறியப்பட்டன. அவை பௌத்த சமயச் சின்னங்களே என்று அடையாளப்படுத்தப்பட்டன. பௌத்த முத்திரை குத்தப்பட்ட சின்னங்களை அடிப்படையாக வைத்து ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்பட்டது.

அதாவது, குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் உள்ளதால் அங்கு காணப்பட்ட அரைகுறை நிர்மாணம் ‘பௌத்த விகாரை’ தான் என்று நிறுவப்பட்டது. அதனை மீளவும் நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகள் படையினரின் பங்கேற்புடன் விரைந்து முன்னெடுக்கப்பட்டன.

இப்போது நிர்மாணிக்கப்பணிகள் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ள குறித்த விகாரையில் தான் புண்ணிய வழிபாடு நடைபெறுகின்றது. அந்த வழிபாட்டுக்குத்  தான் நலாபுறத்திலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'கோட்டா கோ கம'வில் 'நல்லிணக்கம்' பற்றிய கருத்தாடல்களும், கலந்தாய்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் தான் தமிழரின் பூர்வீக பகுதிகளின் அடையாளமொன்றாக விளங்கும் குருந்தூர் மலை முழுமையாக கைவிட்டுப் போயிருக்கிறது.

பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும், போராட்ட அழுத்தங்களுக்குள்ளும், அரசாங்கத்தின் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தமிழர்களின் பூர்வீகங்களை அபகரிக்கும் ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவே இல்லை என்பதற்கு குருந்தூர் மலை சான்று பகர்கின்றது.

2018ஆம் ஆண்டு, போஹஸ்வெவ பகுதியில் இருந்து படையினர் சூழ குருந்தூர் மலைக்கு திடீரென வருகை தந்திருந்த, தேரர், அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு முயன்றமையால் முதன்முதலாக சர்ச்சை வெடித்தது.

இதற்கு எதிராக, பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் செய்தார்கள். முல்லை மாவட்ட நீதிமன்றுக்குச் சென்றார்கள். வழக்குத் தாக்கல் செய்தார்கள். முதன்முதலாக 2018 செப்டம்பர் 6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தடை உத்தரவு விதிக்கப்பட்டு திகதியிடப்பட்டது.

பின்னர், அதே மாதத்தின் 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை என்று அறிவித்தார்.

அத்துடன், தொல்பொருள் அகழ்வுகளை மேற்கொள்வதாக இருந்தால், யாழ்.பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் பங்குபற்றலுடன் மூத்த வரலாற்று ஆய்வாளர்களினதும் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்த வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், குறித்த பகுதியில், தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் உத்தரவில் நீதிவான் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த உத்தரவுகள் அனைத்தும் மீறப்பட்டன. முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகனும், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான விதுர விக்கிரமநாயக்க “தொல்பொருளியல் அகழ்வுப் பணிகளே முன்னெடுக்கப்படவுள்ளன, ஆக்கிரமிப்புக்கள் அல்ல” என்றார்.

அதன்பிரகாரம், கடந்த வருடத்தில் சுமார் நான்கு மாதங்கள் எவருக்கும் அனுமதியற்ற நிலையில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புக்களுடன் தொல்பொருள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என்று தொல்பொருளியல் திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்திருந்தார்.

எனினும், அங்கு தொல்பொருள் சின்னமாக கிடைக்கப்பெற்றது 8 பட்டைகள் கொண்ட அஷ்ட லிங்கம் எனப்படும் தாராலிங்கம் என்று வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிட்டதோடு தமிழக ஆய்வாளர்கள் ஊடாக அதனை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஆனால், ஆக்கிரமிப்பையே இலக்காக கொண்டிருந்த தொல்பொருளியல் திணைக்களம் அதுபற்றிய விவாதங்களை நீடிப்பதற்கு விரும்பியிருக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குருந்தூர் மலையையும், அதனை அண்மித்த பகுதியையும் தன்னகப்படுத்துவதிலேயே கங்கணம் கட்டிச் செயற்பட்டது.

குருந்தூர் மலை ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக, து.ரவிகரன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன் ஆகியேரை மனுதாரர்களாக கொண்டு உச்ச நீதிமன்றில் வழக்கொன்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு, நிலுவையில் இருக்கத்தக்கதாகவே, தற்போது, நிர்மாணப்பணிகள் நிறைவுக்கட்டத்தினை அடைந்திருப்பதோடு, பிரதிஷ்டை மற்றும் வழிபாடுகள் பகிரங்க அழைப்பில் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

தொல்பொருளியல் திணைக்களம் தொல்பொருள் அடையாளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்கக் கட்டமைப்பாகும். மாறாக, தொல்பொருளியல் பகுதியாக பிரதேசங்களை பிரகடனம் செய்து அங்கு நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு எவ்விதமான அதிகாரங்களையும் அத்திணைக்களம் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான சட்ட வரைவையே தன்னகத்தே கொண்டிருக்கும் தொல்பொருளியல் திணைக்களம் எவ்வாறு, தொல்பொருள் ஆகழ்வுகளும், ஆய்வுகளும் நிறைவடையாத பகுதியில் நிர்மாணங்களுக்கு இடமளித்தது என்பது பெருங்கேள்வியாகும்.

ஒருவேளை, குருந்தூர் விகாரை நிர்மாணத்திற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று தொல்பொருளியல் திணைக்களம் கைவிரிக்குமாக இருந்தால், நீதிமன்ற உத்தரவை மீறிய நிர்மாணம் மற்றும் தொல்பொருளியில் ஆய்வுகளுக்கு இடையூறு அளிக்கும் வகையிலான நிர்மாணம் ஆகியவற்றின் அடிப்படையில் குருந்தூர் மலை விகாரை ‘சட்டவிரோதமான நிர்மாணம்’ என்றே வகைப்படுத்த வேண்டியதாகின்றது.

ஆனால் தொல்பொருளியல் திணைக்களம் அவ்வாறு கைவிரிக்காது. ஏனென்றால், அத்திணைக்களத்தினரும், படையினரும் தான் கல்கமுவே சந்தபோதி  தேரரின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அரச இயந்திரக் கருவிகளாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.

இவ்வாறான நிலையில் தற்போது தொல்பொருள் அகழ்வுப்பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மேலதிக நிலங்களை ஒதுக்கீடு செய்யுமாறு அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, கல்கமுவே சந்தபோதி தேரர், ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில்,1930ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க குருந்தூர் மலையில்  80ஏக்கர்கள் விகாரைக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளதோடு 320ஏக்கர்கள் விஸ்தரிப்புக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் தடையாக இருப்பதாகவும், அவர் தொல்பொருளியல் பணிப்பாளரின் அதிகாரங்களை மீறிச் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்  பிரதேச செயலாளர் தொடர்பில் விசேட கவனம் எடுப்பதோடு, விஸ்தரிப்புக்கான பகுதியை உடனடியாக விடுவிப்பதற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும்  வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையில் உள்ள  தொல்பொருளியல் பிராந்திய உதவிப் பணிப்பாளர், நில அளவையாளர் மற்றும், காணி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு குருந்தூர் மலையை அண்மித்த மேலதிக நிலப்பரப்பினை ஒதுக்கீடு செய்யுமாறு எழுத்து மூலமான கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான மற்றும் நடைமுறைச்சாத்தியமான பதில்கள் உரிய திணைக்களங்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதிகளுக்கான  அழுத்தங்கள் அளிக்கும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் குருந்தூர் மலையில் மலைப்பகுதியில் காணப்படும் 58ஏக்கர்களும் குளம் உள்ளிட்ட அண்மித்த பகுதியில் உள்ள 20ஏக்கர்களுமாக 78ஏக்கர்களே தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆய்வுக்குரிய பகுதியாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தண்முறிப்பு,குமுழமுனை பிரதான வீதியிலிருந்து, பழைய தண்ணிமுறிப்பு குடியிருப்பு பகுதி, நாகஞ்சோலை ஒதுக்கக் காட்டுப்பகுதி ஆகியவற்றை உள்ளிடக்கிய 320ஏக்கர்களை மேலதிகமாக அளவீடு செய்து ஒதுக்கீடு செய்யுமாறே கல்கமுவே சந்தபோதி தேரர் உள்ளிட்டவர்களால் கோரப்படுகின்றது.

1984 டிசம்பரில் ஒதியமலைக் கிராமத்தில் அரங்கேற்றப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலைகளின் பின்னர் பழைய தண்ணிமுறிப்பு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர் என்பது வரலாறு.

அவர்களில் 23குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களும், 48ஏக்கர்கள் வரையிலான புலங்களும் தற்போதும் உறுதிகளுடன் காணப்படுகின்றன. அத்துடன், தண்ணிமுறிப்பு  அ.த.க.பாடசாலை, தபாலகம், நெற்களஞ்சியசாலை உள்ளிட்டவற்றின் எச்சங்கள் ஏற்கனவே பொதுமக்கள் இப்பகுதியில் வாழ்ந்தமையை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

தேரர் மற்றும் தொல்பொருளியல் தரப்பினர் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, குருந்தூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதியும் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டால் அப்பகுதியில் பூர்வீக நிலங்களை கொண்டிருப்பவர்களுக்கான பதில் என்ன?

அதேநேரம், பூர்வீக வழிபாட்டிடமே அழிக்கப்பட்டு, அடையாளம் மாற்றப்பட்டுள்ள நிலையில் சூழவுள்ள நில,புலங்களையும் பெற்றுக்கொள்ள முனைவதன் பொருள் அடிப்படை அடையாளங்களை பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிப்புச் செய்வது தானே.  இந்த ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு மக்கள் பிரதிநிதித்துவ அரசியலாலும் முடியவில்லை, சட்டத்தாலும் இயலவில்லை என்றால் எஞ்சியிருக்கும் வழி தான் என்ன?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22