யாழ்ப்பாணத்துக்கு நாளை விஜயம் செய்ய உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 31 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இதன்போது கீரிமலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கப்படும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 

இந் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நாளை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  

அத்துடன் மரணமான பல்கலைக்கழக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவார் என அறியவருகிறது. 

இந்நிலையில் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடுகளை செய்யுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.