(எம்.நேசமணி)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் கடந்த வாரம்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில்  மேற்கொண்ட  ஆர்ப்பாட்டத்துக்கு  ஆதரவாகவே  லண்டனில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

லண்டனிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள்  ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்  ஆகிய மொழிகளில் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டதுடன் தப்பு, பறை உள்ளிட்ட பாரம்பரிய வாத்தியங்களை  இசைத்தவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனா். 

ஆறு, ஏழு தலைமுறையாக மாடாய் உழைத்தும் ஆணி முனையில் கூட சொந்த காணியில்லை, தின்று கொழுக்கும்  திமிங்கிலங்கள் கூட்டு  சேர்ந்து கொள்கை வகுக்கும், "யாரோ சொகுசாக வாழ எங்கள்  உயிரை மாய்த்தோம்’’, "1000 ரூபா சம்பள உயர்வு எங்கே", "தோட்டத்  தொழிலாளிகளை சுரண்டாதே"  இவ்வாறான  கோஷங்களையே ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனா். 

அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து புலம்பெயர்  அமைப்புகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் அவ்வப்போது மேற்கொள்வது  வழக்கம். ஆனால், முதல் தடவையாக இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள விவகாரம் குறித்து   லண்டனில்  இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டம், முன்னெடுக்கப்பட்டமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆா்ப்பாட்டத்தில் புலம்பெயா் அமைப்பொன்றின் செயற்பாட்டாளரான றிசாந்தன் சந்திரசேகரம் உரையாற்றுகையில்,

மலையக மக்களும் எங்கள் உறவுகளே. எனவே வடக்கு, கிழக்கு மக்களது உரிமைகளுக்காக நாம் போராட்டங்களை நடத்துவது போல எமது மலையக உறவுகளுக்காகவும் தொடா்ந்தும் போராட்டங்களை நடத்துவோம்.  

இலங்கை அரசாங்கமானது எப்பொழுதும் தமிழ் மக்களை ஒரு மாற்றாந்தாய் மனபான்மையோடுதான் பார்த்து வருகிறது. அதனால் தான் நாம் இவ்வளவு இன்னல்களை சந்தித்து வருகின்றோம். அதனை இந்த தோட்டத் தொழிலாளா்களின் சம்பள உயா்வு விவகாரம் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்காற்றி வரும் இந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாவை கூட வழங்காமையானது மிகவும் மோசமான ஒரு செயற்பாடாகும். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை பார்க்குமிடத்து 1000 ரூபா என்பது பெரிய சம்பளமல்ல.

சம்பள உயர்வு தொடா்பான கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 730 ரூபா சம்பளத்தில் எப்படி வாழ முடியும் என்பதை சற்று சிந்தித்து பார்த்தாள் நிலைமை புரியும். எனவே இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு தோட்டத் தொழிலாளா்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுத்திருக்கலாம் ஆனால் அரசாங்கமோ அதனை செய்யத் தவறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆா்ப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கு முன்னா் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள விவகாரம் குறித்த ஆா்ப்பாட்டங்களும் பேரணிகளும் பெரும்பாலும் மலையகத்தை மையமாக வைத்தே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை அப்போராட்டம் சற்று வியாபித்து மலையகம், தலைநகா் மற்றும் வடக்கு என நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டமையானது வரவே ற்கப்பட்ட வேண்டிய ஒரு விடயமாகும். அதேவேளை வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தோட்டத் தொழிலாளா்களது சம்பள உயா்வு விவகாரம் லண்டனில் எதிரொலித்துள்ளமை இப்பிரச்சினை சா்வதேசத்தின்  கவனத்தை ஈா்த்துள்ளதை கோடிட்டுக் காட்டுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளா்களது சம்பள உயா்வு தொடா்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையக சிவில் அமைப்புகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்யத் தீா்மானித்துள்ளன. அது தொடா்பான அறிவித்தலை சமூக ஆய்வு மையத்தின் தலைவா் அருட் தந்தை சத்திவேல் விடுத்துள்ளார்.   

அதேபோன்று கடந்த வாரம் லண்டன் சென்றிருந்த வடமாகான முதல்வா் சி.வி. விக்கினேஸ்வரன், லண்டன் சொறஸ்ரிறியன் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நிகழ்த்திய உரையானது புலம்பெயா் தமிழரிடத்தில் மலையக மக்கள் குறித்து மேலும் கவனத்தை செலுத்தத் தூண்டியுள்ளது எனலாம். 

புலம்பெயா் அமைப்புக்கள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

அதேவேளை, மலையகத்தில் வாழ்கின்ற தமிழ்மக்கள் பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு ஆளாகின்றார்கள். இதன் காரணமாக அவா்களது வாழ்க்கைத்தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. எனவே அவா்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் புலம்பெயா் அமைப்புக்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டியது தார்மிகக் கடமையாகுமெனவும் அவா் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

எனவே, மலையக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருவதை இன்று இலங்கையில் இருக்கின்ற பல்வேறு தரப்பினரும் அதேபோன்று சா்வதேச அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டு வருவதை காணமுடிகிறது. 

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாகத் திகழும் பெருந்தோட்டத் தொழிலாளா்கள் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏனைய சமூகத்தினரைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனா்.

அது மாத்திரமன்றி, மலையக மக்கள் இன்னும் பிரித்தானியா்கள் காலத்தில் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றமை மிகுந்த  வேதனையளிக்கும் ஒரு விடயமாகும்.

எனவே, புலம் பெயா் அமைப்புக்கள் மலையக மக்கள் மீது உன்மையான அக்கறை கொண்டவா்களாயின் வட மாகான முதல்வா் விக்கினேஸ்வரன் கூறியது போன்று புலம்பெயா் அமைப்புக்கள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

புலம்பெயா் அமைப்புக்கள் மலையக மக்களது வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்கு தமது பங்களிப்பை நல்குவார்களேயானால் அது வரலாற்றில் முக்கிய ஒரு இடத்தை வகிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.