மே 9 வன்முறைகள் : கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட  4 உயர் பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசிகளை சி.ஐ.டி.யின் பொறுப்பில் எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 10:19 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில்  சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. 

சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன மன்றில் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய, கோட்டை நீதிவான் திலின கமகே இதற்கான உத்தரவை இன்று ( 8) பிறப்பித்தார்.  

அத்துடன்  இந்த விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளுக்காக  கொழும்பு பிரதிப் பொலிஸ்  மா அதிபர் ஜகத் சந்ரகுமார,  கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர்  நிசாந்த சந்ரசேகர,  கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  சிசிர பெத்ததந்திரி,  கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர்  கமச்சிகே லலித்   ஆகியோரின் அலுவலக மற்றும் தனிப்பட்ட  கையடக்கத் தொலைபேசிகளை சி.ஐ.டி.யிடம் கையளிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

மைனா கோ கம,கோட்டா கோ கம மீதாக தாக்குதல்கள் தொடர்பான நீதிவான் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்று (08) பிற்பகல் கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இதன்போது விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினருக்காக மேலதிக சொலிசிடர் ஜெனரால் அய்ஷா ஜினசேன,பிரதி சொலிசிடர் ஜெனரல்களான ,றியாஸ் பாரி,லக்மினி கிரிஹாகம மற்றும் அரச சட்டவாதிகளான உதார கருணாதிலக,சஜித் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான யு.ஆர்.டி சில்வா,ராசீக் சரூக்,சவேந்திர பெர்னான்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ச குலரத்ன ,உபுல் ஜயசூரிய,மைத்திரி குணவரத்ன,சரத் ஜயமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜராகின.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி ஆஜரானார்.வழக்கை மேற்பார்வை செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிசும், ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும் ஆஜராகினர்.

 அத்துடன் விசாரணைகளை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டுள்ள  பொலிஸ் திணைக்கலத்தின் குற்றவியல் விவகார சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரனி ருவன் குணசேகரவுடன் ஆஜரானார்.

இந்நிலையில் மன்றில் இதுவரையிலான விசாரணை நிலைமையை மேலதிக சொலிசிடர் ஜெனரால் அய்ஷா ஜினசேன முன்வைத்தார்.

' கனம் நீதிவான் அவர்களே.... இதுவரை இந்த விசாரணைகளில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மொத்தமாக 709 வாக்குமூலங்கள் இந்த விவகாரம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த தவணையின் போது சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை கைது செய்ய பல சி.ஐ.டி குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.அவரை தேடி குருநாகல்,வெள்ளவத்தை,வத்தளை,பத்தரமுல்லை,நுகேகொட, ஜா-எல மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டது. எனினும் அவர் தனது இருப்பிடங்களில் இருந்து மறைந்திருப்பது தெளிவாகுகிறது. அத்துடன் இன்றைய தினம்  அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட்மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரை கைது செய்ய கடந்த முதலாம் திகதி முதல் பொலிஸார் முயலும் நிலையில் அவர் விசாரணையாளர்களை,இந்த நீதிமன்றை புறக்கணித்து செயற்படுகிறார் என்பது தெளிவாகுகிறது..எனவே அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கோருகிறேன்'என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன குறிப்பிட்டார்.

அந்த கோரிக்கையை ஏற்ற நீதிவான் இன்றைய வழக்கு விசாரணைகளில் நிறைவில் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார்.

இந்நிலையில் சில நீதிமன்ற உத்தரவுகளை பெற்றுக்கொள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன கோரிக்கைகளை முன்வைத்தார்.அதில் பிரதானமாக மைனா கோ கம ,கோட்டா கோ கம மீதான தாக்குதல்களை தடுக்க தவறியமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளுக்காக நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட,கடமைநேர கையடக்கத் தொலைபேசிகளை சி.ஐ.டி யின் பொறுப்பில் எடுக்க உத்தரவு கோரினார்.

'இந்த விடயத்தில் ஏற்கெனவே மேல்மாகாண சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோணின் தனிப்பட்ட,கடமைநேர தொலைபேசிகளை சி.ஐ.டி.யினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் பிரதிபொலிஸ்மா அதிபர் ஜகத் சந்திரகுமார,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான நிஷாந்த சந்திரசேகர,சிசிர பெத்தாதந்திரி,கமச்சிகே லலித்,ஆகியோரின் தனிப்பட்ட, கடமைநேர கையடக்கத் தொலைப்பேசிகளை சி.ஐ.டி யினரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கவும்'என கோரினார்.அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

 இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்ஸ குலரத்ன,உபுல் ஜயசூரிய,சரத் ஜயமான்ன,மைத்திரி குணரத்ன, உள்ளிட்டோர் வாதங்களை முன்வைத்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி அர்ஸ குலரத்ன வாதங்களை முன்வைக்கும் போது தனது சேவை பெறுநரை மொறட்டுவ நகரசபை உறுப்பினர் பிரியந்த பெர்னான்டோ அச்சுறுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அந்த நகரசபையின் தலைவர் இவ்வழக்கின் சந்தேக நபரான சமன்லால் பெர்னான்டோ என குறிப்பிட்ட அவர் யாரின் தேவைக்காக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்பது அதனூடாக தெளிவாகுவதாக குறிப்பிட்டார். இதன்போது குறுக்கிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன  அச்சுறுத்தல் குறித்து சி.ஐ.டி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய,சரத் ஜயமான்ன,மைத்திரி குணரத்ன ஆகியோர் சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதுவரை கைது செய்யப்படாமை தொடர்பில் விடயங்களை முன்வைத்தனர்.தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபர் எனும் ஒரு கருத்து பரவலாக உள்ள நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயங்குகின்றனரா என இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜனமான்ன கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நாளையுடன்  ஒருமாதம் பூர்த்தியாவதாகவும்,எனினும் இந்த தாக்குதலுக்கு உதவி ஒத்தாசையளித்த,தாக்குதலை திட்டமிட்ட,சதி செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் இது சட்டவொழுங்கு தொடர்பில் பாரிய பிரச்சினை எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது  நீதிமன்றில் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளை நிறைவு செய்து சி.ஐ.டி யினர் இன்று  ஆலோசனை கோரி கோவை ஒன்றை தனக்கு கையளித்துள்ளதாக கூறினார்.அது தொடர்பில் மிக விரைவில் தேவையான ஆலோசனைகளை வழங்க தயார் என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தேசபந்து தொன்னகோனிற்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி சட்டமாதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் போதுமான விசாரணைகள் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் நிலையில் அடுத்த தவணையில் சமர்ப்பிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் 14 அம்ச வழிகாட்டல் ஒன்றினை சி.ஐ.டி.யினருக்கும்,சட்டமாதிபருக்கும் வழங்கினார்.

அதில் குறிப்பாக சட்டமாதிபர் ஆலோசனை வழங்கியும் தேசபந்து கைது செய்யப்படாமை,சட்டமாதிபரின் ஆலோசனைக்கமைய அவர் இடம்மாற்றப்படாமை, சட்டமாதிபர் பொலிஸ்மா அதிபருக்கு தேசபந்து தொடர்பில் அடிப்படை விசாரணைகளை ஆரம்பிக்க பிறப்பித்த உத்தரவு,நிகழ்நிலை கலந்துரையாடல்கள், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் தேசபந்து ஒன்றாக சிநேகபூர்வமாக உihயாடிய வண்ணம் காலி முகத்திடல் நோக்கி நகரும் புகைப்படம் தொடர்பில் விசேடமாக விசாரணையில் வெளிப்பட்ட விடயங்கள் உள்ளக்கப்பட வேண்டும் என நீதிவான் அந்த 14 அம்ச வழிகாட்டலில் சுட்டிக்காட்டினார்.இது வெறும் வழிகாட்டல்கள் மட்டுமே எனவும் அதன் பின்னர் தனது உத்தரவு வரும் எனவும் இதன்போது நீதிவான் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் பிணை கோரப்பட்டது.பிணை கோரிக்கைகளை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த,டேன் பிரியசாத், சமன்லால் பெர்னான்டோ உள்ளிட்ட நால்வருக்கு மாத்திரம் பிணை வழங்க மறுத்தார். ,டேன் பிரியசாத்,சமன்லால் பெர்னான்டோ ஆகியோருக்கு எதிராக  நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.தேசபந்து தென்னகோன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சனத் நிஷாந்தவிற்கு பிணை வழங்க முடியாது எனவும் நீதிவான் குறிப்பிட்டு பிணையை மறுத்தார்.

எனினும் விளக்கமறியலில் இருந்த மஹிந்த கஹந்தகம,வசந்தா ஹந்தபான்கொட, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 13 பேரை தலா 10 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

அத்துடன் பிணையில் இருக்கும் போது இதனையொத்த குற்றச்செயலில் ஈடுப்பட்டால் இந்த வழக்கின் பிணை இரத்து செய்யப்படும் எனவும் நீதிவான் எச்சரித்தார்.விசேடமாக மஹிந்த கஹந்தகம,வசந்த ஹந்தபான்கொட ஆகியோருக்கு பிணையளித்தமை தொடர்பில் நீதிவான் திறந்த மன்றில் கருத்து வெளியிடும் போது அவ்விருவரும் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புப்பட்டிருந்தாலும்,அதற்கான பிரதிபலனை அன்றைய தினமே அனுபவித்திருந்ததாகவும் அவர்கள்,அவர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமையையும் நீதிவான் நினைவுப்படுத்தினார்.இந்நிலையில் இது குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58