'நானும் ஒரு பெண்' - சாதனைப் பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 

Published By: Nanthini

07 Jun, 2022 | 12:56 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கடந்த மே 28ஆம் திகதி சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. 

'நானும் ஒரு பெண்' எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு தமிழ்ச் சங்க துணைத்தலைவருமான திருமதி. ஜெயந்தி விநோதன் தலைமையேற்றிருந்தார். 

பிரதம விருந்தினராக சைவ மங்கையர் கழக துணைத்தலைவர் - சிரேஷ்ட சட்டத்தரணி மாலா சபாரட்ணம் பங்கேற்றார். 

திருமதி. அபிராமி கைலாசபிள்ளை (அகில இலங்கை இந்து மாமன்ற பொருளாளர் / தலைவர் - மனித நேய நிதியம்), திருமதி. சர்வமங்களம் கைலாசபதி (தாய்மார்களுக்கான துணை நிறுவனர். பிரித்தானிய குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தின் பிரதிநிதி - வட மாகாணம்), திருமதி. சௌந்தரி டேவிட் றொட்ரிகோ (நுண்கலைமாணி (பியானோ) இசைத்துறை அதிகாரி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

மேலும், முன்னாள் அமைச்சர் திருமதி. பேரியல் அஷ்ரவ், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் - ஐக்கிய பெண்கள் சக்தியின் பிரதித் தலைவர் திருமதி. உமா சந்திரபிரகாஷ், மட்டக்களப்பு அபிவிருத்தி செயலாளர் மற்றும் பெண்கள்/சிறுவர் விவகார அமைச்சின் இணைப்பாளர் - சட்டத்தரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர், சட்டத்தரணி ருத்ராணி பாலசுப்பிரமணியம், சென்ட் கிளையர் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. விசிதாணி டம்மிகா, இலங்கை தமிழ் மாதர் சங்கத் தலைவி திருமதி. மலர் பொன்சேகா முதலிய முக்கிய பிரமுகர்களும் வருகை தந்து, மங்கள விளக்கேற்றலோடு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 

தொடர்ந்து, சைவ மங்கையர் கழக மாணவிகள் தமிழ் வாழ்த்து பாடினர். கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் - சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் வாழ்த்துரை வழங்கினார். 

தலைமையுரை ஆற்றிய திருமதி. ஜெயந்தி விநோதன், மார்ச் 8இல் அனுஷ்டிக்கப்படும் மகளிர் தின விழா ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற இருந்து, சில காரணங்களால் பிற்போடப்பட்டு, குறித்த நாளில் கொண்டாடப்படுவதாக கூறினார்.

சட்டத்தரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர் 'சட்டத்தில் பெண்கள் உரிமைகளும் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களும்' என்கிற தலைப்பில் நிகழ்த்திய சிறப்புரையினூடாக அரசியலில் பெண்களின் வகிபாகம், ஆண் - பெண் சமநிலையற்ற போட்டி நிலை, பெண்கள் தொடர்பான சட்டத் தரவுகள் முதலான கருத்துக்களை பகிர்ந்தமை அரங்கத்தினரை சிந்திக்க வைத்தது. 

பிரதம விருந்தினர் திருமதி. மாலா சபாரட்ணம் தனது உரையின்போது, 

"வலது குறைந்தவர்கள், நீரிழிவு நோயாளர்கள், அல்சைமர் நோயாளர்கள் என தரப்படுத்தி, அவர்களுக்கென ஒரு நாளை அனுஷ்டிக்கும் இந்த சர்வதேசம், எந்த துணிவில் பெண்களுக்கென ஒரு நாளை குறிப்பிட்டது..? 

இன்று உலகம் முழுவதும் தலை நிமிர்ந்து நிற்கும் பெண்கள் யாவரும் இணைந்து சர்வதேசத்தின் நிலையை மாற்றி, ஆண்களுக்கென ஒரு தினத்தை அனுஷ்டிக்கவும் வலியுறுத்த வேண்டும்.  

எவ்வாறெனினும், மகளிர் தினம் என்றதும் தனித்து பெண்கள் மட்டுமன்றி, பெண்களுக்காக இயங்கும் ஸ்தாபனங்களும் போற்றப்பட வேண்டியவையே..." என தெரிவித்தார். 

அடுத்து, நிகழ்வின் பிரதான அம்சமாக சாதனைப் பெண்கள் ஐவர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களை பற்றிய அறிமுகத்தை நிகழ்ச்சித் தொகுப்பாளர் திருமதி. பவானி முகுந்தன் வழங்கினார். 

திருமதி. ராஜேஸ்வரி ஜெகானந்தகுரு  - யாழ், வண்ணார்பண்ணையில் ஒரு சைவ குடும்பத்தில் பிறந்தவர். யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று, பின்னர் முதுமாணிப் பட்டம், வீணை வாத்தியத்தில் அதியுயர் பட்டத்தினை பெற்றுக்கொண்டவர். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். ஆன்மிகம், இலக்கியத்தில் ஈடுபாடு உடையவர். சிறந்த பேச்சாளர். இவர் பல ஆன்மிக நூல்களோடு சமூக உளவியல் சார்ந்த நூலொன்றையும் எழுதியுள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலமாக ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிவரும் இவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் பேரவை உறுப்பினராகவும் உள்ளார். 

திருமதி. ராஜலட்சுமி சேனாதிராஜா  - மலையகத்தின் முதல் பெண் பேராசிரியர் இவர். கண்டியில் பிறந்தவர். கம்பளை பாலிகா (தமிழ்ப்பிரிவு) மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீடத்துக்கு தெரிவான பின்னர் முதலாம் தரத்தில் சித்தியடைந்து, கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ நிதிபீடத்தின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதியும் ஆவார். முகாமைத்துவ துறையில் முதல் கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண்ணாகவும் கருதப்படுபவர். வணிகவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, வருடாவருடம் தங்கப்பதக்கங்கள் பெற்றவர். மிகச் சிறந்த ஆய்வாளர். இவரது 'மழைக் குழம்புகளின் வர்ணங்கள்' என்ற கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. மலையக மக்களின் அபிவிருத்திக்காக அரும்பணியாற்றி வரும் இவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

திருமதி. ஜீவராணி கருப்பையா - பண்டாரவளை நீதிமன்ற நீதிபதியான இவர் மலையகத்தின் முதல் தமிழ் பெண் நீதிபதி என்னும் பெருமைக்குரியவர். நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரியிலும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற சட்டத்தரணியும் ஆவார். சட்ட ஆலோசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த இவர் 2010 தொடக்கம் மன்னார், யாழ்ப்பாணம், அவிசாவளை, மல்லாகம், மட்டக்களப்பு நீதவானாக பணியாற்றி, நேர்மையானவர் என்ற மதிப்பையும் பெற்றுள்ளார்.

திருமதி. ரனிதா மயூரன் - இவர் ஒரு சட்டத்தரணி. 2021ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 'தைரியமான பெண்' எனும் விருதை பெற்றவர். 

செல்வி. இந்துகாதேவி கணேஷ் - குத்துச்சண்டை வீராங்கனை. முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர். கணேஷ் - நாகேஷ்வரி தம்பதியரின் புதல்வி. சிறு வயது தொடக்கம் விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டிருந்த இவர், வட மாகாணத்திலிருந்து முதல் முறையாக சர்வதேச ரீதியிலான குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றிய முதல் தமிழ்ப் பெண் என்பதோடு குத்துச்சண்டை வீராங்கனைக்கான சர்வதேச விருதையும் பெற்றவர்.

இந்த ஐந்து பெண் சாதனையாளர்களில் திருமதி. ரனிதா மயூரன் நிகழ்வுக்கு வருகை தராததால், அவருக்குரிய கௌரவத்தை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினர் தனித்து வழங்கவுள்ளதாக சபையில் அறிவிக்கப்பட்டது. 

பெண்கள் குறித்த சிந்தனை, அறிவார்ந்த கருத்துக்களோடு பயணித்த அவையினருக்கு,  பக்க வாத்தியங்கள் சேர்ந்த செல்வி. அபிராமி ரகுநந்தனின் பண்ணிசை மற்றும் ஸ்ரீமதி சாந்தி கணேசராஜாவின் மாணவிகளது நடன விருந்துகளையும் சுவைக்க முடிந்தது. 

இசை மற்றும் நடனக் கலைஞர்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி. வளர்மதி சுமாதரனின் நன்றியுரை மற்றும் சங்ககீதத்தோடு நிகழ்வுகள் நிறைவடைந்தன. 

- மா. உஷாநந்தினி

படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08