ஐ.நா.மனித உரிமைப் பேரவையின்  அங்கத்துவத்திற்காக நடைபெற்ற தேர்தலில்  ரஷ்யா  இரண்டு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 

47உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு 2017ஆம் ஆண்டுக்காக 14உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்டார்கள். 

இந்நிலையில் ஐ.நா பொதுச்சபையில் நேற்று  வெள்ளிக்கிழமை மனித உரிமை பேரவைக்கு எஞ்சிய அங்கத்துவ உறுப்பு நாடுகளை   தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் பங்கேற்று இரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. 

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் சிரியாவில் இடம்பெறும் விடயங்களுக்கு மூலகாரணமாக ரஷ்யாவே காணப்படுகின்றது என்பதுள்ளிட்ட மனித உரிமை விடயத்தை பின்பற்றுதல் தொடர்பில் ரஷ்யா மீது  குற்றச்சாட்டுக்களை வலுவாக முன்வைத்து வந்தன. 

எனினும், சர்வதேச  அரசியலில் ரஷ்யாவுக்குள்ள பலத்தின் அடிப்படையில் அந்த நாடு மனித உரிமை பேரவைக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறும்  என்றே பெரும்பாலான கணிப்புக்கள் காணப்பட்டன. 

எனினும் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருப்பதோடு சிரியா தொடர்பில்  ரஷ்யா கொண்டிருந்த இறுக்கமான கொள்கையே இதற்கு பிரதான காரணமாகவிருப்பதாகவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த தேர்தலில் அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாதிருந்த அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக இணைகின்றது. 

மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்குரியதாகும்.  தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடமுடியும் என்பது வரைமுறையாகவுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்கள், தற்போதுள்ள முன்னேற்றங்கள் குறித்த நிபுணர்களின் அறிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையிலேயே ரஷ்யா அங்கத்துத்திற்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.