அளுத்கம, பாணந்துறையில் இரு வேறு துப்பாக்கிச் சூடுகள் : இருவர் பலி ; சிறப்பு விசாரணைகள் ஆரம்பம் 

Published By: Digital Desk 4

03 Jun, 2022 | 10:11 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அளுத்கம மற்றும்  பாணந்துறை பொலிஸ் பிரிவுகளில் இன்று (3) இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

இந்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில்,  அளுத்கமை பொலிஸாரும், பாணந்துறை பொலிஸாரும் சம்பவங்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Articles Tagged Under: துப்பாக்கி சூடு | Virakesari.lk

இரு சம்பவங்கள் தொடர்பிலும் இன்று மாலை வரை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களும் தெளிவாகியிருக்கவில்லை.

அளுத்கம சம்பவம் :

 அளுத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொராகொல்ல - மருதானை வீதியில்   நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் நடாத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் பேருவளை பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர்  வீடு வீடாக சென்று  செவ்விளநீர்  சேகரிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவ்வாறு தனக்கு சொந்தமான சிறிய ரக லொறியில் இன்று காலை  இளநீர் சேகரிக்கும் போது, இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை சம்பவம் :

பாணந்துறை – நிர்மல மாவத்தை பகுதியில்  இன்று பிற்பகல் 12.45 மணியளவில்  ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாத்துவ , தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதான  ரந்திக மதுஷான் எனும் இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த  அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. 

பாணந்துறை நகரின் மரக்கறி விற்பனையில் ஈடுபடும் மதுஷான், மற்றொரு நபருடன் மோட்டர் சைக்கிளில் காலி வீதி நோக்கி பயணிக்கும் போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தோரால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

 துப்பாக்கிச் சூடு நடாத்தப்படும் காட்சிகள் சி.சி.ரி.வி. கெமராக்களில் பதிவாகியுள்ள  நிலையில், துப்பாக்கிச் சூடு நடாத்தப்படும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழும் மதுஷான் மீது, அதன் பின்னரும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது  தெளிவாகியுள்ளது. அவருடன் மோட்டார் சைக்கிளில் பயண்மித்த மற்றைய நபருக்கு எந்த அனர்த்தமும் ஏற்படவில்லை என பொலிசார் கூறினர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்