சிறுமி ஆய்ஷாவின் கொலை : நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட பல சந்தேக நபர்கள் மீது பொலிஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது

Published By: Digital Desk 4

29 May, 2022 | 10:34 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணை பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரம ரத்னவின் உத்தரவிற்கமைய (29) இவ்விசாரணைகள் சி.ஐ.டியிடம் கையளிக்கப்பட்டன. அதன்படி உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான சிறப்பு குழு ஒன்று அட்டுலுகம பகுதிக்கு சென்று விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரமின் பிரேத பரிசோதனை பாணந்துறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை சிறுமியின் தந்தை உள்ளடங்களாக சுமார் 30 வாக்குமூலங்கள் வரை பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாத்திமா ஆய்ஷா

பண்டாரகம அட்டுலுகம பிரதேசத்தில் பள்ளிவாசல் அருகில் வசித்து வந்த சிறுமியே பாத்திமா ஆய்ஷா அக்ரம் ஆவார்.

மூத்த சகோதரர்கள் இருவர் மற்றும் இரு மாதங்களேயான இளைய சகோதரர் ஒருவர் உள்ளடங்கிய குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளையாக பாத்திமா ஆய்ஷா இருந்தார்.

9 வயதான பாத்திமா  ஆய்ஷா அட்டுலுகம அல்-கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.

27ஆம் திகதி நடந்தது என்ன ?

கடந்த 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10 மணியளவில் சிறுமி ஆய்ஷாவிடம் அவரது தாய் பணம் கொடுத்து கோழி இறைச்சி வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

மதிய போசனத்தை தயார் செய்வதற்காக தாய்க்கு உதவும் நோக்கில் ஆய்ஷா வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள மிகவும் பரீட்சயமான கோழி இறைச்சி கடைக்கு சென்றுள்ளார்.

அவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் கலவரமடைந்து அயலவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடலாயினர்.

எனினும் சிறுமி ஆய்ஷா தொடர்பில் எந்த தகவலும் அதுவரை கிடைக்காத நிலையில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் தமது மகள் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

'சேர் கோழி இறைச்சி கடைக்கு சென்ற எனது மகளை காணவில்லை,எனது மகளை தேடித்தாருங்கள்' என இதன்போது  சிறுமி ஆய்ஷாவின் தாய் பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் அழுது மன்றாடியுள்ளார்.

இந்நிலையில் விடயத்தின் பாரதூரம் தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர் சரத் குமாரவிற்கு விடயம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டாரகம பொலிஸ் நிலைய குழுவிற்கு மேலதிகமாக,களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளும் விசாரணைகளில் இணைந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் தாயார், தந்தை, மற்றும் கோழி இறைச்சி கடை வர்த்தகரிடம் ஆரம்பத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே தற்போது 30 இற்கும் அதிகமான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோழி இறைச்சிக்கடை வர்த்தகரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் சிறுமி ஆய்ஷா கோழிக்கடைக்கு வந்து இறைச்சி கொள்வனவு செய்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோழி இறைச்சி கடைக்கு அருகே உள்ள சி.சி.டி.வி கெமராவை பொலிஸார் பரீட்சித்துள்ளனர். அதில் சிறுமி இறைச்சியை வாங்கிய பின்னர் அங்கிருந்து திரும்புவது பதிவாகியிருந்தது.

அதேபோல் அச்சந்தர்ப்பத்தில் அப்பாதையால் பயணித்த வேன் ஒன்று தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பியிருந்த போதும், அந்த வேன் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் பிலியந்தலை பகுதியை சேர்ந்தது என பின்னர் தெரிய வந்தது.

இதனைவிட கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் சிறுமியின் தந்தை மீதும் பொலிஸாரின் அவதானம் திரும்பியுள்ளது.

சிறுமியின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கூறப்படும் நிலையில் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு நேற்று முன்தினம் இரவு (27) சுமார் 5 மணிநேரம் வரை பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக உயர் பொலிஸார் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக விசாரணைகளின் போது சிறுமி ஆய்ஷா புறக்கோட்டை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்திருந்த நிலையில் புறக்கோட்டை,டேம் வீதி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டு,தேடுதல்கள் நடத்தப்பட்டன, எனினும் அதில் எவ்வித வெளிப்படுத்தலும் வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு விசாரணைகள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பண்டாரகம பொலிஸாரும், பிரதேசவாதிகளும் இணைந்து  சனிக்கிழமை (28) அட்டுலுகம பிரதேசம் முழுவதும் சோதனை நடவடிக்கையினை ஆரம்பித்தனர்.

சிறுமி ஆய்ஷாவின் வீட்டுக்கும், கோழி இறைச்சி கடைக்கும் இடைப்பட்ட 200 மீற்றர் தூரத்தில் சிறுமியின் வீட்டு பகுதியில் இருந்து கோழி கடையை நோக்கிய 150 மீற்றர் வரையான பகுதியில் எந்த சி.சி.சி.டி.வி கெமராக்களும் இல்லாத நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி சிறுமி ஆய்ஷா வசித்த வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து சிறுமியின் சடலம் நேற்று மாலை வேளையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், சிறுமி காணாமல் போன தினத்தன்றும் தேடுதல்கள் நடாத்தப்பட்ட போதும் அப்போது எந்த சான்றுகளும் கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சிறுமியை கடத்தியவர் அல்லது கடத்திய குழு சிறுமியை கொலை செய்து அவ்விடத்தில் சடலத்தை கைவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு ஹொரன நீதிவான் வருகை தந்து நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துடன், பிரேத பரிசோதனைக்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

சிறுமி ஆய்ஷாவின் கொலை தொடர்பில் நெருங்கிய உறவினர்கள் சிலர் உட்பட பல சந்தேக நபர்களின் மீது பொலிஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளதுடன், அது தொடர்பில் அறிவியல் ரீதியிலான சான்றுகளை பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் எதிர்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அந்த வட்டத்திற்குள் மட்டும் விசாரணைகள் மட்டுப்படுத்தப்படவில்லை என தெரிவித்த அவர் சி.ஐ.டி சிறப்பு குழு தற்போதும் பல்கோண விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார். 29 ஆம் திகதி மாலை 6 மணியாகும் போதும் இந்த படுகொலை தொடர்பில் எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31