உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில் இலங்கை

Published By: Digital Desk 5

29 May, 2022 | 08:28 PM
image

ரொபட்  அன்டனி 

உலகில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சி,  விநியோகக் கட்டமைப்பில் பாதிப்பு என்பன  உலகில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமையும் இலங்கையில் தாக்கத்தை செலுத்தலாம் என்பதுடன்  இலங்கையில் டொலர் நெருக்கடி மற்றும்  கடந்த வருட இராசயண உரத்தடை என்பனவும்  உணவு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. எனவே  அதனை தடுக்க தற்போதே தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்  

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற  டொலர் பற்றாக்குறை மற்றும்  அதனால் ஏற்பட்டிருக்கின்ற  அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, அவற்றின் விலை உயர்வுகள்,  எரிபொருள் தட்டுப்பாடு,  , எரிவாயு தட்டுப்பாடு,  எரிபொருள் எரிவாயுவை  பெற்றுக்கொள்வதற்கான நீண்ட வரிசைகள்,  நீண்டநேர மின்வெட்டு,  மக்களின் விரக்தி நிலை,  போன்றவற்றுக்கு மத்தியில் மற்றும் ஒரு அபாயகரமான நிலை குறித்தும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளினாலும்  நிபுணர்களினாலும் எதிர்வு கூறப்பட்டு வருவதை காணமுடிகிறது.  

மிகமுக்கியமாக அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள   ரணில் விக்கிரமசிங்கவே நாட்டில் ஒரு உணவு நெருக்கடி ஆகஸ்ட் மாதமளவில் ஏற்படும் என்ற விடயத்தை வெளியிட்டு இருக்கின்றார். 

மக்களைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாகவே இருக்கின்றது.  தற்போது காணப்படுகின்ற இந்த நெருக்கடியையே மக்களினால் எதிர்கொள்ள முடியாத ஒரு நிலைமை நீடித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அதாவது இன்னும் இரண்டு மாதங்களில் எவ்வாறு மக்கள் இந்த உணவு நெருக்கடியை எதிர் கொள்ளப் போகின்றார்கள் என்பது ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கின்றது.  

சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ள  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் அதனை தடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று கடந்தவாரம்  பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை உணவு நெருக்கடியை எதிர் கொள்வதற்கான அபாயம் இருக்கின்றது, எனவே சகலரும் ஒன்றிணைந்து அதனை தடுக்க வேண்டும், தோட்டப் பயிர் செய்கையை  அதிகரிக்க வேண்டும் என்ற வகையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.  

அதுமட்டுமன்றி பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள்,  புத்திஜீவிகள்,  துறை சார்ந்தவர்கள் என சகலரும் இலங்கையில் இன்னும் சில மாதங்களில் ஒரு உணவு நெருக்கடி அல்லது உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக சுட்டிக் காட்டி வருவதை காணமுடிகிறது. 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

பொதுவாக உலகில் உணவுப் பஞ்சம் என்பது காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல நெருக்கடிகளினால்  ஏற்படும்.  

ஆனால் இலங்கையில் இந்த நெருக்கடியானது  வெறுமனே பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் பற்றாக்குறை போன்ற விடயங்களினால்   ஏற்படும் அபாயத்தை கொண்டிருக்கின்றது. 

இலங்கையை நிலையை பார்ப்பதற்கு முன்னர் உலக நிலையை  பார்க்கவேண்டியுள்ளது.  உலகளவில்  தற்போது கோதுமை மா உற்பத்தியும் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. 

உலகில் கோதுமை மாவை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா, அமெரிக்கா , ரஷ்யா, கனடா, உக்ரேன் போன்ற நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. 

இந்நாடுகளில் கோதுமை உற்பத்தி  குறைவடைந்து இருப்பதுடன் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   

இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கிறது.  உற்பத்தி வீழ்ச்சி காரணமாக இந்தியா தனது கோதுமை ஏற்றுமதியை தடை செய்திருக்கின்றது.  காரணம் அங்கு கோதுமை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   

இந்தியாவின் இந்த தீர்மானம் உலக நாடுகளில் ஒரு உணவு நெருக்கடி ஏற்பட காரணமாக அமையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை ஜப்பானை பொறுத்தவரையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஒருதொகை கோதுமையை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாப தெரிவிக்கப்படுகின்றது.  

அதனை ஜப்பான் வெளியே  எடுத்தால் உணவு நெருக்கடி  தாக்கத்தை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.   ஆனால் ஜப்பான் என்ன செய்யப் போகின்றது என்று தெரியவில்லை.

மேலும்  தற்போது உலக அளவில் கோதுமை மா  விநியோக கட்டமைப்பிலும்  ஒரு தாக்கம் ஏற்பட்டு இருக்கின்றது.  

ரஷ்யா உக்ரேன் யுத்தம் இதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.    ரஷ்யா உக்ரைன் போன்ற நாடுகளில்   கோதுமை உற்பத்தி குறையவில்லை.  ஆனால் அதன் விநியோக கட்டமைப்பில் தாக்கம் ஏற்படுகிறது.    

இதுவும் உணவு நெருக்கடி நிலைமைக்கு காரணமாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போது இலங்கையில் ஆகஸ்ட் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் என்று கூறப்படுவதை இந்த பின்னணியிலேயே பார்க்கவேண்டும்.    

இன்னும் 3 மாதங்களே காணப்படுகின்றன.  அதற்கு உடனடியாக சகலரும் தயாராக வேண்டும்.   அதாவது  இலங்கைக்கு உணவு பஞ்சம் ஏற்படுமாயின்   அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் காணப்படுகின்றன.  

அதாவது   டொலர் பற்றாக்குறை காரணமாக  உணவு  பொருட்களை முக்கியமாக கோதுமையை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.  

இது   உள்நாட்டில் உணவு நெருக்கடிக்கு காரணமாக அமையும்.  காரணம் இலங்கையில்  அரிசி பிரதான உணவு பொருளாக இருந்தாலும் கூட மா அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.  

அதனால் கோதுமை இறக்குமதி குறைந்தால் நிலைமை மோசமடையலாம்.  

இரண்டாவதாக கடந்தவருடம் இராசயண பசளை தடை காரணமாக கடந்த சிறுபோகத்தில் அறுவடை குறைவடைந்துள்ளது. 

இதனால் அரிசியை கூட இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. எனவே  அரிசி உற்பத்தி வீழ்ச்சி காரணமாக  உணவு நெருக்கடி ஏற்படலாம்.  

அத்துடன் ஏனைய விவசாய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.  கோதுமை மா இறக்குமதி குறைவடைந்தாலும் அதனை அரிசியினால் ஈடு செய்ய முடியாத நிலை நீடிக்கின்றது.  

அடுத்த பெரும்போகத்துக்கு  இராசயண உரப் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உரத்தின் விலை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே இதுவும் ஒரு காரணமாக அமையலாம். 

மூன்றாவதாக டொலர் பற்றாக்குறை காரணமாக  எரிபொருள் இறக்குமதி குறைவடையும். எனவே உள்நாட்டில்  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால்   விவசாய செய்கை பாதிக்கும். காரணம் அனைத்து துறைகளின் இயக்கமும் எரிபொருளிலேயே   தங்கியுள்ளன.  

இந்தநிலையில்  ஏற்படப் போவதாக கூறப்படுகின்ற  உணவு பஞ்சத்தை தடுப்பதற்கு தற்போது புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது மிக முக்கியமானதாக இருக்கின்றது.  

மக்கள் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.  பொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வுகள், எரிபொருளுக்கான எரிவாயுக்காண வரிசைகள்,  போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்களின் வருமானம் இழப்பு வருமானம் குறைவு தொழில் இழப்பு, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் பாதிப்பு என பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். 

வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.  

இந்தநிலையில் உணவு நெருக்கடியும் வரும்போது அது மேலும் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.  தற்போதைய சூழலில் இதுவரை பல பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும் சந்தையில் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படவில்லை.   

அரிசி கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள்  கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அரிசி மற்றும் கோதுமை ‍போன்ற பொருட்களுக்கு இன்னும் வரிசை ஏற்படவில்லை. 

அவ்வப்போது பால்மா உள்ளிட்ட ஒருசில பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுவருகிறது.  

ஆனால் உணவு பஞ்சம் ஏற்படும் போது கூடிய விலைக்கு கூட பொருட்டு உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலைமை ஏற்படும்.    

முக்கியமாக விவசாயம் மற்றும் ஏனைய தோட்டப் பயிர்ச் செய்கைகளும் அதிகரிக்கப்படவேண்டும்.  

பயிரிடாமல் இருக்கின்ற காணிகளை மக்களுக்கு பிரித்துக் கொடுத்து  விரைவாக விவசாய நடவடிக்கைகளையும் தோட்டப் பயிர்ச் செய்கைகளையும்   அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

அதற்கு தேவையான வளமாக்கிகள்,  கிருமி நாசினிகள்   மற்றும் உரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

அதே போன்று விவசாயத்துக்கான உள்ளீடுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  மேலும் எரிபொருளை சீராக   பெற்றுக்கொள்வது அவசியமாகும்.   

இவற்றைப் பெற்றுக் கொடுக்காவிடின்  உள்நாட்டில் தோட்ட செய்கை மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது கடினமாக அமைந்துவிடும்.     

எனினும் நாட்டில் டொலர் நெருக்கடி தீவிரடைந்‍தே செல்கிறது.  சுற்றுலாத்துறை காரணமாக டொலர் வருகை முடங்கியிருக்கிறது.  

அதேபோன்று வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள்  அனுப்புகின்ற டொலர்களின் அளவு குறைவடைந்து இருக்கின்றது.  

அவற்றை மீண்டும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். 

எவ்வாறு ஏற்றுமதி உற்பத்திகளை அதிகரித்து  அதனூடாக டொலர் வருமானத்தை பெற முடியும் என்று மதிப்பிடுவது இன்றியமையாதது.  

அத்துடன் அத்தியாவசியமற்ற  இறக்குமதி பொருட்களை குறைத்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவது மிக அவசியமாகும்.  

மேலும் இலங்கை தற்போது51 பில்லியன் டொலர் கடனில் சிக்கியுள்ளது.  எனவே அதனை மீள் செலுத்துவதில்  அரசாங்கம் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.   

சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் நாடியிருக்கின்றது.  இன்னும் நான்கு மாத காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம்  இருந்து இலங்கைக்கு 4 பில்லியன் அல்லது மூன்று பில்லியன் டொலர் கடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

ஆனால் அதுவரை இலங்கையின் நிலைமைகளை சமாளிக்க வேண்டும்.  எரிபொருள், மருந்து பொருட்கள் எரிவாயு போன்ற பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியிருக்கின்றது.  

அவற்றிற்காக இலங்கை தற்போது சீனா ஜப்பான் இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.  

அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டியது அவசியமாகும்.  அதனூடாக இருதரப்பு கடன்களைப் பெற்றுக் கொண்டால் இந்த நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்த முடியும். 

பொருளாதார நிபுணர்கள்  உணவுப் பஞ்சம்,  உணவு நெருக்கடி தொடர்பான விடயங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.   

இது மக்களை பொறுத்தவரையில் மிகவும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகவே இருக்கின்றது.  மக்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை எனவே மக்களின் பிரதிநிதிகள் இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற தரப்பினருக்கு இந்த விடயத்தில் மிகப்பெரிய ஒரு பொறுப்பு இருக்கின்றது அது போன்ற ஒரு நெருக்கடி நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்று விடாமல் சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தி விரைவாக நிலைமையை கட்டுப்படுத்த மக்கள் ஆறுதல் பெரு மூச்சு விடுவதற்கு இடம் அளிக்க வேண்டியது அவசியமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04