கண்ணைக் கவரும் “கல்பெலியா” நடனம்

Published By: Digital Desk 5

27 May, 2022 | 08:22 PM
image

வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் கலாச்சார ரீதியாக செறிவான மாநிலம் என குறிப்பிடலாம். இங்குள்ள பழங்குடியின மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணி பாதுகாத்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டம், அஜ்மீர், சித்தோர்கர் மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் கல்பெலிய எனும் பழங்குடி இன மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் கல்பெலிய நடனம் என்ற பாரம்பரிய நாட்டுப்புற நாட்டியம் இன்று உலகளவில் புகழ் பெற்றிருக்கிறது. இதன் தொன்மையையும், வரலாற்றையும் அறிந்த யுனெஸ்கோ நிறுவனம் 2010ஆம் ஆண்டில் 'பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய நாட்டுப்புற கலை' என இந்த கல்பெலிய நாட்டியக் கலையை அறிவித்தது.

கல்பெலிய பழங்குடியின மக்கள் பாம்பு பிடிப்பதை தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள். வயல் வெளியில் விவசாயிகளுக்கு உதவியாக பாடுபடும் இவ்வின பெண்கள் ஆண்டுதோறும் வழக்கம்போல் நடைபெறும் கொண்டாட்டங்களில் கல்பெலிய நாட்டியத்தை ஆடுகிறார்கள்.

இவர்கள் தங்களின் நடனத்தில் பாம்பை முதன்மையான பகுதியாக இணைத்து நடனமாடுகிறார்கள். இவர்களின் நடனத்தில் பாம்பின் வேகமான அசைவுகள் இடம்பெறுவதால் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் கவர்கிறது.

மக்களின் வாழ்விடங்களில் திடீரென குடியேறும் அல்லது பேரிடர் காலங்களில் வந்தேறும் பாம்புகளை பிடிப்பதற்காக இவர்கள் பாரம்பரியமாக முக்கிய எனும் இசைக்கருவி ஒன்றை இசைக்கிறார்கள்.

புங்கி எனப்படும் துளை இசைக்கருவி, டூஃப்ளி, பீண், கஞ்சாரி, மோர்சிங், குராலியோ மற்றும் டோலக் ஆகிய இசைக்கருவிகளை இத்தகைய நாட்டிய நிகழ்ச்சியின் போது ஆண் கலைஞர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆண் கலைஞர்கள் இசைக்கருவியை வாசிக்க, பெண் கலைஞர்கள் மட்டும் நாட்டியமாடுகிறார்கள். நாட்டியமாடும் பெண் கலைஞர்கள் அனைவரும் பாரம்பரிய ஆடை அணிகலனை அணிந்து கொள்கிறார்கள்.

அங்கிராகி எனப்படும் மேலாடை, ஓதானி எனப்படும் தலையணி, லெஹங்கா எனப்படும் ஆடையையும் அணிகிறார்கள். இவை அனைத்திலும் கண்ணாடி பதித்து எம்பிராய்டரி செய்யப்பட்டவையாகவும், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்தவைகளாகவும் அமைந்திருக்கின்றன.

அத்துடன் நடன கலைஞர்கள் பிரத்யேகமாக டாட்டூ எனப்படும் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்கள். இனிமையாகவும், நளினமாகவும், மென்மையாகவும் தொடங்கும் இந்த நாட்டியம், நேரம் செல்ல செல்ல அதிவேக தாளலயத்துடன் தொடர்வதால்... அதற்கேற்ப பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக சுழன்று சுழன்று நாட்டியமாடுகிறார்கள். இதனை காணும்பொழுது பார்வையாளர்களின் மனதை வியப்பில் ஆழ்த்துகிறது.

அவர்களின் பாடல்களில் பெரும்பாலானவை புராணங்களிலிருந்தும், நாட்டார் கதைப் பாடல்களிலிருந்தும் செவி வழியாக கேட்கப்பட்ட செய்திகளையும், நீதிகளையும் மையப்படுத்தியே அமைந்திருக்கிறது.

இதன்போது இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொரு குழுவிற்கும் பிரத்யேகமாக அமைந்திருக்கிறது. இவற்றிற்கான எழுத்து வடிவம் இல்லாததால் கலைஞர்கள் தங்களின் கற்பனையான இடைச்செருகல்களுடன் அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கற்பிக்கிறார்கள்.

நாட்டிய வடிவத்தை பொருத்தவரை பெண்மணிகள் தங்களுடைய பெண் வாரிசுகளுக்கு மட்டுமே இதனை கற்பிக்கிறார்கள்.

இது தொடர்பாக கல்பெலிய நடனமாடும் பெண்மணி ஒருவர் பேசுகையில், '' பல நூற்றாண்டுகளாக தொடரும் எங்களுடைய பாரம்பரிய கல்பெலிய நடனத்தை 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு பொதுவெளியில் பாரம்பரிய நாட்டுப்புற நாட்டியக்கலையாக அடையாளப்படுத்தப்பட்டு, பரவலாக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் எங்களுடைய பாரம்பரிய கலையை பாதுகாக்கப்பட வேண்டிய கலை என அறிவித்த பிறகு, இந்த கலைக்கான பார்வையாளர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அதிகரித்து வருகிறார்கள்.

பெண்மணிகள் தங்களுடைய பெண் வாரிசுகளுக்கு மட்டும் இதனை கற்பிப்பதால், இதனை தனியாக எந்த இன பெண்களும் கற்க இயலாது.

இதன் காரணமாக இந்த கலையை கற்கும் நடன பெண்கள் குறைவாகவே தான் இருக்கிறார்கள். இருப்பினும் பாரம்பரிய நாட்டிய கலையான கல்பெலிய நடன கலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

இதனை பிரபலப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் அனுசரணையும், கலாச்சார மையங்களின் அனுசரணையும் தற்போது கிடைத்து வருகிறது. '' என்றார்.

அண்மையில் சென்னையில் உள்ள தட்சண சித்ரா கலைக்கூடத்தில் கல்பெலிய நடன கலைஞர்கள் பங்குபற்றிய நாட்டியம் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபலமான கைரி, கச்சி கூடி, கூமர் மற்றும் பாவாய் போன்ற பாரம்பரிய நாட்டுப்புற கலைகளுக்கு நிகராக இந்த கல்பெலிய நாட்டியமும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

கும்பகோணத்தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right