(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவ படகுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் அத்துமீறும் இந்திய மீனவரை கைது செய்வோம். அத்துடன் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்தோனேசியா, சீன, ஜப்பான் கப்பல்களுக்கும் இடமளிக்கப்போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள ஒழுங்கு விதிகள் அதிகரிப்பது தொடர்பான சட்டமூலத்தில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்களை கைது செய்து நூறுக்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக் க்காமல் அரசுடைமை ஆக்கியுள்ளோம். 

இதன் பிரகாரம் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதற்கு ஒருபோதும் நாம் அனுமதி வழங்கமாட்டோம். இந்த தீர்மானத்தில் உறுதியுடன் இருக்கின்றோம். அதனையும் மீறி அத்துமீறி மீன்பிடிப்பவர்களைக் கைது செய்வோம். 

அத்துடன் எமது கடற்பரப்புக்குள் சீனா, இந்தோனேசியா, ஜப்பான் உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக் கப்பல்களுக்கும் மீன்பிடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம். 

அதேவேளை கற்பிட்டி மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வினை வழங்க நாம் தயாராக உள்ளோம். ஆனாலும் வீதிகளை மறித்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க நான் தயாரில்லை. 

அதற்கு மாறாக நான் எனது பதவியை இராஜினாமா செய்வேன் எனினும் இது தொடர்பில் முக்கிய பேச்சு வார்த்தை நாளை நடைபெறும் என்றார்.