(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

சீ.எஸ்.என். நிறுவனமானது ஊடக நிபந்தனைகளை மீறியுள்ளதன் காரணமாகவே  அந்நிறுவனத்துக்கான உரிமம் சட்டரீதியாக மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த உரிமம் மீளவும் கையளிக்கப்படமாட்டாது என ஊடகத்துறை  பாராளுமன்ற மறுசீரமைப்புஅமைச்சர் கயந்த கருணாதிலக்க சபையில் உறுதிபடத்தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டடில் விசேட வினாவை முன்வைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்த்தன, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில்  பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இந்தநிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய நிதிமோசடி குற்றப்பிரிவினால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்காமல் நிறுவனத்தின் விலாசத்தை மாற்ற முடியாது. இந்தநிறுவனம் அந்த நிபந்தனையை மீறியுள்ளது. நிறுவனத்தின் வருடாந்த கணக்கு வழக்கை நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு முன்னர் கையளித்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையும் இந்த நிறுவனம் மீறியுள்ளது ஆகவே அதற்கான உரிமம் மீண்டும் கையளிக்க முடியாது என்றார்.